இலங்கை

குமாரபுரம் மக்கள் மீது கொடூரமாகத் தாக்குதல்; குகதாசன் எம்.பி. கடும் கண்டனம் 

குமாரபுரம் கிராம மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சுத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள்மீது பாராபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் நேற்றுமுன் தினம் (24) காலை இடம்பெற்ற வீதி விபத்தின் காரணமாக பூமரத்தடிச்சேனை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், குமாரபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காயமடைந்தார்கள்.

இதன் பின்னர் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஆயுதங்களுடன் வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று குமாரபுரம் கிராமத்தினுள் நுழைந்து அங்கிருந்த அப்பாவி மக்கள் மீதும் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இச் சம்பவமானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். இது இன வன்முறைக்கு வித்திடுவதாக அமையும் எனவே இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்மீது நடவடிக்கை எடுத்து அவர்களை தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாக்க வேண்டாம்.

குமாரபுரம் கிராம மக்கள் கடந்தகாலத்திலும் பல கசப்பான சம்பவங்களுக்கு முகம்கொடுத்துள்ளார்கள். எனவே இந்த மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நேற்று முன் தினம் (24) சம்பவத்தின் பின்னர் அக்கிராம மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றார்கள். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுப்பதோடு இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *