இலங்கை

வரவு செலவுத் திட்டம் மூலம் தமிழருக்கு பிச்சை போடுகின்றீர்களா?

தேசிய மக்கள் சக்தி அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முதலில் வரவேற்ற சுயேச்சைக் குழு 17 இந்த தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான இ.அர்ச்சுனா அதன்பின்னர் தனது உரையில் வடக்கு,கிழக்கிற்கு அரசு ஒதுக்கிய நிதிகள் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் அரசையும் வரவு செலவுத்திட்டத்தையும் கடுமையாக சாடியதுடன் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்குங்கள். வெளிநாடுகளிலுள்ள எமது சகோதர்கள் மூலம் நாங்கள் உங்களுக்கு பிச்சை போடுகின்றோம் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கடுமையாக சாடிய அவர் மேலும் பேசுகையில்,

இங்கு சிலர் தமிழீழம் வேண்டும் என்கின்றனர்.சிங்களவர்களோ ஒரே நாட்டில் ஒன்றாக வாழ்வோம் என்கின்றனர். நாட்டைப் பிரிக்க வேண்டும் என எந்தவொரு தமிழனும் கேட்கவில்லை.

வடக்கிற்கு ஏதோ பெரிதாக ஒதுக்கி விட்டதாகக் கூறுகின்றீர்கள். யாழ் நூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளீர்கள். இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.0076வீதம். பிச்சை போடுவதுபோன்று யாழ் நூலகத்திற்கு ஒதுக்கியுள்ளீர்கள். பரவாயில்லை அடுத்ததைப் பார்ப்போம் வடக்கு வீதிகள் அபிவிருத்திக்கென 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளீர்கள். இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.38 வீதம் .இதுவும் ஒரு பிச்சை. தமிழனுக்கு நீங்கள் போட்ட பிச்சை .

அதையும் விடுவோம்.வடக்கு கிழக்கில் 35 ஆண்டுகள் பெரும் போர் நடந்தது. அந்தப் போரில் நான் உட்பட எனது சமூகம் கட்டிய வீடுகளைகூட இழந்தது. ஆனால் வடக்கு,கிழக்கில் வீடுகளை புனரமைக்க நீங்கள் தந்தது 1500 மில்லியன். இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில்0.01 வீதம் எமது வீடுகளை இடித்து எமது காணிகளைப் பிடித்து எங்களில் 45000 பேரை கொலைசெய்துவிட்டு நீங்கள் எங்களுக்கு போடும் பிச்சையே இது.

இன்னொரு விடயத்தையும் கூறுகின்றேன் .வட்டுவாகல் பாலம் அமைக்க 1000 மில்லியன் ரூபா தந்துள்ளதாக கதைக்கின்றீர்கள்.இது வரவு செலவுத்திட்ட மொத்த நிதி ஒதுக்கீட்டில் 0.076 வீதம் .இந்தப்பிச்சைக்கும் நன்றி. சுகாதாரத் துறையிலாவது எங்களுக்கு ஏதாவது பிச்சை போட்டுள்ளீர்களா என்று பார்த்தால் மொத்தமாக 382 பில்லியன் ரூபா ஒதுக்கிவிட்டு வடக்கிற்கு நீங்கள் தந்திருப்பது 0.66 வீதம். உங்கள் பிச்சை எந்தளவுக்கு உள்ளது என்பதனை இதில் பார்த்துக்கொள்ளுங்கள். கிழக்கிற்கு நீங்கள் போட்டுள்ள பிச்சை 0.8.வீதம்.

தமிழர் பிச்சை எடுப்பதற்கு தயராக இல்லையென்பதனை உங்களுக்கு சொல்லுகின்றேன். எனது சகோதர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். முடிந்தால் நீங்கள் பி.ரி.ஐ எனப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் உங்களுக்கு பில்லியன் , ரில்லியன் கணக்கான பணத்தை கொண்டுவருகின்றோம். நாங்கள் உங்களுக்கு பிச்சை போடுகின்றோம்.

சீனாவிடமும் இந்தியாவிடமும் நீங்கள் பிச்சை எடுத்துவிட்டு அதில் எங்களுக்கு 0.01 வீதத்தை பிச்சை போடுவீர்கள். ஜனாதிபதி வந்து நாங்கள் வடக்கிற்கு பெரும் நிதி ஒதுக்கியுள்ளோம் என்று கூறுவாராம். இது பிச்சையிலும் பிச்சை.எடுப்பானாம் ஆண்டி பிச்சை.அதற்கு பிறகு போடுவானாம் ஒரு பிச்சை. இது ஒரு கேவலமான செயல்.

யாழ்ப்பாணத்தில் இண்டஸ்ரியல் பார்க் கட்டுகின்றீர்களாம். 3 இடங்களிலாம். அதில் 300 இருக்கின்றதாம். கைத்தொழில்துறைக்கு நீங்கள் மொத்தமாக ஒதுக்கிய மொத்த செலவீனத்தில் 1.54 வீதம். கே.கே.எஸ்.ஸை நாங்கள் கட்டுவோம். தமிழன் கட்டுகின்றான் கே.கே.எஸ்.ஸை .முடிந்தால் கே.கே.எஸ்.ஸை எங்களிடம் தாருங்கள்.நாங்கள் உங்களுக்கு சீமெந்து தருகின்றோம். வடக்கு,கிழக்கிலிருந்து நாங்கள் உங்களுக்கு எல்லாம் தந்தோம் .ஆனால் நீங்கள் எமது உத்திரங்களை எடுத்துவிட்டு இப்போது 0.00 அளவில் பிச்சை போடுகின்றீர்கள்.

இந்தப்பிச்சைதான் உங்களின் பட்ஜெட்.அதற்காகத்தான் நாம் வாக்களித்தோம். எனது தமிழ் மண் பிழையாகப்போட்ட 3 பேருக்கான வாக்குகளினால் பேப்பர்கூட வாசிக்கத்தெரியாத எம்.பி.மார்கள் வந்துள்ளார்கள்.ஏனெனில் 13 இல் அநுரகுமார திசாநாயக்க எங்களுக்கு ஏதாவது செய்வார் என்று எமது மக்கள் வைத்த நம்பிக்கை.

நான் சிங்களர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இங்கு என்னை எதிரியாகவே பார்த்தார்கள். அரசுக்கும் எதிர்கட்சிக்குமான சண்டையில் நாங்கள்தான் அவதிப்படுகின்றோம்.யாழ்மாவட்ட அரச அதிபரின் மகன் அரச வாகனத்தை கொண்டுபோய் மோதி உடைத்துள்ளார். இந்நிலையில் அரச அதிபர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதியில் 56 மொல்லியன் ரூபாவில் 35 மில்லியன் ரூபாவை எடுக்கப்போகின்றாராம். அப்படியானால் நாங்கள் என்ன தேங்காய்களா?அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி கூறினார். இப்போது நீதி அமைச்சர் அரசியல் கைதிகள் இல்லை இருந்தால் பட்டயளித்தாருங்கள் என்று கேட்கின்றார். கேவலம்.

எமது தீவகத்தில் குடிப்பதற்கு நீரின்றி எமது சமூகம் இறந்து கொண்டிருக்கின்றது .நீந்கள் தெற்கிற்கு 61234 மில்லியனை நீர் வழ ங்கலுக்கு ஒதுக்கியுள்ளீர்கள் அதனை விட மேலதிகமாகவும் 20000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளீர்கள். ஆனால் வடக்கிற்கு தண்ணீர் இல்லை. உங்களுக்கு எமது மக்களின் வலிகள் தெரியாது

தலதாமாளி க்கு குண்டுவைத்த ரோஹண விஜேவீர பயங்கரவாதியல்ல. பிரபாகரன் பயங்கரவாதி. இதுதான் உங்கள் சிந்தனை. உங்கள் கிளீன் ஸ்ரீலங்காவில் ஒரு தமிழன்,முஸ்லிம் இருக்கின்றார்களா? என்று சரமாரியாக அரசையும் விமர்சித்தவாறு தனது உரையை தொடர்ந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *