பல விடயங்களை மூடி மறைத்து இடதுசாரி முலாம் பூசிய வலதுசாரி பட்ஜெட்டே இது

இடதுசாரி முலாம் பூசப்பட்டு பல விடயங்களை மூடி மறைத்து தயாரிக்கப்பட்ட வலதுசாரி வரவு செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது இடதுசாரி தங்க முலாம் பூசப்பட்ட வலதுசாரி வரவு செலவுத் திட்டமே இது. இதில் பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. விற்பனை என்ற வசனத்திற்கு பதிலாக அபிலாசைகளை கோருதல் என்ற வசனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
இதேவேளை அரச ஊழியர்களின் சம்பள உயர்வு விடயத்தில் 2500 ரூபா மற்றும் 5000 ரூபா கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டு 8250 ரூபாவே எஞ்சியுள்ளது. இந்த தொகை மட்டுமே 3 வருடங்களில் கிடைக்கவுள்ளது. 30 வீத கொடுப்பனவும் கிடைக்கும். இதன்படி இந்த வருடத்தில் 5975 ரூபாவே கிடைக்கவுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சம்பளம் கிடைக்கும் போதே சம்பள விடயத்தில் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதனை அரச ஊழியர்கள் புரிந்துகொள்வர்.
தேர்தல் காலத்தில் கூறியதை போன்று வரிகள் வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்படவில்லை. எரிபொருள் வரிகளும் குறைக்கப்படவில்லை. இதன்படி சாதாரண மக்களுக்கு எதுவும் கிடைக்காத வரவு செலவுத் திட்டமே இது. பொருளாதார ஸ்தீரமற்ற நிலைமை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. கடன் சுமையும் அதிகரிக்கும். 7.3 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளனர். கடன் பெறாமல் செய்வதாக கூறியவர்கள் கடனை பெறுகின்றனர். இதன்படி மக்களை ஏமாற்றிய வரவு செலவுத் திட்டமே இது என்றார்.
![]()