இலங்கை

பிரிட்டன் தூதுவருடன் முன்னாள் எம்.பி சுமந்திரன் பேச்சு!

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை  செவ்வாய்க்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் இந்தப் பேச்சுகள் நீடித்தன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிகின்றது.

பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக்கின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது நாட்டின் சமகால அரசியல் நிலைவரம், அரசின் நடவடிக்கைகள், தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள், வரவு – செலவுத் திட்ட யோசனைகளின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கின்றது.

இந்நிலையில், அந்தத் தீர்மானத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட ஆணையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையின் தற்போதைய நிலைவரம் மற்றும் அதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவு செய்வதற்கான சாத்தியப்பாடு என்பன பற்றி உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் சுமந்திரன் கேட்டறிந்தார்.

வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஜெனிவா அமர்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்குபற்றி உரையாற்றவிருக்கின்றார். அந்த உரையின் பின்னர் இலங்கை விடயத்தை ஜெனிவாவில் கையாளும் முறைமை குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியும் என்று பிரிட்டிஷ் தூதுவர் தெரிவித்தார்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான இணை அனுசரணை நாடுகளின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *