இலங்கை

சிங்கள உத்தியோகஸ்தர் அடாவடித்தனம்; தமிழ் இளைஞன் கொடூரமாகத் தாக்கப்பட்டு நாய்களை விட்டு கடிக்க வைக்கப்பட்டுள்ளார்

உடுகம ஹோமாதொல தோட்டத்தில் தமிழ் இளைஞன் சிங்கள தோட்ட உத்தியோகஸ்தரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு நாய்களை விட்டு கடிக்க வைக்கப்பட்டுள்ளார். இதனை எம்மால் பார்த்துக் கொண்டிக்க முடியாது. தமிழ் இளைஞன் சிங்கள உத்தியோகஸ்தரை இவ்வாறு தாக்கியிருந்தால் இனக் கலவரம் ஏற்பட்டிருக்கும் .எனவே விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், எம்.பி.யுமான மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரை வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகள் ( விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறுத்தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வட்டவல பெருந்தோட்டத்துக்குரிய உடுகம ஹோமாதொல தோட்டத்தில் காபில் பிரிவில் சேவையாற்றும் காமினி கிங்ஸ்லி என்ற தோட்ட உத்தியோகஸ்தர் கொடூரமான வகையில் அத்தோட்ட பகுதியில் லயன் அறையில் வாழும் தமிழ் இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது .இதனை இனவாத வைரஸ் என்றே கூற வேண்டும்.

தமிழ் இளைஞனை நிலத்தில் வீழ்த்தி, நாய்களை கடிப்பதற்கு ஏவி விடுகிறார் . ஒரு தரப்பினர் சுற்றியிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.பிரச்சினை என்னவென்று தெரியாது, யார் தவறிழைத்தார்கள் என்பதும் தெரியாது.இதனை பொலிஸார் பார்க்க வேண்டும்.
ஒரு இளைஞனை நிலத்தில் தள்ளி நாய்களை கடிப்பதற்கு ஏவி விடுவது முற்றிலும் தவறு. இதனை என்னால் பார்க்க முடியவில்லை. தெற்கில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு தான் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

தெற்கு பகுதியில் பெண்களை அவமானப்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.இதனை தேடிப்பாருங்கள். ஹோமாதொல தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளை முன்னிலைப்படுத்துங்கள்.இந்த சம்பவம் தொடர்பான காணொளியை பார்த்து எனது மனைவி கண்ணீர் விட்டு அழுதார்.

நிலத்தில் தள்ளப்பட்டது தமிழ் இளைஞன், அவரை தள்ளிட்ட கிங்ஸ்லி என்பர் சிங்களவர் இருவரும் இலங்கையர்கள். இந்த சம்பவம் மாறி நடந்திருந்தால் இனக் கலவரம் ஏற்பட்டிருக்கும் ஆகவே இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துங்கள்
என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *