இலங்கை

உள்ளூராட்சித் தேர்தலில் யானையில் ரணில் களமிறங்குவார்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இழுபறியடைந்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தின் கீழ் பல உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அவர்கள் இந்த முடிவை எட்டியதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

அதன்படி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் யானை சின்னத்தின் கீழ் 04 மாநகர சபைகளுக்குப் போட்டியிட முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுக்கு பெரும்பான்மை ஒப்புதல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கொழும்பு, கண்டி, காலி மற்றும் நுவரெலியா நகரசபைகளுக்கு யானை சின்னத்தின் கீழ் போட்டியிட அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான இந்த நான்கு மாநகர சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடுவது மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தனி சின்னத்தின் கீழ் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 20 ஆம் திகதிக்கு முன்னர் இது குறித்து இறுதி முடிவு எடுக்க செயற்குழு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள போதும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.

எனினும் இறுதி சந்திப்பின் போது, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஹரின் பெர்னாண்டோ கலந்து கொண்டமையால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் சர்ச்சைகள் நிலவியது. இதனால் ஐக்கிய தேசியக்கட்சியுடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உத்தரவிட்டிருந்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *