இலங்கை

சத்தியலிங்கம் பதவி விலகினார் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளராக சுமந்திரன்; சிறிதரன், சிறிநேசன் உட்பட மூவர் கடும் எதிர்ப்பு 

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் டாக்டர் சத்தியலிங்கம் பதவி விலகிய நிலையில் துணைப் பொதுச் செயலாளரான எம்.ஏ .சுமந்திரன் பதில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது

களுவாஞ்சிகுடியில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இந்த மத்தியகுழு கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன்,இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், க. கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன்உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது மறைந்த தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பதில் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் தெரிவித்தார்.

மத்திய குழு கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் டாக்டர் சத்தியலிங்கம் தான் பதில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் அடுத்த நிலையில் துணை பொதுச் செயலாளராகவிருந்த தான் நியமிக்கப்பட்டதாகவும் இந்த நியமனத்தினை மூவர் ஆதரவளிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் இந்த செயலாளர் நியமனத்திற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்,சிறிநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர்கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பதில் செயலாளராக சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *