முகநூல்

“மாவை. நித்தியானந்தனின் சிலப்பதிகாரம்”

 யாழ். மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர். தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி, யூனியன் கல்லூரி ஆகியவற்றின் பழையமாணவர். பேராதனை பல்கலைக்கழகத்தில் தன் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்.

நீண்ட கால, சமூக செயற்பாட்டாளர். அவுஸ்திரேலியாவில் பாரதி பள்ளி என்ற தமிழ் பாடசாலையை நிறுவி 30ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட இயக்கி வருகிறார்.

எழுபதுகளின் பிற்பகுதியில் இலங்கையில் குடாநாடெங்கும் மேடையேறிய ‘திருவிழா’
அரசியல் விழிப்புணர்வூட்டிய முக்கிய நாடகத்தை மேடையேற்றியவர். தொடர்ந்தும் நாடக செயற்பாட்டில் தீவிரமாக இயங்கிவரும் இவரது அண்மைய மேடையேற்றமான சிலப்பதிகாரம் உலகெங்கும் பலரது
கவனத்தையும் ஈர்த்தது.
இந்நாடகம் தொடர்பாக அவரை தொலைபேசியூடாக அணுகியபோது அவர் பகிர்ந்து கொண்டவை.

– சிலப்பதிகாரம் நாடகத்தை மெல்பெர்னில் மேடையேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏன் உங்களுக்கு வந்தது?

2024ம் ஆண்டில், பாரதி பள்ளிக்கு முப்பது ஆண்டுகள் நிறைந்தன. இதைப் பலவழிகளில் கொண்டாடினோம். இந்த 30 ஆண்டுகளிலும், வருடம் தவறாமல் மாணவர்களின் நாடகங்களைத் தரமான முறையில் மேடையேற்றி வந்திருக்கிறோம். இவ்வாறு நாடக அனுபவத்தைப் பெற்றவர்களில் ஏராளமானவர்கள், இன்று பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களாகவும், பல்கலைக்கழகங்களில் மாணவர்களாகவும் உள்ளனர். அதுமட்டுமன்றி, பாரதி பள்ளியின் வளாகங்களில் நாடகத் துறை பற்றிய ஆர்வமும், உணர்வும் ஆழமாக வேரூன்றி விட்ட நிலையொன்றுள்ளது.இத்தகைய பின்னணியில், பாரதி பள்ளியின் முப்பதாண்டு நிறைவை, காத்திரமான ஒரு அரங்காற்றுகை மூலம் கொண்டாடுவது பொருத்தமெனக் கருதினோம். இதன் விளைவே, ‘சிலப்பதிகாரம்’.

ஒரு தமிழ்க் காவியத்தையோ, காப்பியத்தையோ மேடைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற விருப்பம் என்னகத்தே நீண்டகாலமாக இருந்தது. தமிழின்
முதன்மைக் காப்பியமான இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் இதற்கு எவ்வளவு பொருத்தமானது என்பதை விளக்கத் தேவையில்லை. அது ஒரு நாடக
இலக்கியமும் ஆகும். ஒரு அரங்காற்றுகைக்குத்
தேவையான  எல்லா அம்சங்களும் அதில் உள்ளன.

– சிலப்பதிகாரம் ஒரு காப்பியம். இதன் நாடக வடிவத்தை எங்கு பெற்றீர்கள்?

நாடகத்துக்கு அடிப்படையானது பிரதி அல்லது எழுத்துரு. பிரதி இருந்தால், தயாரிப்பைத் தொடங்கி விடலாம்.

சிலப்பதிகாரத்தை நாடகமாக எழுத வேண்டுமென்ற ஒரு விருப்பத்தை நான் கொண்டிருந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தின் மூலத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கியிருந்தேன். உரையாசிரியர்களின் வழி நடத்தலுடன் தான் இது சாத்தியப்பட்டது. கூடவே, நாடகம் எழுதுவதற்கான குறிப்புகளையும் எடுத்து வந்தேன். வெறும் கதையை வைத்துக் கொண்டு நாடகம் எழுதாமல், செழுமையான
இந்த இலக்கியத்தின் மூலத்தை வழிமொழிந்து (பின்பற்றி), முடிந்தளவுக்கு அதன் அழகை வெளிக்கொணரக்கூடிய வகையில் அமைக்க  வேண்டுமெனும் வேட்கை இருந்தது. மூலத்திலுள்ள தமிழைப் படித்து விளங்குவது எவருக்குமே கடினம். நாடகத்தை இலகு தமிழில் எழுத விரும்பினேன்.

இந்த வேலை, விரைந்து செய்யக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை. நிறைய நேரத்தை எடுத்தது. கனடா சென்ற போதும், இலங்கை சென்றபோதும் கூட, பெருமளவு நேரத்தை இதில்தான் செலவிட்டேன்! ஆயினும், நான் ‘பலசோலிக்காரன்’. இதனால்,  சிலவேளைகளில்,
வாரக் கணக்காகவும், மாதக் கணக்காகவும் நாடக வேலை படுத்துவிடும். இறுதியில் என்னைத் தட்டி எழுப்பியது, பாரதி பள்ளியின் முப்பதாண்டு நிறைவைக் கொண்டாட, நாடகத்துக்கான தேதி குறிக்கப்பட்டமையாகும்.

சிலப்பதிகாரக் கதையானது, கண்ணகி – கோவலன் கதையாக, கிராமங்களிலும், நகரங்களிலும்,
பாடசாலைகளிலும் அவ்வப்போது மேடையேறியே வந்துள்ளது. கூத்தாகவும் ஆடப்பட்டதே எனினும், இதனை வேறொரு உருவில் கொண்டுவர வேண்டுமென்பதே எனது முழுவிருப்பாக இருந்தது.

எழுத்துரு முற்றுப்பெற்ற போது, அது பாடல்களைக் கொண்டு தொடுத்த ஒரு மாலை போலவே ஆயிற்று. அகவற்பாவில் அமைந்த சில குறுகிய உரையாடல்களை விட, மிகுதி முழுவதையும் கூத்து மெட்டுகளிலான பாடல்களே நிரப்பின. பாடவும், ஆடவும் ஏற்றதாக இருந்ததால், பாரம்பரிய நாடக ஆற்றுகையாக அது அமையப் பெற்றது.

எழுத, எழுத நாடகம் வளர்ந்துகொண்டே போனமை இன்னொரு அனுபவம். வெட்டிச் சரிக்க மனம் வரவில்லை! 6 மணி நேரம் வரக்கூடியதை,
3 மணி நேரத்துக்குள் அடக்க முயன்றேன்;. கடைசியில், ஆற்றுகை இரண்டே முக்கால் மணி நேரத்தில் நின்றது.

– இந்தப் பிரமாண்டமான ஆற்றுகையை எப்படிச் சாத்தியமாக்கினீர்கள்?

நாடக அனுபவமுள்ள பாரதி பள்ளியின் பழைய மாணவர்களே இதற்கு உகந்தவர்கள் என்று பட்டது.  இவர்களுடன், இறுதியாண்டில் இருந்தவர்களையும் சேர்த்துக் கொண்டோம். ஆர்வமுள்ள இளைய ஆசிரியர் ஒருவரும் இணைந்தார். இரண்டு மாதங்கள் நாடகப் பயிற்சிப் பட்டறை நடந்தது. இந்தக் காலப் பகுதியில், தாமும் இணையப்போகிறோம் என்று கூறிக்கொண்டு பல புதியவர்களும் வந்தார்கள். பாத்திரங்களுக்கேற்ற நடிகர்களைத் தேர்வது சிரமமாக இருக்கவில்லை.

இதன் பின்னர், நான்குமாத கால ஒத்திகைக்கான நாட்களும், தேதிகளும் ஒழுங்காகக் குறிக்கப்பட்டன. ஆரம்பத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் நடந்த ஒத்திகைகள், பின்னர் வாரத்தின் எல்லா நாட்களிலும் நடந்தன. ஒத்திகை முடிய இரவு 11 மணிக்கு மேலாகும். எவரும் குறைப்பட்டதில்லை.

எல்லாம் திட்டமிட்டபடிதான் நடந்தது. தொடங்க முதலே, நன்கு திட்டங்களை வகுத்து, எல்லோருடைய சம்மதத்தையும் பெற்றுக்கொண்டது நன்றாகப் போயிற்று.

அருகருகே இருந்த இரண்டு மண்டபங்களில் சமாந்தரமாக ஒத்திகை நடக்கும். நெறியாள ரையும் என்னையும் தனியே விடாமல், பாரதி
பள்ளியின் பெற்றோர் பலர், கூட நின்று உதவினார்கள். சிலர் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்தார்கள்.

இசைப் பயிற்சி பெற்ற பாரதி பள்ளியின் பழைய மாணவர்கள் நால்வர், மிகத் திறமையாக
வாத்தியங்களை இசைத்தனர். கணீரென்ற
குரலில் சிறப்பாகப் பாடினார், சங்கீதப் புலமை பெற்ற எமது ஆசிரியை அனுராதா. பொருத்தமான ஆண் குரலை மெல்பெர்னில் கண்டுபிடிக்க முடியவில்லை. பாடுவதற்காக, சிட்னியிலிருந்து சிறீபாலன் வந்தார். கன்பெராவிலிருந்து சங்கீத ஆசிரியை
தமிழ்ச் செல்வியும்     வந்து    இணைந்து        கொண்டார்.

–  நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எவை? அவற்றை எவ்வாறு சந்தித்தீர்கள்?

நடிகர்களின் எண்ணிக்கை நாற்பத்தைந்தைத் தாண்டியது. ஒத்திகைகள், திருவிழாக்கள் போலக் காட்சியளித்தன. நடிகர்கள் தமக்குள் நெருங்கிய நண்பர்களாகினர்.  ஒழுங்காகக் கூடி மகிழ வாய்ப்புக் கிடைத்ததால், அவர்களிடையே உற்சாகம் கரைபுரண்டோடியது. சத்தத்தைக் கட்டுப்படுத்தச் சிலவேளைகளில் கடும் முயற்சி தேவைப்பட்டது!

இவ்வளவு பேரையும், ஒழுங்காக ஒத்திகை களுக்கு வரச் செய்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஒரு சவாலாக இருந்தாலும், அதில் வெற்றியடைந்தோமென்றே சொல்லலாம். சிலர் ஒரு மணி நேரம் பயணம் செய்து வரவேண்டியவர்களாகவும் இருந்தார்கள். ஒன்றுபட்டுச் செயற்படும் மனோநிலையை வளர்த்தெடுத்தோம். விதி முறைகளை வகுத்து, அவற்றில் கண்டிப்பாக இருந்தோம்.

நாடக ஒத்திகைகளைப் பற்றிய செய்தி எங்கும் பரவவே, நாடகத்தில் இடம் கிடைக்குமா எனக் கேட்டுப் புதிது புதிதாகப் பலர் வந்தனர். ஆர்வமாக வந்த அத்தனை பேரையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென்னும் விருப்பம் இருந்ததாயினும், முடியவில்லை.

எல்லோரிடமிருந்தும் கடும் உழைப்பு தேவைப்பட்டது. அர்ப்பணிப்பின் அவசியத்தைப்
பற்றி யாவருடனும் அடிக்கடி கலந்துரை யாடினோம். பெறுமதியான ஒன்றைப்
பெறவேண்டுமாயின், வேறெதையோ இழக்கத் தான் வேண்டுமென்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எல்லோருக்கும் இருந்தது.

மெல்பெர்ன், ஏனைய உலக நகரங்களைப் போலவே, துரித கதியில் இயங்குவது. இங்கு ‘ஒருவருக்கும் நேரமில்லை’. ஒவ்வொருவருக்கும், கல்வி, சங்கீதம், நாட்டியம், விளையாட்டு, ‘சாமத்தியச் சடங்கு’, அது இதென்று எந்த நேரமும் ஏதாவது இருக்கும். இவை எல்லாவற்றையும் கடந்து, நாடகத்துக்கு அதற்குரிய இடத்தை வழங்கவேண்டுமென்பதை ஒரு கடமையாகக் கருதவும் உணரவும் வைத்தோம். இல்லையெனில், இந்த முயற்சி கைகூடியிருக்காது.

ஆடையலங்காரங்களையும், மேடைப் பொருட்க
ளையும் செய்வது ஒரு பெரிய வேலையாக இருந்தது. சிலப்பதிகாரம் போன்ற ஒரு நாடகத்தின் இயல்பு அத்தகையதே. ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆயினும், பாரதி பள்ளிப் பெற்றோர் இருவர், முழு நேர உழைப்பாளிகள் போல இதில் உழைக்க முன்வந்தனர். நாடகத்தின் வெற்றிக்கும், அழகுக்கும் இவர்கள் செய்த பங்களிப்பு மிகப்
பெரியது.

மெல்பெர்னின் மிகச் சிறந்த அரங்குகளில் ஒன்றான ‘ட்ரம் தியேட்டரில்’ ஆற்றுகை நடைபெற
ஏற்பாடாயிற்று. மண்டபத்தை வெள்ளி, ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்குமாக (தயக்கத்துடன் தான்) பதிவு செய்து கொண்டோம். பெரிய செலவுடன்
கூடிய விடயம் இது எனினும், இவ்வளவு சிரமப்பட்டுத் தயாராகும் ஒரு நாடகத்தை ஒரேயொரு மேடையேற்றத்துடன் முடிப்பதென்பது, ஒரு
‘அநியாயம்’ போலப் பட்டது! விளம்பரப்படுத்தினோம். பின்னணியில், பாரதி பள்ளியின் பெற்றோர் குழுவொன்று பொறுப்பாக இருந்து செயற்பட்டது.

அடுத்து நடந்ததை ஒரு அதிசயமென்றே சொல்லிவிடலாம். எல்லா எதிர்பார்ப்புகளையும் மிஞ்சி, தாமாகவே முன்வந்து பெருந் தொகையானவர்கள் நுழைவுச் சீட்டுகளை வாங்கினார்கள். எவருக்கும் வலிந்து சீட்டுகளை விற்பதில்லை என்ற எங்கள் விருப்பமும் நிறைவேறிற்று. வெள்ளிக்கிழமை மண்டபம் நிரம்பி, விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஆசனங்கள் மட்டும் மீதியிருந்தன. ஆனால், (இரண்டு நாட்களின் பின்) ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த அடுத்த மேடையேற்றத்துக்கு, நிறைய ஆசனங்கள் விற்பனையாகாமல் இருந்தன. ஆனால், நாம் முன்னரே எதிர்பார்த்ததுபோல, முதல் மேடையேற்றம் முடிந்த மறு நாளே அவை யாவும் துரித கதியில் நிரம்பி விட்டன. அத்துடன், நிறையப் பேர், நாடகம் பார்க்க விரும்பியும் நுழைவுச் சீட்டுக் கிடைக்காத நிலையைச் சந்தித்தனர்.

–  மேடையேற்றத்தின் பின் உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது?

மேடையேற்றம் முடிந்ததும், ‘வாழ்க்கையில் விடுதலை கிடைத்ததுபோல’ இருந்தது! கூடவே, பெரியதோர் திருப்தியும் ஏற்பட்டது. நான் கடந்த 55 ஆண்டுகளாக, நாடகத் துறையில் ஈடுபட்டு வந்தவன். எனினும் இந்த அளவுக்கு உழைத்ததுமில்லை; களைத்ததுமில்லை!! வாழ்க்கையில் மற்றெல்லாம் நின்றுபோன மாதிரி… வயதும் ஏறி விட்டது. எனக்கு ஓரளவு பரவாயில்லை. நெறியாள்கை செய்த பகீரதிக்கு, குடும்பமே ஓடச் சிரமப்பட்டது. அலுவலகம்;, அது முடிய இரவிரவாக ஒத்திகை, பிள்ளைகள். இப்படி அவர் சிரமப்பட்டார். இதுபோல, இன்னும் பலர்.

ஆனால், எப்பொழுது ஆற்றுகை முடிந்ததோ, அப்பொழுதே எங்களுக்கு எல்லாம் மறந்தது (இது பொதுவாக நாடகர்களுக்குப் பழக்கப்பட்டதே.) இந்த நாடகம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்பது முன்னரே நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஆனால், இந்த அளவுக்கு ஒரு பேரலையாக எழுந்து, எல்லோர் மனங்களையும் அள்ளிச் சென்றமை, இதில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி சார்ந்த ஒரு அதிர்ச்சியைத் தந்தது. நாடகத்துறை ஆர்வலர்களும், தமிழார்வம் உள்ளவர்களும் மட்டுமன்றி, எல்லா விதமான பார்வையாளர்களும் வயது வேறுபாடின்றி ஈர்க்கப்பட்டமை, நாங்கள் எதிர்பாராதது தான். எமது மக்கள் நாடகத்துக்கு வரமாட்டார்கள் என்ற கருத்தையும் இது கேள்விக்குறி ஆக்கியது.

தொடர்ந்து வந்த வாரங்களில், மெல்பெர்னில் சிலப்பதிகாரம் ஒரு முக்கிய பேசுபொருள்
ஆயிற்று. தொலைபேசி அழைப்புகளின் போதும், ஆளை ஆள் சந்திக்கும் போதும், ஒன்றுகூடுமிடங்களிலும் நாடகம் பற்றிய அபிப்பிராயப் பரிமாற்றம் முதன்மையான ஒன்றாயிற்று. நாடகத்தைத் தவறவிட்ட பெருந்தொகையானோர், மற்றுமொரு மேடையேற்றத்தைப் பற்றிக் கேட்டனர். அவர்களின் தேவையும், எங்கள் விருப்பமும் ஒன்றேயாதலால், மூன்றாவது மேடையேற்றத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. மீண்டும், அதே மண்டபத்தையே பதிவு செய்திருக்கிறோம். நாடகம்
பார்த்த பலர், மீண்டும் பார்க்கச் சீட்டுகளை வாங்கி வைத்துள்ளனர். வற்புறுத்தி எவருக்கும் நுழைவுச் சீட்டு விற்கும் தேவை இல்லாத நிலை தொடர்கிறது.

இந்த அனுபவம், எமக்கு மட்டுமன்றி, பொதுவாக நாடகர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதே. வழக்கமாக மெல்பெர்னில் பெருந்தொகையான மக்கள் திரண்டு சென்று பார்க்கும் நிகழ்ச்சிகள், ‘சுப்பர் சிங்கர்’, இடி முழக்க வாத்தியங்கள் சகிதம், நடனமாடித் துள்ளுதல், கொன்னைத் தமிழில், விளங்காத ‘டமில்’ பாடுதல், சினிமாப் பாடல்களை அச்சொட்டாக மீள ஒப்புவித்தல் முதலான இன்னோரன்ன நிகழ்ச்சிகளே. பழைய மாணவர் சங்கங்கள் உட்பட, பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்றுவதாகச் சொல்லி இத் ‘தொண்டினையே’ உலக நகரங்களில் செய்து வருகிறார்கள். என் சிற்றறிவுக்குத் தெரிந்த அளவில்,
மகாஜனா ஒன்றே புறநடை.

குறைகூறுவதால் மட்டும் பயன் விளையாது. நாடகத்
துறையில் திறமையுள்ள பலர், பல நாடுகளில் அவ்வப்போது நல்ல நாடகங்களை மேடையேற்றியிருப்பது நம்பிக்கையூட்டும் ஒரு உண்மையே. (தொண்டு நிறுவனங்கள், இத்தகையோருக்கு உதவ முன்வருதல் வேண்டும்.) தொடர்ச்சியாக நல்ல நாடகங்களை நாம் மேடையேற்றுவோமாயின், ‘குப்பை நிகழ்ச்சிகளை’ நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவது குறையும் (‘குப்பை’ என்பதில் நகைச்சுவை எனக் கூறிக்கொண்டு தலையை நீட்டும், ஆழமற்றதும், மலினமானதுமான  ‘கோமாளி’ நாடகங்களும் அடக்கம்.)

இவையே எனது இன்றைய உணர்வுகள்!
o

‘வளர்’ இதழ் – 10 ல் வெளிவந்த பதிவு

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *