தேசிய மின் கட்டமைப்பில் பற்றாக்குறை அடுத்த வாரமும்மின்வெட்டு தொடரும்!

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக அடுத்த வாரமும் மின்வெட்டு தொடரும் நிலை காணப்படுவதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை மின்சார சபை 277 பில்லியன் ரூபாயை பெரும் லாபமாக ஈட்டியிருந்தாலும் பல மின் உற்பத்தி நிலையங்கள் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவில்லை எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் இதேபோன்ற மின்வெட்டு ஏற்பட்டதாகவும், அதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக தாம் பதவி வகித்த காலத்தில், 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட மின்வெட்டுக்கான காரணங்களைக் கண்டறிய மார்ச் 2022 இல் பொது விசாரணை நடத்தப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தப் பரிந்துரைகள் இலங்கை மின்சார சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், கடந்த மூன்று ஆண்டுகளில் அவை குறித்து எந்த கவனமும் செலுத்தப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை மின்சார சபை 277 பில்லியன் ரூபாயை பெரும் இலாபமாக ஈட்டியிருந்தாலும் 1,100 மெகாவோட் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் உட்பட ஏராளமான மின் உற்பத்தி நிலையங்கள் பல்வேறு காரணங்களுக்காக தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கெனியனில் இருந்து 30 மெகாவோட், பிராட்லேண்டில் இருந்து 17 மெகாவோட், லக்சபானவிலிருந்து 50 மெகாவோட், குக்குலே கங்கையிலிருந்து 37 மெகாவோட், உமா ஓயாவிலிருந்து 60 மெகாவோட் மற்றும் நோரோச்சோலை லக்விஜயவிலிருந்து 810 மெகாவோட் உட்பட 1,105 மெகாவோட் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படாததால், தவிர்க்க முடியாமல் மின்வெட்டு ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி நிலையங்களும் செயலிழந்துவிடும் என்றும் என்ன நடந்தது என்பதை சரியாகக் கண்டறிய குறைந்தது மூன்று நாட்கள் ஆகும் என்றும் அதை முழுமையாகச் செயல்படுத்த ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை ஆகும் என்றும் தெரிவித்தார்.
இந்த மின்வெட்டு முழு பொருளாதாரத்திற்கும் பில்லியன் கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் என்றும் செயலிழந்து போன மின் உற்பத்தி நிலையங்களை முறையாக நிர்வகிக்காவிட்டால், மின் நெருக்கடியை நிர்வகிப்பது சாத்தியமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
![]()