யாழ். மக்கள் தெரிவு செய்த 3 கத்தரித் தோட்ட வெருளிகள்; கூறுவது அர்ச்சுனா

எமது மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் 3 கத்தரித் தோட்ட வெருளிகளை யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்துவிட்டார்கள் இந்த 3 கத்தரித் தோட்ட வெருளிகளினால் யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை எனத் தெரிவித்த சுயேச்சைக் குழுவின் யாழ் மாவட்ட எம்.பி.யான இ.அர்ச்சுனா , யாழ்ப்பாணத்தில் பிறக்காத அமைச்சர் சந்திரசேகர், சண்டித்தனம் செய்து என்னை ஏதாவது செய்யலாமா என யோசிக்கலாம் .
44 ஆயிரம் போராளிகள் உயிர் கொடுத்த எங்களின் தேசியத் தலைவரின் வழியில் நின்ற என்னை வெருட்டலாம் என நினைப்பது மிகவும் நகைச் சுவையானது எனவும் கூறினார்
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,
நான் உரையாற்றும் போது அமைச்சர் சந்திரசேகர் இருப்பார் என நினைத்தேன். அவருக்கு தெளிவாக ஒன்றை சொல்கின்றேன் .நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன். தேசியத் தலைவன் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையை பார்த்து வளர்ந்தவன்.நாங்கள் சர்க்கஸ் கூடாரம் வைத்தாலும் அங்கு கழுதைகள், குதிரைகள் வந்த நின்றாலும் அவற்றுடன் சேர்ந்து படம் எடுப்பதற்கும் தயாராகத்தான் இருக்கின்றோம் .ஆனால் அவ்வாறான கழுதைகளை எங்களின் தலைவராக ஏற்றுகொள்ள யாழ் மண்ணில் பிறந்த எந்த தமிழரும் தயாரில்லை.
எமது இனத்தை காத்த ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக இன்று வரை போராடிக்கொண்டிருக்கின்றோம். அவரின் குழந்தைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த அரசு கூட அவரை விடுதலை செய்யவில்லை. முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்த இராணுவத்தை பாதுகாக்கும் நிலைமைக்குத்தான் தேசிய மக்கள் சக்தி அரசு போயுள்ளது. படுகொலைகளுக்கான எந்த பொறுப்புக் கூறல்களும் இல்லை. யாழ்ப்பாணத்தில் 3000 வேலையில்லாத பட்டதாரிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்க உங்களினால் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க முடியுமா?
எமது மக்கள் தவறுதலாக இந்த அரசின் 3 கத்தரித் தோட்ட வெருளிகளைத் தேர்வு செய்துவிட்டார்கள். இந்த 3 கத்தரித்தோட்ட வெருளிகளினாலும் யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை.
கடற்புலிப்படை, தரைப் படை,கரும்புலிப் படை, வான்படை என வைத்திருந்ததுதான் தமிழீழம் .எமது தேசியத்தலைவர் பிறந்த வல்வெட்டித்துறைக்கும் எனக்கு, உங்களிலும் விட அதி கூடிய வாக்குகளை பெற்ற சாவகச்சேரிக்கும் ஜனாதிபதி போய் சர்க்கஸ் கூடாரத்தில் நின்று ஆடுவதற்கான தேவையை யாழ் மண் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பாதையோர வியாபாரிகள், பஸ் நிலையம் என பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றீர்கள். நான் உங்களுக்கு ஆதரவாக இருந்தவன். ஆனால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் என்னை பங்கேற்கவிடக் கூடாது என்பதற்காக 23 ஆம் திகதி நடந்த சம்பவத்திற்காக 29 ஆம் திகதி கைது செய்தீர்கள். முடிந்தால் அமைச்சர் சந்திரசேகரை வரச் சொல்லுங்கள் என்றார்.
![]()