கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகி சுயநினைவிழந்து கிடக்கும் விவசாயி

கொடூரமான முறையில் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகி சுயநினைவிழந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டமாவடியைச் சேர்ந்த ஜெஸீம் என்பவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூகச் செயற்பாட்டாளருமான மௌலவி எம்.ஐ.ஹாமித் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கையில்,
ஓட்டமாவடி-திருமலை வீதியில் காணிக்கை வேப்பையடி பிரதேசத்தில் தனது வயலில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஓட்டமாவடி 208 B/2ம் வட்டாரத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளியும் விவசாயியுமான ஜெஸீம் என்பவர் கடந்த 1ஆம் திகதி 8 பேர் கொண்ட கும்பலால் படுமோசமான முறையில் வயலில் வைத்து தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர் 2018ம் ஆண்டு 10 ஏக்கர் காணியை விலையாக வாங்கி, அக்காணியில் அவர் தொடர்ச்சியாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த 10 ஏக்கர் காணியில் 3 ஏக்கர் காணியை ஒரு சாரார் உரிமை கோரி பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். இதே நிலையில் 2018ம் ஆண்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2021ம் ஆண்டு ஜெஸீம் என்பவருக்கு நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து அவர் அக்காணியில் தொடர்ச்சியாக விவசாயத்தை மேற்கொண்டுள்ளார்.
இம்முறை (2025) அக்காணியில் விவசாயம் செய்து கடந்த 1ஆம் திகதி சனிக்கிழமை தனது மனைவி, பிள்ளைகளோடு வேளாண்மை அறுவடைக்காகச் சென்று அறுவடை செய்து 35 மூடை நெல்லை பைகளில் கட்டிய நிலையில், எட்டு பேர் கொண்ட ஒரு கும்பல் வயலினுள் நுழைந்து வயலில் நின்ற ஆதம் என்ற வயற் காவல்காரனை காலில் தாக்கி அவரின் காலை உடைத்துள்ளனர்.
அப்போது அதனைத்தடுக்க ஓடிச்சென்ற காணியின் உரிமையாளரான ஜெஸீம் என்பவரையும் எட்டு பேரும் சேர்ந்து கொலை வெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பலமான தாக்குதலுக்குள்ளான ஜெஸீம் சுயநினைவிழந்து வயல் வெளியில் விழுந்து கிடந்த நிலையில், பொதி செய்யப்பட்ட 35 மூடை நெல்லையும் வெட்டு மிஷினுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 65,000 ரூபா பணத்தையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான ஜெஸீம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரைத் தாக்கியவர்களில் மூன்று பேரை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையோர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இவரை மிக மோசமாகத் தாக்கிய சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் சுதந்திரமாக நடமாடித் திரிவதாக அறிய முடிகின்றது.
அத்தோடு, நெல்லை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரமும் இதுவரை மீட்கப்படவில்லை என குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
![]()