இந்தியா

தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கின் தீர்ப்பு வெளியானது!

காதலனை விஷம் கொடுத்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் . இவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது காதலியான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரீஷ்மா (24) என்ற இளம்பெண்ணால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோரை குற்றவாளிகளாக நெய்யாற்றின்கரை நீதிமன்றம் கடந்த 17ஆம் திகதி அறிவித்தது.

இந்நிலையில் தண்டனை விவரம் நேற்று முன் தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் நீதிமன்றம் கூடியது. அப்போது குற்றவாளிகளான இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, கிரீஷ்மாவிடம் ஏதாவது கூற விரும்புகிறீர்களா? என கேட்டார். அப்போது, கிரீஷ்மா நீதிபதியிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார்.

அக் கடிதத்தில் ‘தனக்கு 24 வயது ஆகின்றது எனவும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பினை தான் பூர்த்தி செய்துள்ளதாகவும் மேலும் படிக்க விரும்புவதாகவும், தனது பெற்றோருக்கு தான் ஒரே மகள் எனவும் எனவே குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு சட்டத்தரணி ‘கிரீஷ்மா ஈவு, இரக்கமற்றவர், அவருக்கு கருணை காட்ட தேவையில்லை. அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தண்டனை விவரங்களை இன்று (20-ஆம் திகதி) அறிவிப்பதாக கூறி ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் காதலனை கொன்ற வழக்கில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது மாமா நிர்மல் குமாருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் கடத்தல் குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், விசாரணையைத் தவறாக வழிநடத்த முயன்றதற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் காதலி கிரீஷ்மாவுக்கு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *