கதைகள்

“நான்கு வழிச்சாலை” …. சிறுகதை – 101 … அண்டனூர் சுரா

தார்ச்சாலையை அடைத்து நின்ற சொகுசு வாகனத்திற்குளிலிருந்து இறங்கிய மாணிக்கவிநாயகம் குறுகலான சாலையின் இரண்டு புறங்களிலுமிருந்த அடைசலான கடைகளைப் பார்த்தார். கடைகள் கூரைகள் வேய்ந்த, ஓடுகள் பதிக்கப்பட்ட, கான்கிரீட் கட்டடங்களாக இருந்தன. மனிதர்களுக்கிடையே நிலவும் பொருளாதார ஏற்ற, இறக்கம் கடைத்தெரு கட்டடங்களில் தெரிந்தன. அவற்றில் உயரமான கட்டடம் மாணிக்கவிநாயகத்திற்கு சொந்தமானது. அதன் ஒய்யாரமும் உயரமும் வேலைபாடுகள் கொண்ட முகப்பும் ஐம்பது வயதுடயை நடிகை இருபத்தைந்து வயதுடையை நடிகருடன் சோடி சேர செய்துகொண்ட அலங்காரமாகத் தெரிந்தது.. அந்த ஊரில், கடைத்தெருவில் உயரமான கட்டடம் அதுதான், எக்ஸைல் மாளிகை. மாணிக்கவிநாயகத்தின் மாளிகை என்று சொல்லும் விதமாக எம்விஎம் என்றும் மக்கள் சொல்லிவந்தார்கள். ஊரின் அங்க அடையாளமாகத்தான் அந்த மாளிகை இருந்தது.

இந்த ஊர் சின்னஞ்சிறுசுகளுக்கு பொழுதுப்போக்கு அந்தக் கட்டடத்தின் பிரமாண்டத்தைப் பார்ப்பதும் அதற்குள்ளிருக்கும் கடைகளை நோட்டமிடுவதும்தான். மாளிகை நுழைவுவாயிலிருக்கும் சில்வர் கைப்பிடிகளைப் பிடித்துக்கொண்டு சரிந்து இறங்குவார்கள். இவைதவிர கடைக்குள் தானியங்கி மின்தூக்கியும் இயங்கு படிக்கட்டுகளும் இருந்தன. அதில் ஏறி இறங்குவதற்கென்று ஒரு பெருங்கூட்டம் அந்த மாளிகைக்கு வந்துசெல்லும். ஏழைகள் பார்த்து ரசிக்கவும் அதை வாங்க ஏங்கவும் பல பொருட்கள் இருந்தன. அவற்றில் ஒரு பொருளையேனும் வாங்கும் சக்தி அவர்களிடம் இருந்திருக்கவில்லை. தேக்கு மரங்களினால் செய்யப்பட்ட தளவாடக்கடை, ஒரே விலை ஜவுளிக் கடை, தங்க நகைக் கடை, ரியல் எஸ்டேட் அலுவலகம், வெளிநாட்டுப் பணங்களை மாற்றித்தரும் தனியார் வங்கி,…இப்படியான கடைகளைக் கொண்ட மாளிகை இது.

மாளிகை பெரும் இடத்தை மட்டும் அடைத்து நிற்கவில்லை. சாலையின் ஒரு திருப்பதை அடைத்து நின்றிருந்தது. மாணிக்கவிநாயகம் அந்தக் கட்டடத்தின் தலையை ஒரு கணம் நின்று நிதானித்து பார்த்தார். கட்டிடத்தின் பெயர் தங்க நிறத்தில் எக்ஸைல் காம்ப்ளக்ஸ் என்கிற பெயரைத் தாங்கி நின்றது. அந்த மாளிகையின் அழகை நேரில் பார்ப்பதைவிடவும் அலைபேசியில் புகைப்படம் எடுத்துப் பார்த்தால் இன்னும்கொஞ்சம் அழகாகத் தெரியும். கட்டடக்கூடுகளை ஒரு பருவப் பெண்ணை புகைப்படம் எடுப்பதைப் போல எடுக்கவேண்டும். அப்படித்தான் அவர் எடுத்தார். அவர் யாரைவிட்டும் அந்த நிழற்படத்தை எடுத்துவிடவில்லை. அவராகவே எடுத்தார். அவர் விரும்பும்படி எடுக்கவும் அவருக்குப் பிடிக்கும்படியாக எடுக்கவுமே அவர் அந்த இடத்திற்கு வந்திருந்தார்.

மாளிகை அவருடையது என்பதற்காக அவர் அதற்குள் நுழைந்துவிடுபவரில்லை. மாளிகைதான் அவருடையது. அதற்குள்ளிருக்கும் கடைக் கன்னிகள் அவருடையது அல்லவே. ஒரு வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு வீட்டின் உரிமையாளர் என்கிற போர்வையில் வீட்டுக்குள் நுழைந்து அறைகளை பார்வையிட்டால் எவ்வளவு அநாகரிகமாக இருக்குமோ அப்படியாக உணர்கிறவர் மாணிக்கவிநாயகம். மாளிகையை நிழற்படங்கள் எடுத்ததும் சொகுசு வாகனத்திற்குள் ஏறி அமர்ந்துகொண்டார். வாகனம் ஒரு துண்டு வெள்ளம் போல ஊரத் தொடங்கியது.

வாகனத்தில் அமர்ந்தவராய் மாளிகையைப் பார்த்தார். அதன்மீது வைத்தக் கண்ணை எடுக்க அவருக்கு மனம் வரவில்லை. வாகனம் மாளிகையொட்டியுள்ள கொண்டை ஊசி வளைவில் திரும்பியது.

வளைவின் விளிம்பில் இரண்டு சிலைகள் இருந்தன. இரண்டும் காப்புக்கூட்டுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இரண்டில் ஒன்று மாநில மொழிப்போர் தியாகியின் சிலை. மற்றொன்று விடுதலைப் போராட்ட வீரரின் சிலை. இரண்டு சிலைகளையும் அவர் வீடியோவாக படம் எடுத்தார். அவர் படமெடுக்கும் வேகத்திற்கு அந்த வாகனம் மெல்ல திரும்பியது. வாகனத்திற்கும் பின்னே பல வாகனங்கள் வழி விடச்சொல்லி ஒலியெழுப்பின. வாகனத்தை ஒதுக்குப்புறமாக நிறுத்த அந்த இடத்தில் இடமிருந்திருக்கவில்லை. “சரி போகட்டும்” என்றார். வாகனம் சாலையை உராய்த்துக்கொண்டு கிளம்பியது.

பேரூராட்சி ஊர் அது. ஊருக்கும் சற்றே தூரத்தில் வயல்வெளிகள் இருந்தன. பரந்த வயற்பரப்பு. பாசிப் படர்ந்த குளம் போல எங்கும் பச்சை மயம். வயலிலிருந்து இதமாக வீசிய காற்றைக் கண்களை மூடி சுவாசித்தார். அவரது மார்புப் பையை காற்று நிரப்பி கண்களை எக்ஸைல் காம்ப்ளக்ஸ் என்கிற மாளிகை நிறைத்தது. கண்களை மூடியிருந்தவராய் அந்த மாளிகையைக் கண்களுக்குள் கரைத்து ஈரத்திவாலையாக நெஞ்சுக்குள் இறக்கினார்.

வாகனம் அந்த மாளிகை, வயற்காட்டிலிருந்து நீண்ட தூரத்தைக் கடந்திருந்தது.
ஊருக்குள் நீர் கசிவதைப் போல ஒரு செய்தி கசியத் தொடங்கியது. கசிந்த செய்தி வதந்தியா, உண்மையா என்று தெரியாமல் வட்டங்கட்டி அந்தி சந்தி பேச வைத்தது. “நம்ம ஊருக்கு நான்குவழிச் சாலை வரப்போகுதாம். இந்தக் கடைத்தெரு வழியேதான் வரப்போகுதாம்…”
செய்தி முதலில் ஒரு வதந்தியைப் போல பரவி பிறகு உண்மையென அச்சுக்கட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்தது. கடைத்தெருவில் சொந்தக் கடைகள், கட்டடங்கள், மாளிகை வைத்திருந்தவர்கள் பதட்டத்திற்கு உள்ளானார்கள்.

நான்கு வழிச்சாலை இந்த வழியே வந்தால் சாலையின் இருபுற கடைகளில் பாதிக் கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்படுமாம்.

சில கடைகளில் பின்பக்க சுவர் மட்டும்தான் மிஞ்சுமாம்.
எக்ஸைல் மாளிகையில் பாதி சாலையாம்.

தேநீர் கடைகளில் உணவகங்களில் மாளிகைக் கடைகளில் சாலை விரிவாக்கம் குறித்தே பேச்சுகள் இருந்தன. இந்தப் பேச்சுகள் பலரிடம் சந்தோசக் குரலாகவும் சிலரிடம் அதிர்ச்சி குரலாகவும் இருந்தன.

கடைத்தெருவுக்கு வரும் மக்கள் விரைவில் இடிபடவிருக்கும் மாளிகையைப் பாவமாக பார்த்தார்கள். அந்த மாளிகையின் முகப்புகூட கலவர முகமாகவே தெரிந்தது.
சாலையின் ஒருபுறம் அரசுப் பள்ளிக்கூடம். அதையொட்டி காவல் நிலையம். இவை இரண்டிற்கும் புதிய கட்டடங்கள் கட்டும் பணி துரிதமாக நடந்துகொண்டிருந்தன. இடிக்கப் போகிற கட்டடத்தை ஏன் இப்படி சிரத்தை எடுத்து கட்டுகிறார்கள்? கட்டடத்திற்கே கேட்கும்படியாக பேசிக்கொண்டார்கள்.

“அரசாங்க கட்டடத்தை இடிச்சுல இந்த வழியே ரோடு வரணும்” கேட்டுவைத்தான் கனகவேல்.
“பள்ளிக்கொடம் ஸ்டேட்டு கவர்மெண்டு. ரோடு சென்ரல் கவர்மெண்டு. சென்டல் கவர்மெண்டு நெனச்சா கட்டடமெனன்ன ஸ்டேட்டு கவர்மென்டையே இடிக்கும்.” என்றான் மாட்டுக்குப் புண்ணாக்கு வாங்கிக்கொண்டிருந்த குமரிமுத்து.

“பள்ளிக்கூடமும் போலீஸ் ஸ்டேசனும் தெக்கு பார்த்தாப்புல இருக்கு. குட்டிக்கடைகள் அடைசலாக வடக்கு பார்த்தாபுல இருக்கு. இடிக்கிறவங்க ஒருபுறம் மட்டும் இடிப்பாங்களா இல்ல ரெண்டு புறமும் இடிப்பாங்களா?” கேட்டுவைத்தான் முத்தன்.
“ஒரு பக்கம் மட்டும் தான் இடிக்கப்போறாங்களாம்.” கேள்விப்பட்டதை சொல்லிவைத்தார் முத்துராமன்.

”அது எப்படி? இடிச்சா ரெண்டுப் பக்கமும் தானே இடிக்கணும்?“ சீறினான் முத்தன். அவன் அப்படி சீறுவதற்கு காரணம் இருந்தது. வடக்குத் திசை பார்த்த கடைகளில் ஒரு கடை அவனுக்கு வேண்டியப்பட்டவரின் கடை.

“நீ நினைக்கிற மாதிரி இல்ல முத்தா. பள்ளிக்கொடம், போலீஸ் கட்டடம் அரசாங்கத்தோடது. ரோடு போடப்போறது அரசாங்கம். இராமர் கோயில இடிச்சிட்டு அனுமார் கோயிலவா கட்டுவாங்க?” இப்படி சொன்னது உரமூட்டை ஏற்ற வந்த வெள்ளையன்.
“சரி. இந்தப் பேரூராட்சிக்கு வருமானமே இந்தக் கடைக்கன்னிகள் தானே. அதை இடிச்சிட்டா வருமானத்துக்கு வழி?” கேட்டுவைத்தான் முத்தன்.

“அதானே, இது பொன் முட்ட இடுற வாத்த கழுத்தத் திருகி எறியுறதாட்டமுல்ல இருக்கு.”
“அடே கூமுட்டப் பயல. இந்தக் கடைக்கன்னில பெரிசா என்னடா வருமானம் வந்திடப் போவுது. இந்தக் கடைகள இடிச்சிட்டு கொஞ்சம் தள்ளி சுங்கச் சாவடியே போட்டா கார் என்ன, பஸ் என்ன, நம்ம ஓட்டுற சைக்கிளிருந்துகூட வரி கொட்டோ கொட்டுனு கொட்டும்டா. கடை வரி மாநில அரசாங்கத்துக்கு. சுங்க வரி மத்திய அரசாங்கத்துக்கு. மத்திய அரசாங்கம் நினைச்சா எதையும் செய்யும்டா…” சொல்லிவைத்தார் வெள்ளையன்.

“எந்த அரசாங்கமா இருந்தாலென்ன? கட்டிய கடைகளை இடிக்கிறது பசுமாட்டின் காம்புகளை அறுக்கிற மாதிரிதே” ஆவேசத்துடன் சொல்லி முடித்தான் முத்தன்.

மாட்டுவண்டியில் உர மூட்டைகளை ஏற்றிய வெள்ளையன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கட்டடங்கள், கடைக் கன்னிகளை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, வண்டியில் பூட்டியிருந்த காளைகளை அதட்டி விரட்டி வண்டியைக் கிளப்பினார். திருப்பத்தில் அவர் பெரிதென மதிக்கும் இரு தலைவர்களின் சிலைகள் இருந்தன. இரு சிலைகளும் சாதி அரசியல் பூசப்பட்டு பரிதாபமாக நின்றிருந்தன.

இரண்டு சிலைகளுக்கும் ஒரு கும்பிடுப்போட்டார் வெள்ளையன். “தலைவா, வவுத்துல நெருப்பக் கட்டிக்கிட்டிருந்தேன். அணில் முதுகுல விழுந்த கோடு விவசாய நிலத்துக்குள்ளே விழுந்திருமோனு. ஒரு வழியாக எங்க வயக்காடுகள் நான்கு வழிச்சாலையிலிருந்து தப்பிச்சிருச்சு. வாரேன் தலைவா….” என்றவராய் வண்டியை விரட்டி ஊர் சேர்ந்த வெள்ளையன் “அடேய் பசங்களா, நேத்தைக்கு இராவுல நாம செட்டுக்கட்டி பேசின விசயம் பொய்யாப்போகலப்பா. மத்திய சர்க்கார் ரோடு கடைத்தெருவ மட்டம் தட்டிதான் வரப்போகுதாம். கொண்டை ஊசி திருப்பத்துக்கிட்ட மட்டும் சின்னதா ஒரு பாலம் போடப்போறதாக கடைத்தெருவில பேசிக்கிறாங்கப்பா” அலையக்குலைய சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு பூரிப்பு அடைந்தார்கள் பேரூராட்சியையொட்டி வயல் நிலம் வைத்திருக்கும் ஊர் விவசாயிகள்.

– சகஸ்ரநாமம் அந்த அறைக்குள் நுழைந்தவுடன் மாணிக்கவிநாயகம் எழுந்து வணக்கத்துடன் மரியாதை கொடுத்தார். சகஸ்ரநாமம் நடையில் கார்ப்பரேட் நளினமும் அதற்கே உரிய முகக்களையும் இருந்தன. “உங்கள ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேன்ல“ என்றவராய் அமர்ந்தார்.
“பரவாயில்லைங்க“ என்றபடி பவ்வியமாக நடந்துகொண்டார் மாணிக்கவிநாயகம்.

சகஸ்ரநாமம் வட இந்திய ஒரு பிரபல அரசியல்வாதியின் பினாமி. இருவரும் அந்த நிமிடம் கைக்குலுக்கிக்கொள்ள எக்ஸைல் மாளிகையின் உரிமை மாணிக்கவிநாயகத்திடமிருந்து சகஸ்ரநாமம் கைக்கு மாறியது. இடது கையால் சூட்கேசை வாங்கிய மாணிக்கவிநாயகம் கட்டடத்தின் மீதான உரிமையைத் துண்டித்துக்கொண்டார். மாணிக்கவிநாயகம் பத்திரத்தில் கையெழுத்திடும்போது இடிபடப்போகும் கட்டடத்தை விற்றுவிட்ட மகிழ்ச்சியில் அகமலர்ந்தார். ஆயினும் பணப்பெட்டியை வாங்கும்போது நெஞ்சாங்கூட்டை கருவண்டு துளைப்பது மாதிரியான உணர்வு அவரைக் குடைந்தது.

சகஸ்ரநாமம் சொன்னார், “வரும் பிரச்சனையை இருவரும் சேர்ந்துதான் சால்வ் பண்ணணும். அதற்கு எவ்ளோ செலவானாலும் நான் பார்த்துக்கிறேன்.”
மாணிக்கவிநாயகம் ஆமோதிப்பதைப் போல “சரிங்க“ என்றார்.

இலையும் கொலையுமாகத் துடித்துவந்தான் வந்தான் சொக்கப்பன். வயலில் உழுதுக்கொண்டிருந்த வெள்ளையனைக் கூப்பிட்டு, ”அண்ணே, நம்ம தலையில இடி விழுந்திருச்சிண்ணே”. என்றவாறு குதித்தான்.

உழுத காளைகளை நிறுத்தி சாட்டைக்குச்சியை சேற்றுக்குள் ஊன்றிவிட்டு ஒரே வீச்சில் வரப்புக்கு வந்தார் வெள்ளையன். “என்னடா சொல்றே?”

“அண்ணே அந்த எம்விஎம் மாளிகெ கைமாறிருச்சாண்ணே. யாரோ ஒரு வடநாட்டுக்காரன் வாங்கிட்டாராம். அவனோட தலைமையில கடைத் தெருவ இடிக்கப் போறதை தடுக்க கட்டட உரிமையாளருங்க கூடி உண்ணாவிரதம் இருக்கப் போறாங்களாம்“
“அட சும்மா இருடா. ஓங்கிட்ட யாரோ ஒருத்தன் கயிறு திரிச்சி விட்டிருக்கான்.”
“அண்ணே, நான் சொல்றது உம்மைண்ணே. வேணுனா கடைத்தெரு வந்து பாருங்கண்ணே” என சொல்லிவிட்டு ஊருக்குள் ஓடினான்.

முதலில் வெள்ளையன் அதை நம்பவில்லை. பத்துப் பேரிடம் விசாரிச்சு உறுதிப்படுத்திக்கொண்டு சொன்னார். “ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய துரத்துமாம். அந்தக் கதையால இருக்கு. வாங்கடா ஒரு கை பார்த்திடுவோம்.”

கடை உரிமையாளர்களுக்குப் போட்டியாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தார்கள்.

கபடி ஆட்டம் மாதிரி எல்லைக்கோடு போட்டு போராட்டம் நடந்தேறியது. ஒரு பக்கம் சகஸ்ரநாமம் தலைவர். மறுபக்கம் வெள்ளையன்.

அரசே என்று விளித்து பேசுகிறார்கள் கடை உரிமையாளர்கள். கொப்புரானே, என ஆனையிட்டு பேசுகிறார் வெள்ளையன்.

வெள்ளையன் தலைமையிலான கூட்டம் பேருந்தை மறிக்கிறார்கள். கடை உரிமையாளர்கள் அதிகாரிகளை மறிக்கிறார்கள்.

இவர்கள் வயிற்றில் பணத்தைக் கட்டிக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்கள் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு பட்டினி கிடக்கிறார்கள்.

கள நிலவரம் கையை மீறி சென்றுகொண்டிருந்தது. இதற்கு மேலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. மத்திய அரசு ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை அனுப்பி, இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தியது.

“செத்தாலும் வாழ்ந்தாலும் எங்களுக்குனு இருக்கிறது இந்த வயக்காடு தானுங்க” கண்ணீரும் கோலமுமாக சொன்னார்கள் விவசாயிகள்.

“இந்தக் கடைய நம்பித்தான்க சார் நாங்க உயிர் வாழ்றோம்.“ என்றார்கள் கடை உரிமையாளர்கள்.

“சாமி, ஒரு செலவும் செய்யமாட்டோம். விதைச்சி அறுத்தா ஏக்கருக்கு இருபது மூட்ட . நட்டு அறுத்தா முப்பது மூட்ட.”

“சார். பள்ளிக்கூடத்துக்கு புதுக்கட்டிடம் வந்து பாதிகட்டி முடிச்சிருக்கோம். இதுல பைபாஸ் வந்தா பள்ளிக்கூட பிள்ளைங்களுக்கு இடஞ்சலா இருக்காதுங்களா சார்?”
“மானாவாரி பூமிங்க. எங்களுக்குனு இருக்கிற ஒரே ஜீவாதாரம் இந்த வயக்காடுதானுங்க. அஞ்சு தலைமுறையா இதுல வெள்ளாமை பண்ணி பொழைச்சிக்கிட்டு வாறோம்க”
“சார். எங்க பேரூராட்சி நிர்வாகவே இந்தக் கடைத்தெருவுல வருகிற வருமானத்த வச்சிதான் சார் நடக்குது.”

“இந்த நெலத்த நம்பி ரண்டு ஊரு இருக்கு சாமி”

“சார். இந்தக்கடைய நம்பி நாங்க முப்பது நாற்பது குடும்பங்கள் இருக்கோம் சார்.”
அரசு பிரதிநிதிகளின் கேள்விக்கு இரு தரப்பினரும் மாறிமாறி பதில் சொல்லி வந்தார்கள்.
“சரிங்க. நீங்க இவ்ளோ சொல்றீங்களே. இந்த நிலத்துக்கான பட்டா எத்தனை பேருக்கிட்டே இருக்கு?”

“சரி, இந்தக் கடைகளோட பத்திரம், வாய்தா, வில்லங்க சர்டிபிக்கட், வருமான வரி ரசீது எல்லாத்தையும எடுத்துக்கிட்டு வாங்க.”
“பட்டா ஒன்னும் சர்க்கார் கொடுக்கலைங்களே சாமி”
“நீங்க கேட்ட அனைத்து சர்டிபிக்கட்டும் இதுல இருக்குதுங்க சார்” கட்டாக நீட்டினார் சகஸ்ரநாமம்.

கடை உரிமையாளர்களிடம் விசாரணை முடிவுக்கு வந்துவிட்டது. விவசாயிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள்தான் அனுமன் வாலாட்டம் நீண்டுகொண்டிருந்தது.
“பட்டா இல்லாம எப்படி நீங்க விவசாயம் செய்யலாம்?“

அரசும், நெருப்பும், பாம்பும் சரி. பக்கத்திலே நெருங்க விடாது. தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறி கமுக்கட்டில் வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்கிற யோசனையில் இறங்கினார் வெள்ளையன்.

“பல தடவ கலெக்டர பாத்து மனு கொடுத்திருக்கோம் சாமி. மேச்சலுக்கான தரிசு நிலம் வெள்ளாம பண்ணி பொழச்சிக்கிறுங்க. பட்டாக்கேட்டு அலையாதீங்கனு சொல்லிட்டாங்க” முந்தானையை விரித்தபடி சொன்னாள் வெள்ளையன் பொஞ்சாதி கூத்தாயி.
“மேய்ச்சல் நிலங்கிறதுனாலே உங்களுக்கு சாதகமா இருக்கு. பிரச்சனையின் முடிவும் உங்களுக்கு சாதகமாகத்தான் வரும். இப்ப நீங்க உண்ணாவிரத்தை முடிச்சிக்கிட்டு கூட்டத்த கலையுங்க” என்றது அரசு தரப்பு.

“அது மட்டும் முடியாதுங்க சாமி. சாலை வயக்காடு வழியா வரப்போறதில்ல என சர்க்கார் முடிவாய் சொல்ற மட்டும் உண்ணாவிரதம் தானுங்க” வெள்ளையனின் வெள்ளை மீசை துடித்தது.

ஓர் அதிகாரி அதிகாரத் தோரணையில் சொன்னார். “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அந்தத் தரப்பு கலைஞ்சிட்டாங்க”

“நாங்க ஒன்னும் அவங்களுக்கு போட்டியா கூட்டம் நடத்தலைங்களே.”
பிரதிநிதி ஆறுபேரும் மாறி மாறி அலைபேசியில் பேசினார்கள். .பிறகு அரசிடமிருந்து உங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என்கிற வாக்குறுதியோடு புறப்பட்டார்கள்.
பிரச்சனையின் போக்கு தலைநகரத்திலிருந்த சகஸ்ரநாமத்திற்கு கிலி மூட்டியது. பத்துக்கோடி ரூபாய் கண்ணுக்குத்தெரிந்து மண்ணோடு மண்ணாக புதைவதா? அந்தக் கட்டடம் சரிந்து விழுவதை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மண்டைக்குள் ‘கிண்ண்’ என்கிற வகையான உணர்வு. என்ன செய்யலாம் என்று யோசித்தவர், ஆயிரம் காக்கைகளுக்கு ஒரு கல் போதும், என்கிற உத்திக்கு இறங்கினார்.

விவசாயிகளின் உண்ணாவிரதம் இருபதாவது நாளாக நடந்துக்கொண்டிருந்தது. களத்தில் முந்நூறு பேர் கூடியிருந்தார்கள். மீசையை முறுக்கிக்கொண்டு ஓடி வந்தான் சின்னத்துரை. அவனைக் கண்டுகொண்ட வெள்ளையன் மெல்ல தலைதூக்கி “என்னடா எதுவும் நல்ல சேதியா?” என்று கேட்டு வைத்தார். அவனோ செய்தியை வெள்ளையனிடம் சொல்லாமல் அரும்பு மீசை முளைத்த இளைஞர்களின் காதுகளில் அத்தனை வேகமாய் கொட்டினான். இளைஞர்கள் ‘உய்ய்’என்று கிளம்பினார்கள் அத்தனைபேரும். மதம் கொண்ட யானையாட்டம் போனவேகத்தில் கிளைகளை முறித்தார்கள். காலால் எத்தி வேர்களைப் பேர்த்தார்கள். பந்தய ஓட்டமெடுத்து கொண்டை ஊசி வளைவு போய்ச் சேர்ந்தார்கள்.

வெள்ளையன் பதறியடித்து எழுந்து பசங்களைப் பார்க்கிறார். என்னவென்று கேட்டுத் தெரிந்துக்கொள்ள அவருக்கும் பக்கத்தில் ஒரு காக்காக் குருவிக்கூட இல்லை. பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டே விழுந்து எழுந்து ஓடினார்கள். உண்ணாவிரதம் உண்மையாக இருந்த வெள்ளையனால் நடக்க முடியலை. பின்னே எப்படியாம் ஓடுவது? என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்துக்கொள்ளலாம் என்று பார்த்தால் போனவன் எவனும் திரும்பி வரவில்லை. எப்படியோ தத்திப்பித்தி ஒரு வழியாக கொண்டை ஊசி வளைவு சென்றடைந்தார் வெள்ளையன்.

நான்கு வழிச் சாலைக்கு எதிராக ஒன்றாக உட்கார்ந்து சீட் ஆடிக்கிட்டிருந்த கங்கையனும் சுப்பிரமணியும் கம்புகளுடன் எதிரும் புதிருமாக நின்று சீறிக்கொண்டிந்தார்கள். ஒரு கிளையை முறித்து அதை இரண்டாக வகுந்து கீரியும் பாம்புமாக நிற்கிறார்கள். பொம்பளைச் சட்டினு கேலிக்கு உள்ளான சின்னத்துரை தைரியம் இருந்தால் இந்தக் கோட்டுக்குள்ளே வந்துபாருடானு தாவிக் குதித்தான். எடுபிடி வேலை பார்க்கும் நம்ம குப்பன் கையில ஒரு பெருந்தடி இருந்தது.
மாநில முழுவதும் கலவரம். போலீஸ் பந்தோ பஸ்து. பஸ் மறியல். சிலைக்கு சிலை போலீஸ் குவிப்பு. நிலவரம் அரசுக்கட்டுக்குள் வரவில்லை.

இரு தரப்பினரும் சிலைகளின் கால்களை இறுகப் பற்றியபடி கொக்கரிக்கிறார்கள். “என் தலைவன் சிலையை அகற்றிவிட்டு இந்த வழியாக ரோடு போடச்சொன்னவன் யாரடா? மீசையை இழப்போம். ஆண்மையை துறப்போம். ஒரு போதும் மாட்டோம் என் தலைவன் சிலையை இழக்க”. ஒரே வசனத்தை விவசாயிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து உரக்கக் கத்திக்கொண்டிருந்தார்கள்.

இரண்டு சிலைகளில் ஒரு சிலையை அகற்றி இந்தக் கடைத்தெரு வழியே நான்கு வழிச் சாலை கொண்டுவர அரசு திட்டம் வகுத்தது.
எந்த சிலையை எடுப்பது?

“என் தலைவன் சிலையில் கை வைத்தால் ரத்த ஆறு ஓடும்.”

“என் உயிர் போனாலும் போகுமே தவிர என் தலைவன் சிலையை எடுக்க விடமாட்டோம்.”
நிலவரம் மாநிலம் முழுவதும் பேசும் பொருளானது. தலைமையிடத்தில் சாதிக் கட்சியினர் உயர்க்கமிட்டிக் கூடி நான்கு வழிச்சாலைக்கான மாற்றுவழியை அரசுக்குப் பரிந்துரை செய்தார்கள். அந்த பரிந்துரையை வெள்ளையன் மட்டும் தனியாளாய் நின்று எதிர்த்துக்கொண்டிருந்தார்.

சகஸ்ரநாமம் முடிச்சிப்போட்ட சாதி பிரச்சனைக்கு மத்தியில் வெள்ளையனின் போராட்டம் கடலில் கரைத்திட்ட பெருங்காயம்தான்.

இதற்கிடையில் பேரூராட்சி கடைத்தெருவுக்கும் வெளியே பெரிய்..ய பாம்பு ஒன்று வயல் வரப்புகளை பெயர்த்தெறிந்து வந்துக்கொண்டிருந்தது நான்கு வழிச்சாலை என்னும் பெயரில்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *