“ஊமச்சி”…. கதை… சோலச்சி

![]()
வரப்புகள் தோறும் பனை மரங்கள் நீண்டு வளர்ந்திருந்தன. குறுக்கும் நெடுக்குமாக கறுக்கங்குட்டிகளும் முளைத்திருந்தன. கறுக்கங்குட்டிகளின் குருத்து மட்டைகளையும் அதன் அருகில் உள்ள பிஞ்சு மட்டைகளையும் வெட்டித் தான் விசிறி செய்வார்கள். மரங்கள் அடர்ந்த சூழல் என்பதால் பனை விசிறிகளுக்கு வேலை இருக்காது. ஆனாலும், அனைத்து வீடுகளிலும் பனைவிசிறி வீட்டின் எறவானத்தில் சொருகி இருக்கும். கருக்கருவா, களைக் கொத்து, வாங்கருவா என அனைத்தும் சொருகி வைக்கப்படும் இடம் எறவானம்தான்.
ழைக்காலங்களில் மடை திறந்தால் தண்ணீர் போய்க் கொண்டே இருக்கும் நடு வாய்க்காலை ஒட்டித்தான் அந்த ஊரும் இருந்தது. பனை மட்டையால் எறவானமும் வைத்து வேயப்பட்ட பத்துப் பதினைந்து வீடுகள் கொண்ட சிறிய கிராமம்.
அந்த நடு வாய்க்கால் ஓரத்தில் ஐந்தாறு பனை மரங்கள் நடுவே வேலிக்கருவை மரம் ஒன்றும் வளர்ந்து இருந்தது. அதில் குறுஞ்சாக்கீரை கொடி படர்ந்து கிடந்தது. பச்சைப்பசேல் என கருவை மரம் முழுவதும் படர்ந்து கிடக்கும் அந்தக் குறுஞ்சாக்கீரையை பலரும் கண்டு கொள்வதே இல்லை. முருங்கைக் கீரையோட கொவ்வாக்கீரைய போட்டு சமச்சு சாப்புட்டா கூட ரொம்ப சுவையா இருக்கும். ஆனா இந்தக் குறுஞ்சாக்கீரையோட எதையும் சேர்க்க முடியாது. கசந்து கெடக்கும். அதுவும் கருவமரத்துல கெடந்தா கசப்ப பத்தி சொல்லவா வேணும். அதனால் தேடா நாதியாக கிடக்கும் அந்தக் கீரையை தேடி வருவது முத்தம்மாள் மட்டும்தான்.
அந்த வேலிக்கருவை மரம் அவள் ஏறுவதற்கு ஏற்றார் போலவே வளர்ந்து இருந்து இருந்தது.
அன்றும் அவள் குறுஞ்சாக் கீரையை பறிக்க கருவை மரத்தில் ஏறி பறித்து கொண்டு இருந்தாள். நான்தான் இளங்கீரை அதனால் எனையப் பறிச்சு சாப்புடு. அய்யோ முத்தம்மா….. போன் தடவையே என்னைய பறிக்காம போயிட்ட…. அதனால் மொதல்ல என்னைய பறிச்சு சமச்சு சாப்புடு…. என்பதாக ஒவ்வொரு இலையும் ஆடி அசைந்து முத்தமாவை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டே இருந்தன. கருவை முள் தன்னை குத்தி விடாமல் லாவகமாய் நின்று கொண்டு ஒவ்வொரு கீரையாக பறித்து இடுப்பில் சொருகி இருந்த சேலை முந்தானையில் போட்டுக் கொண்டாள்.
“ஏன்…டி காடத்தான்பட்டியா… நீ நல்லா இரு. இருந்தாலும் ஒரு பேச்சுக்கு சொல்றேன். நீபாட்டுக்கு ஆட்டங்கட்டி மல்லு மல்லுனு ஆடிறாத. நீ அப்புடியெல்லாம் ஆட்டம் கட்டி ஆடின மாட்ட. ஒருவேளை நீ செத்துப் போயிட்டியன்னா.. அந்த குறுஞ்சா கீரையோ ஓம்புட்டு நெனப்புல அழுதே செத்துப் போயிரும்…டி. கீரைனா ஆ…..னு பறக்குற. குறுஞ்சாக்கீரைய மட்டுமா பறிக்கிற. ஆரக்கீரை, அப்ப கீரை, கொவ்வாக் கிரைனு ஒரு கீரையும் விட்டு வைக்க மாட்டேங்கிற. ஏன்……. கொட்டி கெழங்கு வரைக்கும் தோண்டி எடுத்துப்புடுற. உருளக்கெழங்க போட்டு சமைக்கிறியோ இல்லையோ… கெடைக்கிறப்பெல்லாம் கொட்டிக்கெழங்க தோண்டியற்ர.. அதனாலதான்டி சொல்றேன்…. ஒனக்காகவே எல்லாம் வரம் வாங்கி மொளச்சுருக்குடி..” கொஞ்சம் இழுவையோடு நக்கல் அடித்தாள் செல்லாத்தாள்.
முத்தம்மாள் பிறந்த ஊரோ காடத்தான்பட்டி. பொதுவாக கிராமத்தில் வாழ வந்த பெண்களின் பொறந்த ஊரின் பேரைச் சொல்லி அழைப்பது தான் வழக்கம். முத்தம்மாளையும் அப்படியே அழைத்தார்கள்.
செல்லாத்தாள் சொல்வதை காதில் வாங்காதவள் போல் குறுஞ்சாக்கீரையை பறித்து முந்தானையில் போட்டு கொண்டே இருந்தாள். கூர்மையான வேலிக்கருவை முட்கள் இவளது கால்களை பதம் பார்க்க காத்துக் கொண்டு இருந்து முடிவில் ஏமாற்றம்தான் அடைந்தன. அவளின் கால்களும் கைகளும் கருவை முள்ளை காயப்படுத்த விரும்பாமல் சூதனமாய் ஒதுங்கிக் கொண்டன.
“ரொம்ப அழுத்தக்காரிடி இவ. நமக்கே பயமா இருக்கு. இவ நிக்கிறத பாத்தாலே ஒடம்பு படபடக்குது. இவ எப்புடித்தான் ஏறுறாளோ. எறங்குறாளோ…..” அழகியிடம் ஆதங்கப்பட்டாள் செல்லாத்தாள்.
“ஏன்டி அவள வம்புக்கு இழுக்குற. ஒரு வம்பு தும்புக்கும் போவாத அப்புறாணிடி…நீ வேணா… அந்தாப் போறாளே மூட்டம்பட்டியா… அவகிட்ட வாயக் கொடுத்துப் பாரு… நீயெல்லாம் தறிகினதாளம் போடனும். ஆமடி…..நம்ம உசுரு வூடு போயி சேராது…” அழகி சொன்னதும் செல்லாத்தாளுக்கு திக்குனு மனசு அடித்துக் கொண்டது.
அப்போது கட்டுத்தறியில் கூட்டிப் பெருக்கிய சாணியை கூடையில் அள்ளி தலையில் சுமந்து வயலுக்கு போய்க்கொண்டு இருந்தாள் மூட்டம்பட்டி சரசு. அவளின் காதுகள் விழித்தே இருந்தன. என்றாலும், அவர்கள் பேசிக்கொள்வது எதுவும் அவளின் காதுகளுக்குள் அகப்படவில்லை. ஏதாவது சாடைமாடையாக காதில் விழுந்திருந்தாலும் சிங்குசிங்குனு ஆடியிருப்பாள்.
அலுப்பு தட்டாமல் இருக்க ஏதாவது பேசிக் கொண்டும் பாடிக்கொண்டும்தான் வயலில் களை எடுப்பார்கள். அப்படி ஒரு நாள் ஒருத்தரை ஒருத்தர் விளையாட்டாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுது முட்டம்பட்டிக்கு போய் வந்ததாக செல்லாத்தாள் சொன்னாள். பேச்சு வாக்கில் மூட்டம்பட்டிங்கிற பெயரைக் கேட்டதும் பக்கத்து வயலில் களை எடுத்துக் கொண்டு இருந்த சரசு சேலையை வரிஞ்சு கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிட்டாள்.
“நா எவ வூட்டு படியாச்சும் தொடுறனா… இல்ல… எவ வூட்டு திண்ண தெருவுல நின்னு யாரு கதையாச்சும் பேசி ஈ….னு இளிக்கிறனா… ஆனா…. போற எடம்பூரா என்னயப் பத்தி பேசலனா சிறுக்கி மவளுகளுக்கு அன்னந்தண்ணி எறங்க மாட்டேங்குது. இனி ஒரு வாருத்த எவகிட்டயாச்சும் கெளம்பட்டும்…. அப்ப தெரியும் இந்த மூட்டம்பட்டியா யாருங்குறது……” மூச்சு விடாமல் கத்தியதை இப்போது நினைத்தாலும் செல்லாத்தாளுக்கு கொடலே கலங்குற மாறி இருக்கும்.
“எதுக்கு…. நானு நல்லாருக்கது புடிக்கலயா…. ஏற்கனவே நானு சொல்லாத சொல்லுக்கு வாங்குப்பட்டு நின்னது இப்பவரைக்கும் செரிக்கல. நெசமாலுமே நீயே சண்டைய மூட்டிவிட்ருவ போல.. அவகிட்ட மாட்டிக் கிட்டு நொங்குப்படுறது யாரு. போதும்….த்தா ஆள விட்ரு…” சலித்துக் கொண்டாள் செல்லாத்தாள்..
“அத வுடுடி… வெளையாட்டுக்கு சொன்னாக்க… எட்டு ஊரு சண்டக்காரி டிங்குடிங்குனு குதிச்ச மாறி இழுத்துக்கிட்டு நிப்பே…” பேச்சில் அழுத்தம் கொடுத்தாள் அழகி.
“அப்புடியே…. எதையாச்சும் சொல்லி வாய அடச்சுருவியே…. சொல்லுறதையும் சொல்லிப்புடுறது… கேட்டாக்க……” பேச்சை இழுத்தாள் செல்லாத்தாள்.
“இந்த இழுவைக்கி ஒன்னும் கொறச்ச இல்ல… மண்ணெண்ணெ வெல மலையேறிப் போச்சு… மவராசன் ஆளுற நாட்டுல மண்ணுக்கும் தண்ணிக்கும் வெல கூடிப் போச்சு.. அதைப்பத்தி யாரும் யோசிக்கிறது இல்ல.. சும்மா ஏதோ சொன்னதுக்கு புளியங்கொம்ப புடுச்சு தொங்கன தொங்கிக்கிட்டு இருக்க..” அழகி சொன்னதும் எல்லோருமே அமைதியானார்கள்.
“ஏலே… அலக்கு வச்சு நின்னுக்கிட்டே எட்டுன மட்டும் புடுங்க வேண்டியது தானே… மரத்த மல்லுக்கட்டிக்கிட்டு எதுக்குடி செரமத்துக்கு மேல செரமத்த இழுத்துக்குற. ஒவ்வொரு முள்ளும் கவட்டைய விரிச்சுக்கிட்டு நிக்கிது. எக்குத்தப்புல ஒன்னாச்சுனா என்னடி பண்றது.” பரிவு காட்டினாள் அழகி.
“ஏக்கா…. ஒனக்குத் தெரியாத… யோசனையா… இல்ல நாஞ்சொல்லித்தான் ஒனக்குத் தெரியனுமா….” முத்தம்மா சொன்னதும் அது என்ன…. யோசனை என்பது போல் பார்த்தாள்.
“அலக்கு போட்டா கொடி அந்துறாதா..? ஏதோ…கீர தழ நண்டு, நத்தைனு ஏம்பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு.. வெலவாசி என்னடானா மானத்துக்கும் பூமிக்கும் ஒன்னா நிக்கிதுனு நீயே சொல்லிப்புட்ட. அதைப்பத்தி நா என்னத்த சொல்ல. சொத்து சொகத்தோட இருக்க நீங்க எங்க… சோத்துக்கே அல்லாடுற நா எங்க…? இருக்குறத பக்குவமா பதுவுசா வச்சுக்கிட்டாதானே நாளபின்ன கூசாம பறிக்க முடியும்” முத்தம்மாளின் இந்தப் பேச்சை அழகி எதிர் பார்க்கவே இல்லை.
“இப்ப எதுக்குடி இம்பூட்டு நீளமா பேசுற. நீ செரமப்படுறத பார்க்கப் பொறுக்காம தான் நானு அந்த சொல்ல சொன்னேன். அதுக்குப் போயி…… ம்க்கூம்… அது போகட்டும். கோவுச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. மத்த ஆம்பளைங்க மாறி ஓம்புட்டு ஆம்பளயும் நாலு கடவு போயி நாலு காச சம்பாரிச்சுக்கிட்டு வரச் சொல்லலாம்ல. இவ்ளோ செரமத்த ஏ…இழுத்துப் போட்டுக்குற. கொஞ்சம் நெனச்சுப்பாரு. மூணு புள்ளய எப்புடிடி ஆளாக்கப் போற..?
இந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்லாமல்…. புதருக்குள் நுழைவது போல் கிளைகளுக்குள் நுழைந்து கீரை புடுங்குவதிலேயே கவனத்தைச் செலுத்தினாள் முத்தம்மாள்.
“தெரிஞ்சோ தெரியாமலோ அவ வூட்டு வெவகாரத்த வம்புடியா இழுத்துப்புட்டமோ…. கேட்டதுல என்ன தப்பு இருக்கு. மத்தவுங்க மாறி இல்லாததையும் பொல்லாததையுமா கேட்டுப்புட்டேன். இருந்தாலும்.. அழகியின் மனசுக்குள் கடமுடகடமுடனு ஏதேதோ வந்து போனது.”
“அட சரியாத்தாங்க்கா சொன்னே….என்னம்மோ நானும் வச்சுக்கிட்டு ஓர வஞ்சகம் பண்ற மாறி சொல்ற. நானா அந்த ஆம்பளை கிட்ட சொல்ல மாட்டேங்குறேன்.. ஓசி கஞ்சி குடிச்சிகிட்டு ஓசி வேல பாத்து கொடுத்து ஊரெல்லாம் ஒடம்பு வளத்து திரியுற ஆம்பளய நானு என்னன்னு சொல்ல… என்னத்த சொல்ல…. இந்த நூறு நாளு வேல வந்ததும் போதும் வய வேலயும் கொறஞ்சு போச்சு. வெள்ளாமை வெளச்சல் பண்ணுற நீங் சட்டுபுட்டுனு வண்டி வாசியக் கொண்டாந்து நட்டுப்புடுறீக. நாலு காசு எங்கே சேக்க முடியுது. நல்ல சோறு திங்க முடியுது…” அழுத்துக் கொண்டாள் முத்தம்மாள்.
“ஓம் பெரிய பய துருதுருனு ஒரு எடத்துல இருக்க மாட்டான். எங்கடி ரெண்டு மூணு நாளாவே ஏங்கணாணுல படவே இல்ல. எங்காச்சும் ஊரு காட்டப் பக்கம் போயிட்டானா. ஆளயே காணோம்..” அழகியின் பேச்சுக்கு ம்…. கொட்டிக் கொண்டே தூரத்தில் கிடந்த கொடியை அறுந்து போகாமல் இழுத்தாள்.
யார் முகத்தையும் பார்க்காமல் பேச்சு பேச்சாக இருந்தாலும் காரியத்தில் கண்ணாக இருந்தாள். கொஞ்சம் தடுக்கினாலும் கருவை முள்ளில் குத்தி காயம் வந்து விடும். எசக்குப்பெசக்கா கண்ணுகாதுல கிழி பட்டா அவ்ளோதான்.
“முழுப்பரிச்ச லீவு விட்டாச்சுல.. பத்தாங் க்ளாசு போகப் போறான் அவங்க அக்கா கிட்ட பொசுத்தவம் வாங்கிட்டு வரலாம்னு பெரியம்மா வீட்டுக்கு போயிருக்கான். வெசாழக்கெழம வாக்குல வந்துருவாக்கா..” சொல்லிக்கொண்டே குறுஞ்சாக்கீரையில் இளங்கீரையாகப் பார்த்து பறித்தாள்.
“சரிடி பாத்து நில்லு.. வடக்கு கரய பக்கம் போயி பனமட்டை காலிமட்ட எது கெடச்சாலும் பொறுக்கிக்கிட்டு வர்றேன். நாளக்கி இல்லாட்டி நாள கழிச்சு நெல்லு அவிக்கனும். அப்பறம் தண்ணிய நெறையா ஊத்தி கீரைய அவுச்சு வையி. கடிச்சுக்க கொஞ்சம் வாங்கிக்கிறேன். நானே மறந்துட்டாலும் சின்னவங்கிட்ட வெஞ்சனக்கின்னத்துல வச்சு குடுத்தூடு…” கிளம்பினாள் அழகி.
“நானும் வந்தா நாலு வெறகு சுப்பி பொறக்கிட்டிச்சும் வருவேன்னு. இருக்கா… வர்றேன்….” செல்லாத்தாளும் கிளம்பினாள்.
“கழுத வாயப் பாத்து காயப்போட்ட நெல்ல கோட்டவிட்ட கதையா…. ஏன்டி காடத்தான்பட்டியா… கேப்பையில மாட அவுத்து விட்டுட்டு ஒய்யாரமா மேல நிக்கிறீகளே…. காணிகாச்சி வச்சுக்கிட்டுடி ஆட்டம் போடனும். வெறுங்கையி மோளம் போடுதோ.. இன்னொரு தடவ வந்துச்சு… இப்ப வெரட்டியாந்து விட்ட மாறி விட மாட்டேன். பம்பய இழுத்து வச்சு அறுத்து புடுவேன். பெறகு கொண்டமசுருல எப்புடி பூவு வப்பீங்கனு பாத்துப்புடுறேன்…” கத்திக் கொண்டு சென்றாள் வேலாயி கிழவி.
“பூவு வச்சு மினுமினுக்குறது ஒன்னுதான் இப்ப கொறச்சலா கெடக்கு….” முணுமுணுத்துக் கொண்டே மரத்தை விட்டு கீழே இறங்கியவள் மாட்டை ஓட்டிச் சென்று தொழுவத்தில் கட்டினாள். மடியில் இருந்த கீரையை சட்டியில் கொட்டி வைத்துவிட்டு தலையை வாரி கொண்டை போட்டாள். நடையில் வேகத்தைக் கூட்டினாள்.
“மாடு மேய்க்க போகச் சொன்னா…. மாட்ட மேய்க்காம பயலுக கூட சேந்து எங்க ஆட்டம் போடுற… ஒனக்கு இன்னக்கித்தான்டா பொறந்து நாளு….” முணுமுணுத்தவளாய் தன் சின்ன மகனைத் தேடி குளத்து பக்கமாக போனாள்.
“ஏ….லே….. பாக்கிய ராசே……’ நடு மடையில் நின்னு உரக்க கத்தினாள். இவளின் சத்தத்தைக் கேட்டு அருகில் ஆலமரத்தில் அடைந்திருந்த பறவைகள் படபடவென றெக்கைகளை அடித்துக்கொண்டு அங்குமிங்கும் பறந்தன.
“கத்துற கத்துக்கு காக்கா குருவியெல்லாம் அலறியடிச்சு பறக்குது. இந்தப் பயலுக்கு குளுருவிட்டுப் போச்சு. அவ என்னடானா….. மாடு போனதுக்கு இழுத்து வச்சு அறுத்துப்புடுவேனுட்டு போறா.. இவன் என்னடானா ஆளயேக் காணோம்.. பயலுக்கு நேர்ல பார்த்து வச்சுக்குறேன். ஒழச்சுப் போடுறது பத்தாதுனு ஊருக்காட்டு பேச்செல்லாம் கேக்க வேண்டிருக்கு..” கோபம் அடங்காதவளாய் கண்களை நாலாபக்கமும் சுழல விட்டாள்.

“அந்தப் பய தெக்கி மடையில பசங்க கூட தண்ணில வதிய எறிஞ்சு ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கான்….” நுங்கு வண்டி ஓட்டிக்கொண்டு வந்த சிறுவன் ஒருவன் சொல்லிச் சென்றான்.
முத்தம்மாளுக்கு கோபம் தலைக்கேறியது. “இங்க ஆன பொழப்பு பொழைக்காம அப்பன் திரியுறான்… ஏம்புட்டு உசுரு இருக்கவும் ஏதோ பொழப்பு ஓடுது…. ஒங்களுக்கு மாட்டக் காட்டியும் ஆட்டம் கேக்குதோ….” முணுமுணுத்துக் கொண்டே தெற்கு மடையை அடைந்தாள்.
சிறுவர்கள் குளத்தில் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.
“டெலே……பாக்கி….யோ……* முத்தம்மாளின் குரல் கேட்டு வெயில் காலத்தில் கிடந்த கொஞ்சூண்டு தண்ணீரும் கதிகலங்கிப் போனது.
“டேய்…. பாக்கியராசு… ஒங்க அம்மா…டா…” ஒருவன் சொல்லவும் முழங்கால் தண்ணிக்குள் இருந்தவாறே திரும்பி பார்த்தான். முத்தம்மாளைப் பார்த்ததும் வெடவெடத்துப் போனான்.
“இங்கதான் இருக்கியா…?” சேலையை இடுப்பில் சொருகி கட்டிக்கொண்டு திடுதுப்புனு தண்ணீருக்குள் இறங்கியவள் கோபம் தீரும் வரை தனது கைகளால் அவனது முதுகைப் பதம் பார்த்தாள்.
“எந்திரி டா..” அவனது முடியை பிடித்து இழுத்தாள். அவன் வயிற்றில் இருந்த துணிப்பையும் சேர்ந்தே வந்தது.
“ஒங்கப்பன கட்டிக்கிட்டு காக்…காசுக்கும் வழியில்ல. கஞ்சித்தண்ணிக்கும் துப்புல்ல. பையில என்னடா….? கத்திக்கொண்டே பையை திறந்தாள்.
“ரவக்கி கொழம்புக்கு ஒண்ணுமே இல்லனு நீதாம்மா சொன்ன. . அதா…ம்மா ஊமச்சி கெடச்சா கொழம்பு வைக்கலாம்னு தடவுனே…” அவனால் அழுகையை நிறுத்த முடியாமல் தேமித்தேமி அழுதான். ஊமச்சி என்பது நத்தை போலவே ஊசியாக இருக்கும்.
காற்றில் மிதந்து வந்த சிறு அலைகளும் இவர்களிடம் முத்தமிட்டு அமைதி காத்தது. முக்குளிப்பான் குருவிகள் தண்ணீரில் நீந்தியபடி வெறிக்கவெறிக்கப் பார்த்தன.
தன் மகனை இறுக அணைத்துக் கொண்டு அவன் உச்சந்தலையில் முத்தமிட்டாள். தனது கைகளால் தலையில் தன்னைத் தானே அடித்துக் கொண்டாள்.
அந்த வழியாக விறகு கட்டை தலையில் தூக்கிக் கொண்டு இரண்டு காளை மாடுகளையும் ஓட்டிச் சென்று கொண்டு இருந்த செல்லாத்தாள் “ஏன்டி… ஆத்தாளும் மயனும் கீரை புடுங்குனது பத்தாதுன்னு ஊமச்சி தடவ வந்துட்டீங்களா…? இந்தக் கொளத்துல கெடக்குற நண்டு நத்தை ஊமச்சினு எல்லாமே ஒனக்குத்தான்டி பட்டா போட்டு குடுத்துருக்கு” என்றாள்.
அவளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தபடி தன் மகனோடு கரை ஏறிக்கொண்டிருந்தாள் முத்தம்மாள்.
![]()