Advertisementsசங்கதிகள்தேர்தல் களம்முச்சந்தி

தென் கொரிய அவசரநிலை பிரகடனம்: ஆட்சியை நீடிக்க ஓர் உள்ளக சதியா!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

தென் கொரியாவில் அவசர அவசரமாக இராணுவ சட்டத்தை (Martial Law ) அமுலுக்கு கொண்டுவந்ததாக ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த வாரம் அறிவித்தார்.
சியோலில் அவசர காலத்தில், நெருக்கடிகளைச் சமாளிக்க உருவாக்கப்பட்ட ராணுவ ஆட்சி, தற்போது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும், அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும், ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிப்பதற்கும் ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்படுவதாக அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது.
வட கொரிய கிளர்ச்சியை முறியடிக்கவே, கம்யூனிச சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுத்ததாகக் கூறி அவசர நிலையை அவர் முதலில் பிரகடனம் செய்தார்.
வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜங்-உன்னை ஆதரிக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அச்சுறுத்தலை இராணுவச் சட்டம் முறியடிக்கும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் வடகொரியாவின் கிம் ஜோங் உன்னால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் கிளர்ச்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆயினும் நாடாளுமன்றத்தை கைப்பற்றும் வகையில் முயற்சி மேற்கொண்ட இராணுவத்தின் நடவடிக்கையை திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்தனர்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பலம்:
உடனடியாக சபாநாயகர் வூ வோன்-சிக் இராணுவச் சட்டத்தை நீக்கக் கோரும் பிரேரணையை சமர்ப்பித்தார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 300 பேரில் 190 பேர் கலந்து கொண்ட நிலையில் அவரது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் போது கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனையடுத்து ஜனாதிபதி யூனின் ஆட்சி முடிவடையும் நிலையை தற்போது எட்டியுள்ளது.
ஆனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவசரநிலை பிரகடன நடவடிக்கையை தடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், இராணுவச் சட்டத்தை அறிவிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையைத் தடுக்க அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்தது.
தென் கொரியாவின் வலதுசாரி ஜனாதிபதி எதிர்பாராத விதமாக இராணுவச் சட்டத்தை அறிவித்த பின்னர், தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் அழுத்தம் காரணமாக பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வட கொரிய ஆதரவாளர்களால்
1980 களில் இருந்து நாடு சந்தித்த மிகவும் கடுமையான சவால் இதுவென்றே கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளுடனான கடும் மோதலுக்கு மத்தியில் ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அறிவித்து பின் வாங்கினார்.
மட்டுமின்றி, வட கொரிய சார்பு ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களால் ஏற்பட்ட நெருக்கடி இதுவென்றும் அவர் அப்பட்டமாக குற்றம் சாட்டினார்.
அமெரிக்க ராணுவ தளம்:
வடகொரியாவுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளில் 28,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் தென் கொரியாவில் முகாமிட்டுள்ள நிலையிலேயே நாட்டின் நெருக்கடி குறித்து கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி யூனின் அறிவிப்பைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாடாளுமன்ற இராணுவச் சட்டத்தை நிராகரித்துள்ளதாக வெளியான தகவல் கூடியிருந்த மக்களிடையே மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
பொதுவாக ஜனாதிபதி யூன் தனது அரசியல் எதிரிகளை அரசுக்கு எதிரான சக்திகள் மற்றும் போலி செய்திகள் என்று முத்திரை குத்துவதில் பெயர் பெற்றவர்.
மே 2022ல் பொறுப்பேற்ற அவரது நிர்வாகம், பத்திரிகைகளுக்கு எதிராக அவதூறு வழக்குகளைப் பயன்படுத்துவதை பெருமளவில் முடுக்கிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவின் நிலைப்பாடு என்ன ?
சியோல் அரசால் அவசரநிலை பிரகடன நடவடிக்கை குறித்து வட கொரிய அரசிடமிருந்து எந்த தகவலும் இல்லை. யூன் தனது பிரகடனத்தில், வட கொரியாவை குறிவைத்து, வட கொரிய கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தலில் இருந்து சுதந்திர கொரிய குடியரசைப் பாதுகாப்பது, எங்கள் மக்களின், சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் சூறையாடும் வெறுக்கத்தக்க வட கொரிய சார்பு அரசு எதிர்ப்பு சக்திகளை ஒழிப்பது என்றும் யூன் கூறினார்.
இது போன்ற கருத்துக்கள் பொதுவாக வட கொரியாவில் இருந்து எதிர்வினையை வெளிப்படுத்தும். ஆனால் இம்முறை நாட்டின் அரசு ஊடகங்களில் இருந்து எந்த பதிலும் இல்லை.
அதிபர் யூனின் ராணுவச் சட்ட ஒழுங்கு நடவடிக்கை கலைக்கப்பட்டதாகவும், வட கொரியாவிடமிருந்து அசாதாரண நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றும் தென் ராணுவ தலைமை அதிகாரி கூறினார்.
வட கொரியாவிற்கு எதிரான தென் கொரியாவின் பாதுகாப்பு நிலைப்பாடு உறுதியாக உள்ளது என்று கொரிய யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியது.
வட கொரிய அச்சுறுத்தல்களை யூன் ஏன் குறிப்பிட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே ஏற்கனவே அதிகரித்து வரும் பதட்டங்களை இது பெரிய அளவில் பாதிக்காது என்றும் பலர் நம்புகின்றனர்.
தென் கொரியாவில் ராணுவச் சட்ட வரலாறு :
45 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக ராணுவ ஆட்சியை தென் கொரியாவில் அறிவித்து, நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
1948 இல், அதிபர் சிங்மேன் ரீ, ஜெஜு எழுச்சியை அடக்குவதை எதிர்க்கும் ஒரு கலகத்தைக் கட்டுப்படுத்த ராணுவச் சட்டத்தை அறிவித்தார். இதன் விளைவாக பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
கடந்த 1960 இல், ஏப்ரல் புரட்சியின் போது ராணுவச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. தேர்தல் மோசடிக்கு எதிரான பேரணியின் போது உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டதையடுத்து, ரீ நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்கள் பல அதிகரித்தன.
அதிபர் பார்க் சுங்-ஹீ தனது ஆட்சிக்கு எதிராக உள்ள அச்சுறுத்தல்களை அடக்குவதற்கு அடிக்கடி ராணுவ ஆட்சியை அறிவித்தார். 1980 ஆம் ஆண்டில், தென் கொரியாவின் அதிபர் பார்க் சுங்-ஹீ படுகொலை செய்யப்பட்ட பின்னர், புதிய தலைவரான சுன் டூ-ஹ்வான், நாட்டைக் கட்டுப்படுத்த ராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
இந்த நேரத்தில், குவாங்ஜு நகரில் மக்கள் அவரது அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ராணுவம் எதிர்ப்பாளர்களைத் தாக்கி, அவர்களில் பலரைக் கொன்றது குவாங்ஜு படுகொலை என்று அறியப்பட்டது.
ராணுவச் சட்டத்தை பொதுப் பாதுகாப்புக்கான நடவடிக்கையாக இல்லாமல், அரசியல் அதிகாரத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக இந்நிகழ்வுடன் தொடர்புப் படுத்தப்பட்டது.
1987 முதல், தென் கொரியாவின் அரசியலமைப்பு ராணுவச் சட்டத்தை அறிவிப்பதற்கான நிபந்தனைகளை கடுமையாக்கியுள்ளது. ராணுவ சட்டத்தை நீட்டிப்பு செய்ய அல்லது நீக்கத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.
தென் கொரிய ஜனாதிபதி படுகொலை செய்யப்படலாம்?
இராணுவச் சட்டத்தை அறிவித்து, அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ள ஜனாதிபதி யூன் பதவி நீக்கத்தை எதிர்கொள்ள இருக்கிறார். இதற்கு முன்னரும் பல தலைவர்கள், நாட்டில் அரசியல் நெருக்கடியை உருவாக்கி, பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது சிறை தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன் சிலர் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவர் Park Geun-hye. இவர் கடந்த 2016ல் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
கொடூரமான ஜனாதிபதி:
2003 முதல் 2008 வரையில் தென் கொரிய ஜனாதிபதியாக இருந்தவர் Roh Moo-hyun. சுமார் 6 மில்லியன் டொலர் லஞ்சம் வாங்கியதாக விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில், 2009 மே மாதம் ஒரு குன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தென் கொரியாவின் மிகவும் கொடூரமான ஜனாதிபதியாக அறியப்பட்டவர் Chun Doo-hwan. இவர் Gwangju விவகாரத்தை மிகவும் கொடூரமாக ஒடுக்கியவர். 1987ல் நாடு தழுவிய மக்கள் போராட்டங்களால் பதவி துறந்தார்.
ஆனால் தமக்கு நெருக்கமான இராணுவ அதிகாரியான Roh Tae-woo என்பவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார். 1996 ல், சுன் மற்றும் ரோஹ் இருவரும் 1979 ஆட்சிக் கவிழ்ப்பில் தங்களின் நடவடிக்கைகளுக்காக தேசத்துரோக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
சுனுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் அவரது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ரோஹ் 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது 17 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இருப்பினும் இரண்டு வருடங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்த பின்னர் 1998 ல் இருவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. தென் கொரியாவி சர்வாதிகாரியாக அறியப்பட்டவர் ஜனாதிபதி Park Chung-hee. தனது உளவுத்துறை தலைவரால் 1979 அக்டோபர் 26ம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
Park Chung-hee படுகொலை செய்யப்பட்டதை வாய்ப்பாக பயன்படுத்திய Chun Doo-hwan மற்றும் Roh Tae-woo ஆகிய இரு இராணுவ தளபதிகளும் 1979 டிசம்பர் மாதம் சதிச் செயலுக்கு திட்டமிட்டனர்.
இது தென் கொரிய அரசியலை மேலும் நெருக்கடிக்கு தள்ளியது. 1961ல் ஜனாதிபதி Yun Po-sun என்பவரது ஆட்சியை இராணுவ தளபதியான Chun Doo-hwan என்பவர் சதியால் கவிழ்த்தார். இருப்பினும் அரசாங்கத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் கைப்பற்றிய Chun Doo-hwan, ஜனாதிபதியாக Yun Po-sun தொடர அனுமதித்தார்.
தென் கொரியாவின் முதல் ஜனாதிபதியான சிங்மேன் ரீ, 1960 ல் மாணவர்களால் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சியின் காரணமாக ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேர்தல் மோசடியால் தனது பதவிக் காலத்தை நீட்டிக்க ரீ மேற்கொண்ட முயற்சி காரணமாக மாணவர்களின் எதிர்ப்புகளுக்கு இலக்கானார். பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் ஹவாய் தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
1965ல் அவர் இறக்கும் வரையில் ஹவாய் தீவில் வசித்து வந்தார். தற்போது ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கும் இதுபோன்ற ஒரு நெருக்கடி ஏற்படலாம் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *