வயநாடு மண்சரிவு – மீட்பு பணிகளுக்கான நவீன ரேடார்: உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 350 ஐ கடந்தது

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய மண்சரிவால் இதுவரை 350 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 300 இற்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்கள் மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி காணாமற்போனோரை தேடும் பணிகள் ஆறாவது நாளாக இன்றும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இராணுவத்தில் தரைப்படை, கடற்படை, விமானப்படை வீரர்கள், தேசிய பேரிடம் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், பொலிசார், மருத்துவ குழுவினர், கடலோர காவற்படையினர், சமூக ஆர்வலர்கள் என 11 பிரிவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, 1,264 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணிகள் இடம்பெறுகின்றன.
நவீன சென்சார் கருவிகள், ட்ரோன்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் காணாமற் போனோரை கண்டறிய முடியவில்லை என்பதால் நவீன ரேடார் கருவிகளை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உயர்தொழில் நுட்பம் கொண்ட 4 ரேடார்கள் டெல்லி மற்றும் சியாச்சினிலிருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்டன.

![]()