வயிற்று வலியை குணப்படுத்த வயிற்றை கோடாரியால் வெட்டிய பூசாரி!

இந்தியாவின் கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஜக்கப்பா கட்டா என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் ஒரு வினோத வழிபாடு இருந்து வருகிறது. அது என்னவென்றால், பக்தர்கள் தங்கள் உடல் பாகங்களில் எங்கேனும் தீராத வலி ஏற்பட்டதாக அறிந்து, அது குணமாக வேண்டி இக்கோவிலுக்கு வருகிறார்கள்.

அவர்கள் இதுபற்றி பூசாரி ஜக்கப்பா கட்டாவிடம் கூறுகிறார்கள். அப்போது பூசாரி ஜக்கப்பா கட்டா, அந்த பக்தர்களை படுக்க வைத்து அவர்களது உடலில் எங்கு வலி இருப்பதாக கூறுகிறார்களோ அந்த பாகத்தில் கற்பூரம் கலக்கப்பட்ட வெந்நீரை தடவிய கோடாரியால் வெட்டுகிறார். வெட்டியவுடன் அங்கு மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது. இவ்வாறு செய்வதால் அவர்களது தீராத வலி குணமாகி விடுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

தற்போது இதுதொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் வயிற்று வலி சரியாக வேண்டி வந்த ஒரு வாலிபர் தரையில் படுத்து இருக்கிறார். அவரது கைகளையும், கால்களையும் மற்றவர்கள் பிடித்துக் கொள்கிறார்கள்.

அப்போது பூசாரி ஜக்கப்பா கட்டா கோடாரியால் அந்த வாலிபரின் வயிற்றில் ஓங்கி 2 முறை வெட்டுகிறார். அவர் முதல் முறை வெட்டுகையில், வயிற்றை கிழித்துக் கொண்டு கோடாரி சற்று உள்ளே செல்கிறது. ரத்தமும் பீறிட்டு வருகிறது. அப்போது அந்த வாலிபர் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கிறார். இருப்பினும் அவரது கைகளையும், கால்களையும் 2 பேர் விடாமல் பிடித்துக் கொள்கிறார்கள். பூசாரி கோடாரியை எடுத்தவுடன் அந்த வாலிபரின் வயிற்றில் மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பதறிப்போயினர். மேலும் இதுபற்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு அமர்நாத் ரெட்டியின் கவனத்திற்கும் சென்றது.

உடனே அவர் இதுபற்றி நடவடிக்கை எடுக்க கூறி லோகாபுரா பொலிஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பொலிஸார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பூசாரி ஜக்கப்பா கட்டாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.

மூடநம்பிக்கைகளிலேயே நரபலிபோன்று இது ஒரு கொடூரமான மூடநம்பிக்கை என்று கூறி சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button