ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; செங்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது.
மேலும், காசா முனையின் நஸ்ரத் அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 பணய கைதிகளையும் சமீபத்தில் இஸ்ரேல் அதிரடியாக மீட்டது. ஆனால், 116 பேர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் படையினரும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அதேபோல், லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவுபெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், சரக்கு கப்பல்களை சிறைபிடிக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 12ம் தேதி ஏடன் வளைகுடாவில் செங்கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த கிரீஸ் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். நிலக்கரி ஏற்றி சென்ற அந்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியும், வெடிபொருட்களை ஏற்றிவந்த டிமோட் மூலம் இயங்கக்கூடிய படகுகளை மோதச்செய்தும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சரக்குக்கப்பலில் தீப்பற்றியது.உடனடியாக அவ்வழியாக சென்ற மற்றொரு சரக்கு கப்பலை சேர்ந்த ஊழியர்கள் தாக்குதலுக்கு உள்ளான சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகளை பத்திரமாக மீட்டனர்.
ஆனால், இந்த தாக்குதலில் ஒரே ஒரு மாலுமி கடலில் மூழ்கி உயிரிழந்தார்.இதையடுத்து, நிலக்கரியை ஏற்றிவந்த கப்பல் தாக்குதலில் பெரும் பாதிப்பை சந்தித்ததையடுத்து அது நடுக்கடலில் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலால் கைவிடப்பட்ட சரக்கு கப்பல் செங்கடலில் மூழ்கியது. ஒரு வாரமாக செங்கடலில் மூழ்கிக்கொண்டிருந்த சரக்கு கப்பல் முழுமையாக மூழ்கியுள்ளது.
![]()