கான்ஸ் விழாவில் 3 விருதுகள் இந்தியர்கள் அசத்தல் சாதனை

கான்ஸ் திரைப்பட விழாவில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இரண்டாவது உயரிய விருது உட்பட மூன்று விருதுகளை இந்தியர்கள் வென்று அசத்தியுள்ளனர்.

ஐரோப்பிய நாடான பிரான்சின் கான்ஸ் நகரில், ஆண்டுதோறும் திரைப்பட விழா நடக்கிறது. இதன், 77வது விழா, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்தத் திரைப்பட விழாவில், பல நாடுகளின் படங்கள் திரையிடப்படும்.

மூன்று பிரிவுகள்

இதில் படம் திரையிடப்படுவதே கவுரமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த, எட்டு இந்தியர்கள் அல்லது இந்தியா தொடர்புடைய படங்கள் இதில் பங்கேற்றன. அதில், மூன்று பிரிவுகளில் இந்தியர்கள் விருது பெற்றனர்.

பாயல் கபாடியாவின், ஆல் வி இமாஜின் இஸ் லைட்ஸ் என்ற படம், இரண்டாவது உயரிய விருதான, கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. இதன் வாயிலாக, கான்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா இரண்டாவது விருதை வென்றுள்ளது.

மேலும், கான்ஸ் திரைப்பட விழாவில், விருது பெற்ற முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை அவர் பெற்றார். கான்ஸ் திரைப்பட விழாவில், 1994ல், ஷாஜி கருணின், ஸ்வாஹம் என்ற திரைப்படம் விருது வென்றது. அதற்கு, 30 ஆண்டுக்குப் பின் தற்போதுதான் இந்திய படத்துக்கு விருது கிடைத்துள்ளது. முழு நீள திரைப்படத்தின் இயக்குனராக அறிமுகமான முதல் வாய்ப்பிலேயே, பாயல் கபாடியா விருது பெற்றுள்ளார்.

பிரதமர் வாழ்த்து

அவர், மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி மையத்தின் முன்னாள் மாணவி. மலையாளம் மற்றும் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம் நடித்துள்ளனர்.

மூன்று இளம்பெண்கள், மும்பைக்குச் சென்று அங்கு அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், புனே திரைப்படக் கல்லுாரியின் மாணவரான சிதானந்தா நாயக் இயக்கியுள்ள சன்பிளவர் வேர் த பர்ஸ்ட் ஒன் டு நோ என்ற படமும், அனுசுயா சென்குப்தாவின், த ஷேம்லெஸ் படமும் விருதுகள் பெற்றுள்ளன.

கான்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ள பாயல் கபாடியாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *