பாக்., பயங்கரவாத முகாம்களில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதா? ரேவந்த் ரெட்டி கிளப்பிய அடுத்த சர்ச்சை

அணு ஆயுதம் வைத்து இருப்பதால் பாகிஸ்தானை மதிக்க வேண்டும் என மணிசங்கர் பேசிய பழைய வீடியோ வெளியாகி காங்கிரசுக்கு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சியின் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது யாருக்கும் உறுதியாக தெரியவில்லை எனக்கூறியுள்ளார்.
ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது காங்., தலைவர்களுக்கு வழக்கமாகி வருகிறது. பரம்பரை சொத்து வரி, நிற வெறியை தூண்டும் கருத்து உள்ளிட்ட பேச்சுகளால் காங்., வெளிநாட்டுப் பிரிவு தலைவராக இருந்த சாம் பிட்ரோடா சமீபத்தில் பதவியை இழந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘பாகிஸ்தானுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுடன் முறையாக பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அவர்களிடமும் அணுகுண்டு உள்ளது. நாம் அவர்களை மதிக்கவில்லை எனில், அந்த அணுகுண்டை அவர்கள் நம் மீது பயன்படுத்தினால், அதற்கு நாம் பெரிய விலை கொடுக்க நேரிடும்’ என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசியுள்ள பழைய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேரம் வந்துவிட்டது
தற்போது அடுத்த சர்ச்சையை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். நேற்று( மே 10)ரேவந்த் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி அனைத்திலும் அரசியல் செய்கிறார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அனைத்தையும் செய்கிறார். அவரது சிந்தனை நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல. பா.ஜ.,வையும், மோடியையும் அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் எது கேட்டாலும் ஜெய் ஸ்ரீராம் என பதிலளிக்கின்றனர். புல்வாமா தாக்குதலை தடுக்க தவறி விட்டனர். உளவுத்துறையான ஐபி என்ன செய்தது உளவுத்துறை அ திகாரிகள் என்ன செய்தனர்.
கேள்வி
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து நடந்த விமானப்படை தாக்குதலை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முயற்சிக்கிறார். நான் அவரிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்: அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?. இந்த தாக்குதல் நடக்க ஏன் அனுமதித்தீர்கள்?நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிக்க என்ன செய்தீர்கள்? ஐபி மற்றும் ‛ரா’ படையினரின் உதவியை நாடாதது ஏன் ?
அனைத்தும் உங்களின் தோல்வி. விமானப்படை தாக்குதல் நடந்தது என யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு எங்களிடம் இருந்து இருந்தால் , யாரையும் கைவிட்டிருக்க மாட்டோம். இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறி அடுத்த சர்ச்சையை துவக்கி வைத்துள்ளார்.
வித்தியாசம்
முன்னதாக கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி கூறுகையில், 2014, 2019 தேர்தலை காட்டிலும் 2024 தேர்தல் வித்தியாசமானது. 2019ல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாக மோடி அரசு கூறியது. ஆனால், காஷ்மீர் கவர்னராக இருந்த சத்யபால் மாலிக், விமானப்படை தாக்குதல் நடந்ததை மறுத்தார். போலியாக தாக்குதல் நடத்தியதாக கூறி 2019ல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2019ம் ஆண்டு பிப்.,14ல் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் வெடிகுண்டை வீசின. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![]()