மெக்சிகோவில் காற்பந்து மன்னன் பெலேவுக்கு நிரந்தரச் சிம்மாசனம்
மறைந்த பிரேசில் காற்பந்து ஜாம்பவான் பெலேவுக்கு மெக்சிகோ காற்பந்துக் குழுவான பச்சுகா (Pachuca) அதன் ஹிடால்கோ (Hidalgo) அரங்கத்தில் நிரந்தரச் சிம்மாசனத்தை அமைத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் (2022) 29ஆம் தேதி 82 வயது பெலே காலமானதை அடுத்து உலகம் முழுதும் அவருக்காகத் தொடர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வாரம் சொந்த அரங்கில் லீக் ஆட்டத்தில் விளையாடிய பச்சுகா காற்பந்துக் குழு ஆட்டம் முடிந்ததும் அரங்கத்தில் பெலேவுக்கான சிம்மாசனத்தைத் திறந்துவைத்தது.
அந்தச் சிம்மாசனம் காற்பந்து இயக்குநர்கள் அமரக்கூடிய இடத்திற்குக் கீழே அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளமான FIFAவின் பிரதிநிதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆட்டத்தின்போது பச்சுகா விளையாட்டாளர்கள் பெலேக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரேசில் சட்டையை அணிந்திருந்தனர். அரங்கத் திரைகளில் பெலேயின் படங்கள் காட்டப்பட்டன. வெள்ளை நிற பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
இதற்கு முன் 2001ஆம் ஆண்டில் பச்சுகா குழுவின் திடல்களில் ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டதை அடுத்து பெலே அங்குச் சென்றிருந்தார்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிடால்கோ அரங்கத்தின் மறுதிறப்புவிழாவிலும் பெலே கலந்துகொண்டார்.
![]()