சங்கதிகள்

எஸ்.பி.ஐ.,யிடம் ரூ.14 ஆயிரம் கோடி கடன் கேட்கும் அதானி குழுமம்

அதானி குழுமம் குஜராத்தின் முந்த்ராவில் நிலக்கரியிலிருந்து பிவிசி தயாரிக்கும் ஆலையை அமைப்பதற்காக எஸ்.பி.ஐ.,யிடம் ரூ.14,000 கோடி கடன் கேட்டு அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த நிதியாண்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் பெட்ரோ கெமிக்கல் தொழிலில் இறங்கியுள்ளதாக அறிவித்தது. முந்த்ராவில் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறியது. அதன் ஒரு பகுதியாக ஆண்டுக்கு 2 ஆயிரம் கிலோ டன்கள் பிவிசி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இத்தகவல் சுற்றுச்சூழல் அனுமதிக்கான இணையதளத்தில் உள்ளது. உப்பு, சுண்ணாம்பு, நிலக்கரி மற்றும் பொட்டாசியம் குளோரைடு ஆகியவை பிவிசிக்கான மூலப்பொருட்கள் என்றும், அதன் மூலம் சஸ்பென்ஷன் பிவிசி, குளோரினேட்டட் பிவிசி மற்றும் எமுல்ஷன் பிவிசி ஆகியவற்றை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நிலக்கரியிலிருந்து பிவிசி உற்பத்தி செய்யும் திட்டத்தை பகுதி பகுதியாக கட்டமைக்க உள்ளது. முதல் கட்டமாக ஆண்டுக்கு ஆயிரம் கிலோ டன் பிவிசி தயாரிக்கும் திறன் கொண்ட ஆலையை 2024க்குள் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்தின் மொத்த முதலீடு ரூ.19,000 கோடி. அதில் ரூ.14,000 கோடியை கடனாக எஸ்.பி.ஐ.,யிடம் கேட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த மார்ச்சில் நவி மும்பை விமான நிலைய திட்டத்திற்கு ரூ.12,770 கோடி கடனுக்கு எஸ்.பி.ஐ., ஒப்புதல் அளித்தது. அதனை விட அதிகத் தொகையை தற்போது கேட்டுள்ளனர். இதனை அடைப்பதற்கான கால அளவு 15 ஆண்டுகள் என்றும், குறைந்தபட்ச வட்டி விகிதமாக 7.45% இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் எஸ்.பி.ஐ., இந்த கடனுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டு, குறிப்பிட்ட அளவை பிற வங்கிகளுக்கு விற்கக் கூடிய யோசனையிலும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *