Featureகட்டுரைகள்

இலங்கையும் தொடர் பேசுபொருளாகிய மக்கள் போராட்டமும்!…. (பகுதி:2) ….. ஏலையா க.முருகதாசன்

2.பௌத்தமத குருமார்களின் அரசியல் பங்காற்றலை அறிந்து கொண்டோர்.

3.தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசுவோரைப் பற்றியது.

இலங்கையை சிலந்தி வலையில் அகப்பட்ட பூச்சியாக திணறும் நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் அன்பு மார்க்கத்தை உதாசீனம் செய்து,மத வழிகாட்டல் என்ற பெயரில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சிங்கள மக்கள் மத்தியில் இலங்கை ஒரு பௌத்த நாடு,சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தான மதந்தான் பௌத்த மதம் கௌதம புத்தர் இந்த மண்ணிற்கு வந்திருக்கிறார் தலதா மாளிகையில் வைத்திருக்கும் கௌதம புத்தரின் பல் தமது மதத்தின் புனித சின்னம் கௌத புத்தரின் உடல் சார்ந்த உறுப்புக்களின் பகுதி இலங்கையிலிருப்பதற்கு சிங்கள மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அந்தப் புனிதரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரே மக்கள் சிங்கள மக்கள் மட்டுமே என்ற மதப் பிரசாரத்தை தேராவாத தீவிர தன்மையுடன் தொடர்ச்சியாக புத்தபகவான் திருவுருவத்தை வணங்க வரும் சிங்கள மக்களுக்குச் சொல்லிச் சொல்லியே அவர்களின் மூளைக்குள் இலங்கை தங்களுடைய நாடு மட்டுமே என்ற அரக்காத எண்ணப் படிமத்தை தீவிரபோக்குடைய புத்த பிக்குகள் புகுத்தி வைத்திருக்கிறார்கள்.

„புத்த துறவிகள்’ என்ற பற்றற்ற கருத்துக்கும் தீவிரப் போக்குக் தனத்திற்கும் எக்காரணத்தைத் தொட்டுச் சிந்தித்தாலும் அவை இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று ஒரே தன்மைத்துடையவையல்ல.எனினும் கட்டுரையின் உள்ளீட்டுப் பொருளடக்கத்திற்கு அது விளித்தலுக் தேவையாக இருக்கின்றது.

மதப் பிரச்சாரம் செய்யப்படும் உத்திமுறையிலும் அணுகுமுறையிலும் புத்த பிக்குகள் மிகவும் நுட்பமான முறையில் மலர்களுக்கிடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய விசப்பாம்புகளுக்கு ஒத்ததாக இலங்கையில் இருக்கும் மற்றைய மொழிவழி மதவழி இனங்களை சிங்கள மக்கள் வெறுக்கும் அளவுக்கும் அவர்களையும் மனிதர்களாக கணக்கிலெடுக்காத அளவுக்கு இலங்கை ஒரு சிங்கள தேசமே என்ற கடும் போக்குத் தன்மையை விதை;து விடுகிறார்கள்.

இதனை புத்தபிக்குகள் கட்டம் கட்டமாகச் செய்கிறார்கள்.புத்தபெருமானின் திருவுருவத்தை வணங்கச் செல்லுகின்ற பொதுவழிபாடுகளில் கருணைமிகு போதனைகளைச் சொல்வதும், அது தவிர்ந்து மதக் கூட்டங்களில் புத்தமதத்தை தழுவும் சிங்கள மக்கள் கலந்து கொள்கையில் அங்கு புத்தரின் போதனைகளுக்கு அப்பால் புத்த மதம் இலங்கையில் நிலைத்து நிற்க வேண்டுமானால் சிங்கள மக்கள் இலங்கையில் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமனால் சிங்கள மக்களை புத்தமத வழியாக இணைக்கப்பட்டு ஒரு புத்தசாசன நாடாளுமன்றமே அதற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்பதை பசுத்தோல் போர்த்த புலிக்கொப்பாக புத்தபிக்குள் சிங்கள மக்களை புத்தமதத்தை மட்டுமே கொண்ட ஒரு அரசு இலங்கைக்குத் தேவையென்பதை சொல்லி அவர்களை இசைவாக்கம் உள்ள மக்களாக மாற்றிவிடுகிறார்கள்.

தமது நாடாளுமன்ற இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கிடைக்கும் சலுகைகள் அல்லது வரப்பிரசாதத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளுவதற்காகவும் மக்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட தீப்பந்தமே இனவாதம் பேசுதல் என்பதாகும்.

தன்னினம் நோக்கியும் தன்மதம் நோக்கியும் எந்த மொழிசார் இனத்தவரானாலும் சரி மதம்சார் இனத்தவரானாலும் தம்மக்கள் மத்தியில் ஒருவர் தொடர்ந்து வலியுறுத்திப் பேசுவாரனால் இன மதவெறி உட்பட்ட இனத்துவேசத்தையும் மக்கள் மனங்களில் பதிய வைப்பதற்குச் சமனேயாகும்.

இது சிங்கள இனவாதிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் இனவாதிகள் உட்பட தம்மதம் மட்10டுமே சிறந்தது உயர்ந்தது என்ற தீவிர மதவெறிச் சித்தாந்தம் கொண்ட மதரீதியாக மற்றைய மதங்களோடு இணக்கப்பாடு இல்லாத மதம் சார்ந்த அனைத்து மத அடிப்படைவாதிகளுக்கும் இது பொருந்தும்.

இலங்கையில் பௌத்தமதக் கோட்பாடு என்பது ஒரு ஆயுதகலாச்சாரத்துக்கு ஒப்பான இனவாதத்தை நாக்குவழித் தூண்டுதல் கொண்ட இன ஒடுக்குமுறைக்கு வித்திடும் நிலையாக மாறியுள்ளது.

ஒரு நாட்டினுடைய பொருளாதார நிதிக் கட்டமைப்புகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதை திசைதிருப்புவதே நூற்றுக்கு தொண்ணூற்றைந்து வீத புத்த பிக்குகளின் மோசமான சிந்தனையாக இருக்கின்றது.

இனரீதியாகவும் இனவாத ரீதியாகவும் அரசாள விரும்பும் இனவாத அடிப்படைவாத அரசியலாளர்களுக்கு இத்தகு புத்த பிக்குகளின் செயல்பாடு துணை போகின்றது.

இனவாத அரசியல்வாதிகள் புத்தபிக்குகளைப்; பயன்படுத்துவதும் , புத்த பிக்குகள் இனவாதிகளைப் பயன்படுத்துவதும் இவ்விரு தரப்பினரும் அவ்வணுகுமுறைக்கு ஒத்துப் போவதையும் காணக்கூடியதாகவிருக்கின்றது.

இன்றைய உலகச் சூழல் வணிகத்தை கையாளுதல் என்ற முறைமையிலும் ஒவ்வொரு நாட்டினுடைய பொருளாதாரம் நிதிநிலைமைகள் போன்றவை ஒன்றக்கொன்று தொடர்புடையதாக இருக்கின்றமையும் எந்தவொரு நாட்டில் உற்பத்திக் குறைவோ மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடடோ,விலையேற்றங்களோ ஏற்படும் போது, அந்தந்த நாடுகளை இறக்குமதிக்காகவும் ஏற்றுமதிக்காகவும் சார்ந்திருத்தலுக்கு ஏற்றவாறு பாதிப்புகளை நாடுகள் சந்திக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை இன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மக்கள் வாழ்வியல் பாதிப்பு என்பது ஒரு வறுமையுள்ள நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு எனக் கருத முடியாது.

அதற்கு இலங்கையின் ஆரம்பகால பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்து ஆய்வுரீதியாக பார்க்க வேண்டியுள்ளது.

கிட்டத்தட்ட சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை பொருளாதாரத்தில் சிறந்து விளங்கியே இருந்தது.பணக்கார நாடாகவும் இருந்திருக்கின்றது.

முன்பு ஆட்சியாளர்களின் முழுக்கவனமும் இலங்கையின் வளங்களின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்தும்,இலங்கையின் உற்பத்தி வளங்கள் பாதிக்காத வகையில் இறக்குமதி செய்தும் இலங்கை மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்க வேண்டுமென்பதில் கவனம் செலுத்தினர்.

ஆசியாவில் ஒரு பணக்கார நாடாக,இலங்கைக்குப் போனால் சொர்க்கத்தில் வாழ்வது போல வாழலாம் என இந்திய மக்களை எண்ண வைத்த இலங்கையின் இன்றைய இந்நிலைக்கு யார் காரணம் என்றால் ஆட்சியாளர்களின் அரசியல், பொருளாதார அறிவின்மையே என்று துணிந்து சொல்லலாம்.

ஒரு பார்வையாக இலங்கையின் இன்றைய சூழலுக்கு உலகப் பொது வணிக நிலையே காரணம் எனச் சொல்வது ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான் என தெளிந்த போதிலும்,உலகுசார் வணிகக் கொள்கை, பொருளாதார நிதிக் கொள்கை நாளுக்கு நாள் மாறும் என்பதை அறியாதோராக ஆட்சயிpலிருப்பவர்களும், நாடாளுமன்றத்தில் இருப்போரும் வெறும் எண்ணிக்கைக்காவே இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பவர் யார்?.அவர்களை ஏன் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும?;, அவர்களால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன? என்பதைச் சிந்திக்கும் போது, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தாம் எந்த மக்களின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டோமோ என்பதற்கப்பால்,நாட்டின் எந்தப் பகுதி மக்களாக இருந்தாலும் அவர்கள் எந்த மொழிவாரி இனமாக இருந்தாலும்,எந்த மதத்தைத் தழுபுபவராக இருந்தாலும் அந்த மக்களுக்காகவும் அவர்களும் இலங்கையர்கள் என்ற அன்புடன் அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களின் வாழ்க்கைக்கு முக்கியத்துவமாக இருக்கும் அனைத்துத் துறைசார்ந்தும் அடிப்படை அறிவுக்கு மேல் இருத்தல் வேண்டும்.

அந்தந்த துறைக்கு தகுதிகாண் அமைச்சர்களையே நியமிப்பதும், அவர்களைப் போல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

உதாரணமாக எட்டாம் வகுப்பு படித்த ஒருவரைக் கல்வியமைச்சராக நியமித்தல் என்பது ஒரு ஆட்சியின்: தகுதியின்மையையே காட்டும்,அது கல்வித்துறையைச் சீரழிக்கும்.அமைச்சர்கள் என்பவர்கள் தமது அமைச்சின் அதிஉச்ச கல்வித் தகுதி கொண்டு செயலாற்றும் அதிகாரிகளைவிட அதற்கும் மேலான துறைசார் தகுதியுள்ளவராக இருத்தல் வேண்டும்.

இலங்கையில் இத்தகுதிநிலை இனவாதப் பார்வையால் இனவாதிகளை அமைச்சர்களாக நியமிக்கும் நிர்பந்த நிலைக்குத் தன்னை இட்டுச் சென்றிருக்கிறது.

இலங்கையின் பொருளாதார நிதிக் கட்டமைப்பு என்பது பெருபான்மை இனமக்களை மட்டுமே சார்ந்தது அல்ல.சிறுபான்மையின மக்களையும்

சார்ந்ததே.ஆனால் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களை மட்டுமே சார்ந்தது எனத் தவறான கணிப்பீட்டைச் செய்துவிட்டார்கள்.

அவ்வாறு ஆட்சியாளர்கள் தமது பெருபான்மை இருப்பின் நிமித்தமாக இறுமாப்புக் கொள்வார்களாயின் அதைவிட அறிவிலித்தனம் வேறில்லை.

இன்றைய பொருளாதாரச் சூழலும்,விலைவாசி ஏற்றங்களும் ஐரோப்பிய நாட்டு மக்களையே கதிகலங்க வைக்கையில் தனக்குத் தானே வறுமை நிலையை ஏற்படுத்திக் கொண்ட இலங்கை இனவாதக் கொள்கையால் உலகப் பொதுப் பொருளாதாரச் சிக்கலை தனது நாட்டுக்கு ஏற்றவாறு கணிப்பீடு செய்து நிவர்த்தி அடைய முடியாத நிலைக்குச் சென்று உள்ளது.

அடுத்துத் தொடர்வது:

4.தமிழீழம் இனியும் சாத்தியமாகும் என நம்புவோர், நினைப்போர்.

5.எல்லாச் சூழ்நிலைகளும் அரசியல் பேரம் பேசுதலுக்கு உகந்தவை என ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவோர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *