Featureகட்டுரைகள்

மிளிரும் மகாராணி!… எஸ்.ஜெகதீசன்.

மகாராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ஸர் 2 , பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் அரசியாக தொடர்ந்து 70 வருடங்கள் ஆட்சி புரியும் ஒரு மாதரசி என்ற பெருமையுடன் அவுஸ்திரேலியாவிலும் பவள விழா (Platinum Jubilee) கொண்டாடும் முதலாவது மா அரசி என்ற சாதனையையும் தனதாக்குகின்றார்.

முடியாட்சிக்குட்பட்ட நாடு என்ற வகையில் அவுஸ்திரேலியாவும் மாட்சிமை தங்கிய மகாராணியின் பவள விழாக் கொண்டாட்டங்களை ஜூன் 2 வியாழன் முதல் ஜூன் 5 ஞாயிறு வரை விமரிசையாக்கு வதற்கான முனைப்புகளை மாகாண ரீதியாக முன்னெடுத்துள்ளது.

இக் கொண்டாட்டங்களையொட்டி ஐக்கிய ராஜ்ஜியத்திலும் , அவுஸ்திரேலியாவிலும், இதர 52 பொதுநலவாய நாடுகளிலும் ஏற்றப்படும் தீப் பந்தங்கள் (Beacons) ஊடுருவி ஒளியூட்ட பல்வேறு வகையான நிகழ்வுகள் பிரமாண்டமாக ஆண்டு முழுவதும் நடைபெறும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் தலை நகர் கான்பெராவில் உள்ள பெர்லி கிரிபின் ஏரியின் ( Lake Burley Griffin) செயற்கைத் தீவான ஆஸ்பென் தீவு பெயர் மாற்றம் பெற்று மகாராணி எலிசபெத் 2 தீவு என்று அழைக்கப்படும்.

அவுஸ்திரேலியாவின் தலை நகரில் உள்ள நினைவுச் சின்னங்கள் பலவும், கட்டிடங்கள் சிலவும், ஊதா நிற மின்னணுக்களால் விசேட கவர்ச்சி காட்டி ஒளிரும்.

மாகாணங்களின் பிரதம பட்டினங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச அலுவலகங்கள் மின் அலங்காரங்களால் மிளிரும்.

வருடம் பூராவும் சீரொளியின் (Laser) ஒளியலைகள் நாடு முழுவதும் ஆங்காங்கே வர்ண ஜாலமிடும்.

அரசியின் அவுஸ்திரேலியாவிற்கான 16 விஜயங்களையும் அழகுறச் சித்தரிக்கும் வகையில் அரசியும் நாமும் என்ற தலைப்பில் புகைப்படங்கள், நினைவுச் சின்னங்கள் என்பனவற்றுடன் தேசிய கண்காட்சி அலங்கரிக்கும்.

அரசியின் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் பார்வையாளர்களுக்கு நாடளுமன்றத்தினுள் மகுடமிடும்.

நாடு முழுவதும் மரங்கள் நடுவதை ஊக்குவிக்கவென 15.1 மில்லியன் டொலரை அரசு வழங்கவுள்ளது ராணியின் பெயர் சொல்லியே விண்ணின் கைகளை மண்ணின் கைகள் குலுக்கிட வழி கோலுவது போலாகும்!

400 000 பேர் கடந்த தடவை கலந்து கொண்ட, சுமார் 140 வருடங் களாக தொடர்ந்து குயின்ஸ்லாந்தில் பிரிஸ்பேர்ணுக்கு அண்மித்ததாக நடைபெற்று வரும், ஏக்கா (Ekka) விவசாய கண்காட்சியில் இம்முறை அரசியின் பவள விழாவை முன்னிட்டு விசேட கேக் அலங்காரப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. (விரும்பியவர்கள் 27.05.2022 க்குள் பதிவு செய்யலாம்)

பவள விழாவை முன்னிட்டு மிகவும் கவர்ச்சிகர இலட்சினை ஒன்றை வடிவமைத்துள்ளது அவுஸ்திரேலியா.

நாவல் நிறப் பின்ணணியில், தங்க வெள்ளியில் ஆவுஸ்திரேலியாவின் தேசியப் பூவான கரு வேலம் பூ அல்லது வளார் பூ (Golden Wattle) கண்களுக்கு பகட்டளிக்கும் விதத்தில் அமைந்துள்ள இந்த இலட்சினையை பவள விழா தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அலுவல்கள் அனைத்திலும் உத்தியோகபூர்வமாக பயன் படுத்தலாம்.

1954 ம் ஆண்டு ராணியின் முதலாவது அவுஸ்திரேலியா விஜயத்தின் போது வழங்கப்பட்ட மார்பூசியை (Brooch) நிகர்த்ததாகவும் நினைவில் நிறுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.

அந்த மார்பூசியையே அதன் பின்னரான சகல அவுஸ்திரேலியா விஜயங்களுக்கு மட்டுமின்றி, பொதுநலவாய நாடுகள் தினம் ,நத்தார் பண்டிகை, பிரமுகர்கள் சந்திப்பு, அரச திருமண வைபவங்கள், குடும்ப குதுகலங்கள் என எங்கும் அணிந்து மகிழ்வது இன்று வரை மகாராணியின் வழக்கம்.

உலகம் முழுவதிலும் பவள விழா கொண்டாட்டங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு எதிர்பாராத பலதால் மெருகூட்டப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது!

– வெளியிடப்படும் முத்திரைகள்,பதக்கங்கள், ஒவியங்கள் திரும்பித் திரும்பிப் பார்க்க வைக்கும்!

– சாமானியர்களுக்கும் சாம்ராஜ்ஜியம் அளிக்கும் தெரு விருந்து நிச்சயமாய் பெரு விருந்தாகும்!

பிரித்தானியாவில் கோலாகல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால் பவள விழாவின் பிரமிப்புக்கு குறைவிராது.

1 400 க்கும் மேற்பட்ட வீரர்கள், , 200 குதிரைகள் 400 இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் பாதுகாவலர்கள் முறைமாறும் மரபார்ந்த விசேட நிகழ்ச்சி, செயின்ட் பால் கதீட்ரலில் ராணியின் ஆட்சிக்கான சிறப்பு ஆராதனை ஆகியவற்றில் மகாராணி சமூகமளிப்பார்.

சாண்ட்ரிங்ஹாம் கோட்டை, மற்றும் பால்மோரலின் மாளிகை போன்ற அரச இல்லங்கள் பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்படுதல் நாடெங்கும் பெரு விருந்தாய் தெரு விருந்து ஆகியவற்றில் பொது மக்களின் சமூகம் எகிறும்.

அரண்மனையை அண்மித்த பகுதிகளில் 70 000 மக்கள் தெரு விருந்தில் ‘கை நனைக்க’ முன்கூட்டியே பதிவு செய்துள்ள மை கண்டு உலகமே பிரமிக்கின்றது!

பாதுகாவலர்கள் முறைமாறும் மரபார்ந்த விசேட நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ், அவரது இரண்டாவது மனைவி கமிலா, முதலாவது மனைவி டயானாவின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்ஸ், அவரின் மனைவி கேட், பிள்ளைகளான இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட், இளவரசர் லூயிஸ், ராணியின் இளைய மகன் இளவரசர் எட்வேட், அவரது மனைவி சோபி, குழந்தைகளான லூயிஸ், ஜேம்ஸ் ராணியின் ஒரே மகளான இளவரசி ஆன், அவரது கணவர் லாரன்ஸ் ஆகியோருடன் ராணியும் உப்பரிகையில் வீற்றிருப்பர்.

அரண்மனை உப்பரிகையில் கலந்து கொள்வதற்கு இளவரசர் அண்ரூ, இளவரசர் ஹரி அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகிய மூவருக்கும் எலிசபெத் மகாராணி தடை விதித்துள்ளார்.

மகாராணியின் மகனான 62 வயதான அண்ரூ பாலியல் வன் கொடுமை தொடர்பான சீற்றத்துக்கு உட்பட்டிருந்தார். 37 வயதுடைய பேரன் ஹரி தனது மனைவி மேகன் மார்க்கலுடன் அரச வாழ்வைப் புறக்கணித்து அமெரிக்காவில் குடியேறினார்.

ராணி தனது உடல்நிலை மற்றும் வயது முதிர்வு காரணமாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொள்வார் என்றாலும் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து மைல்கல்லின் பல்வேறு பொது நினைவு நிகழ்வுகளில் பங்கேற்பார்கள்.

அவுஸ்திரேலியாவிற்கான முடி சூடிய அரசியான இவர், 1988 ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் சிம்மாசன உரையையும் வழங்கியிருந்தார்.

16 தடவைகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வமாக பயணித்துள்ள இவர் ஒட்டு மொத்தமாக 120 நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

முடிக்குரிய ராணியான பின் இவருடன் சேர் றெபேர்ட் மென்ஸிஸ் முதல் ஸ்கார்ட் மொரிஸன் வரை 16 பிரதமர்கள் அவுஸ்திரேலியாவில் பதவி வகித்துள்ளனர். வின்சன்ட் சேர்ச்சில் முதல் போரிஸ் ஜோண்ஸன் வரை 14 பிரதமர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் பதவி வகித்துள்ளனர்.

முடியாட்சி முறை நடைமுறையிலிருப்பினும் நாடாளுமன்ற அன்றாட அலுவல்களில் அரசியின் பங்களிப்பு இருப்பதில்லை.

நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் மூலம் தெரிவான புதிய பிரதமரின் நியமன கோரிக்கையை அனுமதிப்பது, அல்லது பதவியிலுள்ள பிரதமரின் ராஜினாமாவை ஏற்பது, ஒவ்வொரு புதிய அமர்வையும் சிம்மாசன பிரசங்கத்துடன் ஆரம்பித்து வைப்பது, இரு சபைகளாலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு சட்டபூர்வமாக அரச அங்கீகாரம் வழங்குவது, அல்லது தடுப்பாணை (Veto) மூலம் நிராகரிப்பது, பரிசீலனைக்கு வரும் விசாரணைகளுக்கும், உத்தரவுகளுக்கும் , பிரகடனங்களுக்கும் கோமறை மன்றத்தின் (Privy Council) தலைவியாக ஒப்புதல் அளித்து நடைமுறைப் படுத்துவது போன்றன மகாராணியின் பிரதம பணிகளாகும். தேவைவரின் போர்ப் பிரகடனம் செய்வதும் இவரது கடமையாகும்.

இவற்றுள் போர்ப் பிரகடனம் கோமறை மன்றத்தின் ஒப்புதல் தவிர்ந்த ஏனையவற்றை அவுஸ்திரேலியாவில் மகாராணியின் பிரதிநிதியாக மகா தேசாதிபதி டேவிட் ஹர்லி கவனித்துக் கொள்கின்றார்.

அவுஸ்திரேலியப் பிரதமரின் சிபார்சின் பெயரில் நாடு முழுவதுக்குமான மகா தேசாதிபதி ஒருவரையும்,மா நில முதல்வர்களின் ஆலோசனையுடன் ஆறு மா நிலங்களில் ஆளுனர்களையும், இரு மண்டலங்களிலும் வேறு சில சிறிய பிராந்தியங்களிலும், நிர்வாகிகளையும் சட்டபூர்வமான தனது பிரதி நிதிகளாக நியமிப்பது அரசியின் அதிகாரம்.

வில்லியம் மக்கல் முதல் டேவிட் ஹர்லி வரை 19 தேசாதிபதிகள் இவர் அரியணை ஏறியது தொடக்கம் இன்று வரை பதவியில் இருந்துள்ளனர்.

பிரித்தானிய நாடாளுமன்ற கூட்டத் தொடரை வருடாவருடம் தனது சிம்மாசனப் பிரசங்கத்துடன் ஆரம்பித்து வைக்கும் மகாராணி 1959 லிலும் 1963 லிலும் கர்ப்பமுற்றிருந்தமையாலும் 2022 ல் இயலாமையினாலும் தவற விட்டிருந்தார்.

முடிக்குரிய அடுத்த வாரிசான இளவரசர் சார்ல்ஸ் முதன்முறையாக இம்முறை சிம்மாசனப் பிரசங்கத்துடன் பிரித்தானிய நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்தார்.

இவரது பூட்டி அலெக்ஸாண்ட்ரா. பாட்டி மேரி. தாய் எலிசபெத். மூவரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி என பெயர் பெற்றார். வின்ஸர் என்பது வம்சப்பெயர். லில்லிபெத் என்பது அவரது செல்லப் பெயர்.

பிரித்தானிய அரச பரம்பரையில் அரசரை மணம் புரிபவர் ராணி என அழைக்கப்பட்டாலும் அரசியை மணம் புரிந்தவர் அரசன் என அழைக்கப்படுவதில்லை. சிம்மாசனத்தை வாரிசாகப் பெறுபவர் மட்டுமே அரசர் என அழைக்கப்படுவர். தந்தையின் அல்லது கணவனின் பெயரை தமது பெயருடன் சேர்த்துக் கொள்ளாது வம்சத்தின் பெயரை இணைப்பதே பிரித்தானிய அரச மரபு.

ஏலவே 1558 முதல் 1603 வரை ஆட்சி செய்தவர் எலிசபெத் 1 என்று குறிப்பிடப்படுகின்றார். அதனால் சம்பிராதாய பூர்வமாக இவர் எலிசபெத் 2 என்று அழைக்கப்படுகின்றார்.

எலிசபெத் என்றால் ‘கடவுளே என் சத்தியம்’ என்பது ஹீப்ரூ மொழியில் அர்த்தமாகும். ‘சத்தியமே கடவுள்’ எனப் பொருள் கொள்வோருமுளர்.

அரச பரம்பரை ஆட்சியின் நீட்சியாக அரியணையில் அமர்ந்திருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு இளவரசர் எட்வேட், இளவரசர் ஆல்பேட் எனும் புதல்வர் இருவர். தந்தையின் மறைவின் பின் முடிக்குரிய வாரிசான எட்வேட்டை அரியணையில் அமரவிடாது தடை செய்த வாலிஸ் சிம்ஸன் எனும் குடிமகளுடன் ஏற்பட்ட காதல், அடுத்த வாரிசான ஆல்பேட்டை காதலுடன் மன்னராக்க, ஆறாம் ஜோர்ஜ் என்ற புதிய பெயருடன் 1936 ல் முடி சூடிக் கொண்டார் இளவரசர் ஆல்பேட்.

இளவரசர் ஆல்பேட்டிற்கும் அவரது மனைவி எலிசபெத்துக்கும் இரு மகள்மார்.மூத்தவர் எலிசபெத். இளையவர் மார்கிரெட ரோஸ்.

மூத்தவரான எலிசபெத்தின் பிறந்த தினம் 1926 ஏப்ரில் 21ம் திகதி எனினும் பொது மக்களும் கொண்டாட்டங்களில் சிரமமின்றி கலந்து கொள்ளும் விதத்தில் கால நிலையை கருத்தில் கொண்டு யூன் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையிலும் கொண்டாடப்படுகின்றது.

1947 ம் ஆண்டு எடின்பரோ கோமகன் பிலிப் மவுண்ட் பேட்டனை மணம் புரிந்து சார்ள்ஸ் , ஆன், அண்ரூ, எட்வேட் ஆகிய பிள்ளைகள் நால்வரை பெற்றார். 8 பேரப்பிள்ளைகளும் 12 பூட்டப்பிள்ளைகளும் உண்டு. 2021 ல் கணவர் 99 வயதில் காலமானார்.

1952 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ம் திகதி அரசியானார்.

எனினும் 1953 ம் ஆண்டு யூன் மாதம் 2 ம் திகதியே முடி சூடிக் கொண்டார்.

இடையே உள்ள 16 மாதங்கள் போலவே நீண்ட காலத்தை அஞ்சலிக்காக ஒதுக்குவது அரச வழமை.

தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக நேரலை ஒளிபரப்பானது அவரது முடி சூட்டு விழாவாகும்.

அதனை 277 மில்லியன் மக்கள் உலகெங்கும் பார்த்துப் பரவசமடைந்தனர்.

இந்தியாவிலிருந்து பெறப்பட்ட பாரிய கோஹினூர் வைரம் அவரது முடியில் அன்று ஒளிர்ந்தது இன்றும் தமது கண்களில் மிளிர்வதாகக் கூறுவதற்கு இன்னமும் பலர் உளர்.

பாடசாலை எதற்குமே செல்லாத இவர் அரசியலமைப்பு ,வரலாறு, சட்டம், கணிதம், பிரான்சு மொழி போன்றவற்றை பிரத்தியேக விரிவுரையாளர்கள் முலம் வீட்டிலிருந்தவாறே கற்றுத் தேர்ந்தார்.

கணிதம் கற்பித்து கொடுத்தவர் அடங்காத் தமிழன் செல்லப்பா சுந்தரலிங்கம் என கணக்கு காட்டுவோருமுளர்.

ஆறு வயதாக இருக்கும் பொழுது இல்லமொன்றின் உரிமையாளர் ஆனார்.

‘சிறு குடில்’ என அழைக்கப்பட்ட அதனை வேல்ஸ் மக்கள் இவருக்கு அன்பளிப்புச் செய்திருந்தனர்.

ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள பெரும் பணக்காரர்கள் 1000 பேரில் 372 வது இடத்தில் உள்ள இவரின் இன்றைய சொத்து மதிப்பு 365 மில்லியன் பவுண்ட்ஸ் ஆகும். 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் இவரது பெயரில் உள்ளது.

86.7 மில்லியன் பவுண்ட்ஸ் இறையாண்மை மானியமாக (சம்பளமாக) வருடத்துக்கு ஒரு முறை பிரித்தானிய அரசிடமிருந்தும் மேலும் சில மில்லியன் பவுண்ட்ஸ்களை தனிப்பட்ட சொத்துகளின் மூலம் வருமானமாகவும் பெற்றுக் கொள்ளும் இவர் அதற்கான வருமான வரி செலுத்தத் தேவையில்லை எனினும் 1992 ம் ஆண்டு முதல் தானாகவே முன்வந்து தனது தனிப்பட்ட வருமானத்திற்கு சமனான வரியை வருடந்தோறும் செலுத்தியும் வருகின்றார்.

ராணுவ சங்கங்கள், தொழில் முறை மற்றும் பொது சேவை அமைப்புகள், 600 க்கும் மேற்பட்ட தர்ம தாபனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் தலைவியாக இருந்து தன்னார்வத் தொண்டு செய்து வருகின்றார்.

அவரிடம் முதலாவது மின்னஞ்சல் 1976 லிலும் படவரி (Instagram) 2019 லிலும் பாவனைக்குட்பட்டதாக பதிவாகியுள்ளன.

குதிரைச் சவாரி, புறாப் பந்தையம், உதை பந்தாட்டம் போன்றன அவர் ஆர்வமுள்ள பொழுது போக்குகள் ஆகும்.

தொப்பி அணிவதில் அளப்பரிய விருப்பம் உள்ளவர் அவரைப் போல் வேறு எவருமிலர்.

இரு தடவைகள் ஒரே உடையில் அதிகார பூர்வமான நிகழ்வுகள் எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை.

1969 ம் ஆண்டு முதல் நத்தார் தினத்தில் தொலைக்காட்சி ஊடாக அவரது உரை பெரிதும் விரும்பிக் கேட்கப்படும்.

கடவுட் சீட்டு இன்றியே உலகெங்கும் பயணிக்கும் அதிகாரமும் , சாரதி அனுமதி பத்திரம் இன்றியே ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதும் வாகனம் செலுத்தும் அதிகாரமும் இவரிடம் உள்ளது.

இவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது.கைது செய்ய முடியாது.

அவரது தலை கீழாக உள்ள நிலையில் தபால் தலைகளை ஒட்டுவது ‘முடிக்குரிய’ குற்றம்.

இங்கிலாந்தின் தேம்ஸ் நதியில் உள்ள அன்னப் பறவைகள் இவருக்குச் சொந்தமானவை என்பதும் இங்கிலாந்தின் கடற் பரப்பில் மூன்று மைல்களுக்குட்பட்ட திமிங்கலங்கள், டொல்பின்கள் மற்றும் கோழி மீன் அல்லது துடுப்பு மீன் என அழைக்கப்படும் (Sturgeon) சுறா வகை மீன்கள் கூட இவராலேயே ஆளப்படுகின்றன என்பதும் அரிய ஜீவராசிகளுக்கும் இவர் வழங்கும் பாதுகாப்பை உரிய மனித ஜன்மங்களுக்கே பாதுகாப்பு வழங்காத நாடுகள் கண்டு கொள்ள வேண்டும்.

45 நாடுகளின் நாணயத்தில் இவரது முகம் உள்ளது உட்பட ஏராளமான சாதனைகளுக்கு உரியவராக இவர் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

இது வரை 70 வருடங்கள் மகாராணியாக வீற்றிருக்கும் இவர், 1837 முதல் 1901 வரை 63 வருடங்கள் மகாராணியாகத் திகழ்ந்த இவரது பூட்டியான விக்டோரியா மகாராணியின் சாதனையை 2015 ல் முறியடித்தார்.

2024 வரை ஆட்சி புரிவாரெனின், 1643 முதல் 1715 வரை 72 வருடங்கள் மன்னராக இருந்த பிரான்ஸ் நாட்டின் 14 வது லூயிஸின் சாதனையையும் முடிவுக்குக் கொண்டு வருவார்.

பழங்கால மன்னர்கள் பலர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்து சாதனை படைத்து இருக்கிறார்கள்.

மராட்டிய மாநிலம் பல்தான் என்ற பகுதியை ஐந்தாம் முதோஜி ராவ் நாயக் நம்பால்கர் 1841 முதல் 1916 வரை 75 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பதற்கும் குஜராத் மாநிலம் கோண்டல் என்ற பகுதியை மன்னர் பகவத்

சிங் சாஹிப் 1869 முதல் 1944 வரை 75 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பதற்கும் வரலாற்று குறிப்புகள் இருக்கின்றன.

ரோமப் பேரரசின் ஒரு பகுதியான ஹென்னெபெர்க் என்ற நாட்டின் மன்னர் 79 ஆண்டுகளும் ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த லிப்பெ என்ற சிறிய நாட்டின் மன்னர் ஏழாம் பெர்னார்டு 81 ஆண்டுகளும் ஆட்சி செய்தார்கள்.

சோழ மன்னர் கரிகாலன் ஐந்தாவது வயதில் அரியணை ஏறினார் என்றும் 88 ஆண்டுகள் வரை வாழ்ந்த அவர் 83 ஆண்டுகளாக ஆட்சி செய்தார் என்றும் கூறப்படுவது உண்டு.

சேர மன்னர்களில் நெடுஞ்சேரலாதன் 85 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்பார்கள்.

ஆப்பிரிக்காவின் ஸ்வாசிலாந்து நாட்டை இரண்டாம் மன்னர் சொபுஸா ஒரு வயது முதல் 83 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் எகிப்து நாட்டின் மன்னராக இருந்த பெபி என்பவர் ஆறு வயது முதல் 94 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் வரலாற்றில் வாழ்கின்றார்கள்.

மன்னர் இட்ரிஸ் பின் முஹம்மது அல்காத்ரி (1929 -1999) மலேஷியாவிலும், மன்னர் பூமிபோன் அடூன்யடேட் (1946 – 2016) தாய்லாந்திலும் மிக அண்மைக் காலத்தில் தத்தமது அரசாட்சிக்கான பவள விழாக்களை கொண்டாடியிருந்தனர்.

முடியாட்சி முறையில் பரம்பரைக்கே முக்கியத்துவம் என காலாகாலமாக கூக்குரலிட்டவர்கள் குடியாட்சி முறையிலும் வாரிசுகள் முக்கியத்துவம் பெற்று தொடர்ந்து பதவிக்கு வருவதையும் கண்கூடாக கண்டதில் மௌனிக்கின்றார்கள்.

ஆடம்பர வாழ்வு நிலையை முடியாட்சி வளர்ப்பதென்பதும், அதற்கென மக்கள் அநாவசியமாக மேலதிக வரியை செலுத்தும் நிர்ப்பந்தம் ஏற்படுவதென்பதும் முடியாட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக்கருதுபவர்களின் அடிப்படைக் கூப்பாடு !

முடியாட்சி முறையை முடிவுக்கு கொண்டு வர விரும்புபவர்கள் கூட எலிசபெத் மகாராணியின் ஆட்சி முடிவுக்கு வரும்வரை காத்திருக்கவே விரும்புகின்றார்கள்!

பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் நீண்ட காலம் மகாராணியாக இருப்பவர் என்ற பெருமைக்குரிய இவர் பிறந்தது ஓர் அரண்மனையில் அல்ல!

95 வருடங்களுக்கு முன்பு அவர் பிறந்த இடம் கூட இன்று அவருக்குச் சொந்தமானது அல்ல.

அந்த இடத்தில் அருங்காட்சியகம் இன்று வானளாவ காட்சியளிக்கவும் இல்லை.

லண்டனின் மேபியர் 17 புருடன் வீதியில் அவர் பிறந்த இல்லம் 1937ல் இடிக்கப்பட்டு ஒரு சீன உணவகமும், அலுவலகங்கள் சிலவுமே அங்குள.

தமது பட்டத்தையும், பதவியையும் எந்த வகையிலும் கெடுத்துக் கொள்ளாமல் அரசை நிர்வகிக்க விரும்பும் ஆட்சியாளர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு – எலிசபெத் மகாராணி !

பொதுச் சேவையில் இவரது அர்ப்பணிப்பு, தீர்க்கமாக முடிவெடுக்கும் ஆற்றல், தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாத நேர்மை, சுவாரஸியதுடன் உரையாடும் சுபாவம், வார்த்தையில் கனிவு, நெஞ்சிலே துணிவு , அறிவிலே தெளிவு, மனதிலே மானுட நேயம் போன்றவற்றால் பிரித்தானிய மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றார். உலக மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றார்.

எஸ்.ஜெகதீசன்.

Loading

15 Comments

  1. நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. மிக மிக நன்றி.

    இப்படியான விடயங்கள்
    தொடர்ந்து உங்களுடைய சேவையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    1. இன்னும் எழுதியிருக்கலாமே என்று தோன்றியது!
      நனி நன்றி!

  2. அருமையான தகவல்கள், எல்லோரும் அறிந்திருக்க வேண்டியவை, அறியத்தந்தமைக்கு மிக நன்றி.
    தங்கள் சேவைகள் தொடர வாழ்த்துகள்.

    -கமலா ஸ்கந்தகுமார்

    1. அருமையானவையும் அறிய வேண்டியவையும் அனேகம்! நன்றி!

  3. எமது நாட்டின் தேசிய பூ golden wattle. என்ன தமிழ் என்று தேடாத இடமில்லை. google வளார் பூ. ஊரில் உள்ளவர்கள் பொன் நொச்சி. இன்று மிளிரும் மகாராணியில் வேலம் பூ சந்தோஷமளித்தது.திரும்பவும் வாசித்தேன்.கனக்க புது தகவல் அறிந்தேன்.நல்ல கட்டுரை.எழுதிய எஸ் ஜெகதீசனுக்கு வாழ்த்துக்கள். M.S.Suresh Lake Clifton. Au.

    1. மனம் மலர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.நன்றி!

  4. 1.நான் ஆஸ்திரேலியாவில் 52000 டாலர் வருட சம்பளம் பெறுகின்றேன். மகாராணி 152 மில்லியன் (ஆஸ்திரேலியா டாலர்) ராஜ மானியம் பெறுவதை மிளிரும் மகாராணியில் கண்டேன். அதனை நான் எனது உழைப்பால் பெற முடியுமா என்பதே எனது புதிய கனவு.நல்ல கட்டுரை.வாழ்த்துக்கள். போவன் ஹில்ஸ் கோபால்.

    2.மிக்க நன்றி. பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்.

    அன்புடன் ஆழியாள்

    3. இங்கிலாந்தின் தேம்ஸ் நதியில் உள்ள அன்னப் பறவைகள் கடற் பரப்பில் மூன்று மைல்களுக்குட்பட்ட திமிங்கலங்கள், டொல்பின்கள் சுறா வகை மீன்கள் இவராலேயே ஆளப்படுகின்றன என்பதும் அரிய ஜீவராசிகளுக்கும் இவர் வழங்கும் பாதுகாப்பை உரிய மனித ஜன்மங்களுக்கே பாதுகாப்பு வழங்காத நாடுகள் கண்டு கொள்ள வேண்டும். அடிக்கோடிட வேண்டிய வார்த்தை.ஸ்ரீதரன் லண்டன்

    4. அவரது தலை கீழாக உள்ள நிலையில் தபால் தலைகளை ஒட்டுவது ‘முடிக்குரிய’ குற்றம். எனக்கு நன்கு பிடித்தது.ரங்கராஜன் யூ கே

    1. 1.மெய்பட வேண்டும். வாழ்த்துகின்றேன்

      2. மோதிர கை தந்த பாராட்டு! இதய நன்றி.

      3. ஆத்தா துணை இருந்தால் எந்த உயிரும் நல்லா இருக்கும் என்பது இதுவோ? இல்லைத் தானே!

      4. உங்களுக்கு நன்கு பிடித்தது தபால் தலையை அவ்விதம் ஒட்டுவதை அல்ல, கட்டுரையையே என்ற ஊகத்தில் நன்றி.

      1. மகாராணி அரசியின் பூர்வீக வரலாறு..செய்தியை …மிக அழகாகத் தொகுத்து ..பாமர மூளைக்குப் .பகுத்தறியத் தந்த நெடுந்துயர்ந்த …ஈழத்து இளவாலையூர் பத்திரிகை..ஆசிரியர் ‘திரு ஜெகதீசன் அண்ணா’ உங்களுக்கு.. நன்றிகளுடன்.. கூடிய வாழ்த்துகள்… கூறி மகிழும்…I A A. “ஜெகதீசன் சேவை தொடரட்டும்…வாழ்த்துகள்!”

      2. மகாராணி அரசியின் பூர்வீக வரலாறு..செய்தியை …மிக அழகாகத் தொகுத்து ..பாமர மூளைக்குப் .பகுத்தறியத் தந்த நெடுந்துயர்ந்த …ஈழத்து இளவாலையூர் பத்திரிகை..ஆசிரியர் ‘திரு ஜெகதீசன் அண்ணா’ உங்களுக்கு.. நன்றிகளுடன்.. கூடிய வாழ்த்துகள்… கூறி மகிழும்…I A A. “ஜெகதீசன் சேவை தொடரட்டும்…வாழ்த்துகள்!”

  5. மகாராணி அரசியின் பூர்வீக வரலாறு..செய்தியை …மிக அழகாகத் தொகுத்து ..பாமர மூளைக்குப் .பகுத்தறியத் தந்த நெடுந்துயர்ந்த …ஈழத்து இளவாலையூர் பத்திரிகை..ஆசிரியர் ‘திரு ஜெகதீசன் அண்ணா’ உங்களுக்கு.. நன்றிகளுடன்.. கூடிய வாழ்த்துகள்… கூறி மகிழும்…I A A. “ஜெகதீசன் சேவை தொடரட்டும்…வாழ்த்துகள்!”

    1. “மகாராணி சேவை தொடரட்டும்…வாழ்த்துகள்!” என்றிருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.எனினும் மிக்க நன்றி!

  6. அருமையான அரசு தகவல் – நெஞ்சில் குத்தி மார்பில் ஏற்றிய மார்பூசி -மரங்கள் நடல்-விண்ணில் கைகள் -மண்ணில் கைகள் குலுக்கிடை வழிகோல் -கோமறை மன்றம் -அரிய ஜீவராசிகள் பாதுகாப்பு மானிடத்தில் இல்லை -முடியும் முதுமை முடியாட்சி -வாழ்த்துக்கள் பஞ்சாலன் அவர்களே –

  7. உண்மையில் நீங்கள் அறிந்த கூற்று சத்தியமானது -உலகை ஆளப் பிறந்த பெண்மணி -சிறுவயதிலியே ஒவ்வொரு நாடு நாடாக சென்று அனுபவம் பெற்று ஆளுமையுள்ள அரசி -வரலாற்றில் வாழ்க்கையை வென்றவர் -நன்றி பாஞ்சாலன் அவர்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *