இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.. சாமியார் சர்ச்சை பேச்சு

இந்தியா இஸ்லாமிய நாடாகாமல் தடுக்க, இந்துக்கள் அதிக அளவில் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சாமியார் பேசியுள்ளார். இவர் வேறு யாருமல்ல, ஹரித்வாரில் இஸ்லாமியர்களைக் கொல்ல வேண்டும் என்று பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாரே எதி நரசிங்கானந்த், அவருடைய உதவியாளரான எதி சத்யதேவானந்த் சரஸ்வதி சாமிதான்.

ஹரித்வாரில் நடந்த இந்து சாமியார்கள் மாநாட்டில் பேசிய எதி, முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும். இதில் பொதுமக்களும், ராணுவத்தினரும், போலீஸாரும் இணைய வேண்டும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வழக்கில் நீண்ட தாமதத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சாமியார் எதி தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

இந்த நிலையில் அவரது உதவியாளர் எதி சத்யதேவானந்த் இப்போது இஸ்லாமியர்களைக் குறி வைத்துப் பேசியுள்ளார். இதுகுறித்து இமாச்சல் பிரதேசத்தில் நடந்த இந்து மத சாமியார்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசியபோது, இந்தியா, இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க இந்துக்கள் அதிக அளவில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் அதிகமாக இருந்தால்தான் இந்தியா, முஸ்லீம்கள் கைக்குப் போவதைத் தடுக்க முடியும்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் திட்டமிட்டு நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அதனால்தான் இந்துக்கள் அதிக அளவில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாகி விட்டால் பாகிஸ்தான் போல இந்தியாவும் இஸ்லாமிய நாடாகி விடும். அதனால்தான் அதைத் தடுக்க இந்துக்களை நாங்கள் உஷார்படுத்தி வருகிறோம். இந்தியாவில் ஒரு தம்பதி இத்தனை குழந்தைதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயம் இல்லை. எனவே அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.

இதற்கிடையே, சாமியார் எதிக்கு இமாச்சல் பிரதேச போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், எந்த மதத்திற்கும், சாதிக்கும் எதிரான வார்த்தைகளை சாமியார் பிரயோகிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *