விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ் தேசியத்தின் அவசியமும்….. தொடர்… 4 ….. சங்கர சுப்பிரமணியன்.

அடிப்படைத் தன்மையை உணராத சிலர் திராவிடர் கழகத்தையும் தந்தை பெரியாரையும் நா கூசும் அளவுக்கு வசைபாடுகிறார்கள். இவர்களுக்கு வரலாறு தெரியாது. திராவிடர் கழகம் தமிழ்நாட்டுக்கு மட்டும் போராடவில்லை. கேரளாவிலும் போராடியது. இதற்கு வைக்கம் போராட்டத்தை சொல்லலாம்.
கேரளாவில் கோட்டையம் மாவட்டத்திலுள்ள வைக்கம் என்ற சிறிய ஊரில்தான் இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டம் 1924 மார்ச் மாதம் தொடங்கி 1925 நவம்பர் வரை நடந்தது. இப்போராட்டத்துக்கு காரணம் அவ்வூரிலுள்ள சிவன் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக்கூடாது என்று தடை இருந்தது. இந்த தடையை எதிர்த்துத்தான் போராட்டம் நடந்தது. இதில் போராடிய தலைவர்களை எல்லாம் கைது செய்தார்கள். கடைசியில் போராட தலவர்களே இல்லாமல் பக்கத்திலுள்ள தமிழ்நாட்டிலிருந்து போராட தலைவர்களை அழைக்க முடிவு செய்தார்கள்.
அப்போது இதுபோன்ற போராட்டங்களில்
மக்களுக்காக போராடுவது மற்றும்
மக்களைத் திரட்டி உறதியாகப் போராட என தமிழ்நாட்டில் இரண்டு தலைவர்களே சிறந்து விளங்கினர். அதில் ஒருவர் வரதராஜுலு நாயுடு இன்னொருவர் பெரியார். இந்த இருவரில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுவதில் பெரியார் உறுதியானவர் என்பதை வரலாறுகளைப் படிக்கும் போது உணரமுடிகிறது. இந்த காரணத்துக்காகவே பெரியாரை தலைமை தாங்கி போராட்டம் நடத்த அழைக்கப் பட்டார்.
தமிழ்நாட்டிலும் சரி பக்கத்து மாநிலம் என்றாலும் சரி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராட வேற்றுமொழிக்காரர்கள்தான் இருந்தார்களா? மலையாளிகள் சேரநாட்டுத் தமிழர் என்று மார்தட்டும் தமிழரில் அன்று கேரளாவில் சென்று போராட ஒரு தமிழன்கூட இல்லையா என்று எண்ணும்போது தமிழனான எனக்கு இன்று ஆத்திரமாகவும் வெட்கமாகவும் உள்ளது. இன்று தமிழ்தேசியம் பேசும் தமிழராகிய நாம் அன்று நமக்காகவும் பக்கத்து மாநிலத்துக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக் போராடினோமா?
வரலாறு பொய்பேசுவதில்லை. வரலாற்றை பொய்யாகத் திரித்து எழுதலாம். செல்வந்தரான பெரியார் அரசியலில் இறங்கி பணம் சம்பாதிக்க வேண்டுமென்றோ புகழடைய வேண்டுமென்றோ எண்ணவில்லை. அதனால்தான் இன்றளவும் பெரியார் பேசப்படுகிறார். இன்றைய தமிழர் நிலையையும் தமிழ்தேசியத்தின் அவசியத்தையும் எண்ணி நூறாண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்வர்களுக்காக நின்று போராடியவர்களை அலட்சியப் படுத்தினாலோ அவதூறாகப் பேசினாலோ நன்றி மறந்தவர்களாகி விடுவோம்.
பொதுவாக ஒரு கருத்து பரவலாக எல்லோரது மனதிலும் இருக்கிறது. அது திராவிடக்கட்சிகள்தான் தமிழ்நாட்டையும் தமிழர் நலனையும் பாழாக்கி விட்டது என்ற கருத்துத்தான் அது. இக்கருத்து தமிழருக்கு இயல்பாக ஏற்பட்டதா? அல்லது புகுத்தப்பட்டதா? என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் முதல்வராய் இருந்த திரு. பக்தவத்சலம் யார்? விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்ற இவர் தமிழர் இல்லையா?
திரு. ராஜகோபலாச்சாரியார்
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். இவர் தமிழர்தனே? ஆதலால் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை கெடுத்துவிட்டன என்று குறைசொல்வதில் பொருளில்லை.
இந்தியை தமிழ்நாட்டுக்குள் நுழைக்க முயன்றதால் திரு. பக்தவத்சலத்தையும் குலக்கல்வியை கொண்டுவர முயன்றதால் திரு. இராஜாஜி அவர்களையும் பதவியிலிருந்து தூக்கி எறிந்தனர்.
ஆதலால் தமிழ்நாட்டு மக்கள் யார் அவர்களை ஆளவேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கிறார்கள். தமிழர் விரோத பல நடவடிக்கைகளில் செல்வி. ஜெயலலிதாவின் மறைவுக்கு முன்னர்
அதிமுக-வினர் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனால் அதன்பின் வந்த தழிழர் ஒருவருக்கு இருவராக போட்டி போட்டுக் கொண்டு தமிழர் நலன்சாரா திட்டங்களுக்கு துணைபோயினர். அண்ணா அவர்கள் ஒருகட்டத்தில் பெண் ஒருவரைப் பற்றி குறிப்பிடுகையில் அவர் ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை நான் இங்கு ஏன் குறிப்பிட்டுகிறேன் என்றால் “கழுதை விட்டையில் முன்விட்டை என்ன? பின்விட்டை என்ன?” என்று எங்கள் ஊரில் சொல்லும் பழமொழியைப் போலத்தான் லஞ்சமும். இதில் திராவிடக் கட்சிகள் அல்ல நாடே சம்பந்தப்பட்டுள்ளது. இது எப்படி இருக்கிறது என்றால் எல்லோரும் அம்மணமாக அலையும் ஊரில் ஒருவர் மட்டும் உடை உடுத்திக்கொண்டு எல்லோரும் அம்மணமாக அலைகிறார்கள் என்பது போல் உள்ளது.
எனக்கு இறைநம்பிக்கை இல்லாவிட்டாலும் லஞ்சத்தைப் பொருத்தவரை அதை இறையருளுடன் ஒப்பிடுவேன். தூணிலும் துரும்பிலும்
இருக்கும் இறைவனைப்போல லஞ்சமும் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. கொஞ்ச நஞ்சம் எனது குடும்பத்துக்காக ஒட்டிக்கொண்டிருந்த இறைநம்பிக்கையும் ஒட்டு மொத்தமாக அழித்தது இந்த உலக அரசியல்தான். ஈழப்போராட்டத்தின் இறுதியில் கொத்து கொத்தாக தமிழினம் காவுவாங்கப்பட்டதில் இருந்து எனக்கு அந்த நம்பிக்கையே போய்விட்டது.
இப்படிச் சொல்வதில் எனக்கு அரசியல் லாபம் ஒன்றுமில்லை. ஏனென்றால் நான் ஒரு அரசியல்வாதியல்ல. இது தவிர நானொரு நூலாசிரியனும் அல்ல இதனால் எனது நூல் விற்பனைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று சிந்திக்க வேண்டியதும் இல்லை. தமிழன் என்ற இனத்தைத் தாண்டி மனிதாபிமானம் என்ற மன அடிப்படையில் பார்த்தால் அங்கு ஏற்பட்ட அவலங்களைப் பார்க்கிறபோது கண்ணீர் வராவிட்டாலும் நாகரிகம் அடைந்த மனித சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அதெப்படி சாத்தியப்படும். கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் தேடித்தேடி பார்த்து உணவுகொடுப்பவர்கூட கண்முன்னே கொடுமைகளைப் பார்த்த பின்னும் காததூரம் ஓடிவிட்டாரே. இரக்கம் என்பது மதத்துக்கு அப்பாற்பட்டது. ஒரு மதக்கடவுள்கூட உதவிக்கரம் நீட்டவில்லையே? உலக அரசியல் ஈர்ப்புவிசையில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும்போது யாரையும் எவரும் குறைசொல்ல இயலாது.
ஒரு கருத்தை திரும்பத் திரும்ப சொல்லி வரும்போது அது தவறாகவே இருப்பினும் உண்மையாக இருக்குமோ? என்று எண்ண வைக்கும். அதையும் தாண்டி உண்மையை உய்த்துணர வேண்டும். எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணவேண்டும் அல்லவா?
இந்திய விடுதலைக்கு முன் தமிழ்நாடு சென்னை ராஜதாணி என்ற பெயரிலேயே இருந்தது. அப்போது இருந்த கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் மட்டுமே. மாநில அரசியலில் மாநிலக் கட்சியின் ஆதிக்கம் 1916ல் தான் தொடங்கியது. மாநிலக்கட்சிகளில் முதல் முதல் தோன்றியதே தென்னிந்திய நல சங்கம் என்ற கட்சிதான். திராவிடக்கட்சிகளுக்கு முன்னோடியாக 1916ல் தொடங்கப்பட்ட இக்கட்சி தமிழர் நல சங்கம் என்ற பெயரில் தொடங்கப் படவில்லை. காரணம் இக்கட்சியில் பெரும்பான்மையினர் வேற்று மொழிக்காரர்களாகவே இருந்தனர்.
ஏன் அன்று தமிழர் யாருமே இல்லையா? அந்த காலகட்டத்தில் ஏன் வேற்று மொழியினருக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். அல்லது நாம் பெரும்பான்மையாக இல்லாததால் வேற்றுமொழியினரை அனுமதித்தோமா?
அதன் நீட்சியைத்தான் இன்றுவரை பார்க்கிறோம். இந்த அடிப்படை உண்மை தெரியாமல் அவர்களாகவே வந்து புகுந்து கொண்டதாக எண்ணுகிறோம். அத்தோடு நமக்காகவும் சேர்ந்து போராடியவர்களை இன்று நாம் வேற்றுமொழிக்காரர்களாக பார்க்கிறோம்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()