உளவு நிறுவனங்கள்!… பாகம்:9 …. க.வள்ளிமகன்.

ஒரு நாட்டினுடைய முப்படைகளின் காத்திரத்தை அறிவது மட்டுமல்ல உளவு நிறுவனங்களின் வேலை.
ஒரு நாட்டினுடைய வளமான பொருளாதாரக் கட்டமைப்பைச் சீர்குலைப்பதன் மூலம் பொருளாதாரத்தின் கட்டமைப்பில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அரச நிர்வாகத்தையே ஆட்டம் காண வைப்பதுதான் உளவு நிறுவனங்களின் பிரதானமான வேலையாகும்.
பொருளாதாரக் கட்டமைப்பு என்பது ஒரு ஆணி வேர் போன்றது.
மண்ணைத் துளைத்து ஆழமாக வேரூன்றி நிற்கும் ஆணிவேர்தான் ஒரு மரத்தை ஆட்டம் காணவைக்க முடியாதவாறு உறுதியாக தாங்கிப் பிடித்து உதவுகிறது.
அதைப் போல நாட்டு வளங்கள் பலவற்றின் மூலக்கூறுகளாக இருந்து ஒருமித்த ஒரு திண்மமாக நிற்கும் பொருளாதாரக் கட்டமைப்பு ஒரு நாட்டுக்கு முக்கியமாகிறது.
இந்தப் பொருளாதாரக் கட்டமைப்புத்தான் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்வைக் கொடுக்கின்றது.
ஒரு நாடு தனது வளங்களாக இயற்கையாக கிடைக்கின்ற நீர்வளம், நிலவளம், கனிம வளங்கள் போன்றவற்றை தமது பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்துகின்றன.
பொருளாதார வளர்ச்சி ஒரு நாட்டினுடைய அரச இயந்திரத்தை எவ்வித தடையுமின்றி நடத்திச் செல்வதற்கு முக்கிய கருவியாக இருக்கின்றது.
அதே போல அறிவியலின் துணையுடன் மேற்கொள்ளப்படுகின்ற உற்பத்திகள் மக்களின் தேவைகளுக்காகவும்,வெளிநாட்டு வருவாயினைப்; பெற்றுக் கொள்வதற்காகவும் எற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரமும் அதனை பெருபான்மையான மக்கள் வாங்கக்கூடிய விலையில் அவை இருக்கும் போது உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொகை அதிகரிக்கின்றது.
எக்காலத்திற்கும் உலகில் உள்ள நாடுகள் தமது நாட்டை வளர்ச்சியடையாத நிலையில் தொடர்ந்தும் வைத்திருக்க மாட்டார்கள்.
காலத்திற்குக் காலம் அந்தந்த நாடுகளின் தோன்றும் அறிவியலாளர்களின் சிந்தனைகள் அவரவர் நாட்டினை உயர்நிலைக்குச் கொண்டு செல்லும்.
தொடர்ந்து தம்மை வல்லரசாக வைத்துக் கொண்டு உலகிற்கு தலைமைதாங்க விரும்பும் வல்லரசு நாடுகள் அனைத்து வழிகளிலும் தமது நிலையினைத் தக்க வைப்பதற்கு, அதற்கான சாத்தியக்கூறுகளை பயன்படுத்தியே வருவர்.
உயர நிற்கும் வல்லரசு நாடுகளின் உயரத்தை நோக்கி மற்றைய நாடுகள் வளரும் போது அதை அவதானிக்கும் வல்லரசு நாடுகள் அதனைத் தடுத்து நிறுத்த
அதன் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் அனைத்து அலகுகளையும் சிதைக்கவே முயற்சிப்பர்.
தொழிற்சாலைகள் என்பது ஒரு நாட்டினுடைய பொருளாதாரக் கட்டமைப்பின் ஒரு அலகாகும்.தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்களின் தரமென்பது மிகவும் முக்கியமானதாக கவனிக்கப்படும.; உற்பத்திப் பொருட்களின் தரத்தை சீர்குலைப்பதில் உளவு நிறுவனங்களின் ஒற்றர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
இந்த உற்பத்திப் பொருட்கள் இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களிலிருந்து மனித வாழ்விற்கு அன்றாடம் தேவையான அனைத்துப் பொருட்களுமாக வேறு வேறு தொழிற்சாலைகளில்; உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த உற்பத்திகள் யாவும் உற்பத்தியாளர்களுக்கும் வாங்குவோருக்கும் இடையில்; மட்டுமே தொடர்புடைய வியாபாரம் அல்ல,அது அந்த நாட்டினுடைய நிதியின் பெறுமதியையும் பொருளாதார இறுக்கத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கான அத்திவாரமுமாகும்.
இவ்வாறு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் உதாரணமாக உணவு உற்பத்தியில் ஈடுபடும் ஒரு தொழிற்சாலை வல்லரசு நாடுகளின் உதவி பெற்று தனது தொழிற்சாலையை நவீனப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேளைகளில் அந்நாடுகளிலிருந்து வரும் தொழிற்துறைசார் தொழில்நுட்பவியலாளராகட்டும், உற்பத்திப் பொருளின் தரத்தை நிர்ணயிப்பவர்களாகவிருக்கட்டும் அவர்களை தமது நாட்டுக்கான ஒற்றர்களாக பயன்படுத்திக் கொள்ளவதை ஒரு வேலைத்திட்டமாகவே அந்த நாடுகள் கொண்டிருக்கின்றன.
இக்கட்டுரையின் எட்டாம் பகுதியில் விளக்கப்பட்டதற்கமைய ஒரு உணவு உற்பத்தித் தொழிற்சாலைக்கு நவீன உற்பத்தித் திறனை அறிமுகப்படுத்த வரும் வல்லரசு நாடுகளின் அதிகாரிகள் அந்தந்த பொருட்களின் உற்பத்தித் துறைசார் கல்வியில் தகுதிவாய்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பதில் அந்த நாடுகள் அதிக கவனம் செலுத்தும் ஏனெனில் தகுதி உள்ளவர்களின் அறிவியல் ஆற்றலை தொழிற்சாலைகளின் சுதேச அதிகாரிகள் மிகவும் உற்றுக் கவனிப்பபார்கள் என்பதற்காகவே.
அதே வேளை வல்லரசு நாடுகளில், அதே தொழில்சார் துறையைக் கற்றவர்கள் அனைவரும் தமது நாட்டுக்கு தொழில்சார்ந்த ஒற்றர்களாக பணியாற்ற சம்மதிக்க மாட்டார்கள்.
அதற்கான விருப்புள்ள சிலரை மட்டுமே தெரிவு செய்து எப்படியெல்லாம் இரகசியங்களை அறிய வேண்டுமென்பதற்கான பயிற்சிகளைக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள்.
வல்லரசு நாடுகளிலிருந்து அனுப்பப்படும் அனைத்து தொழிற்துறை சார் தொழில்நுட்பவியலாளர்களோ உற்பத்தி தரநிர்ணய அதிகாரிகளோ ஒற்றர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களில் ஒருவர் அல்லது இருவரே ஒற்றர்களாக இருப்பார்கள்.
ஒற்றர்களாக வேலை செய்பவர்கள் தம்மை ஒற்றர்கள் என்று தம்மோடு தனது நாட்டிலிருந்து வந்த அதிகாரிகளுக்குக்கூட தெரியப்படுத்த மாட்டார்கள்.சந்தேகப்படும்படி சிறு அசைவுகளைகூட வெளிப்படுத்த மாட்டார்கள்.
உதாரணமாக ஒரு உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள்; என்னென்ன, அவை எங்கிருந்து கிடைக்கின்றன.அந்த மூலப் பொருட்களில் உள்ளடங்கியுள்ள வேதியல் கூறுகள் என்னென்ன, அந்த வேதியல் பொருட்கள் மனித உடலுக்கு எவ்வாறு எந்த உறுப்பின் செயல்பாட்டுக்கு தேவைப்படுகின்றது என்பதை அக்கு வேறு ஆணி வேறாக ஒற்றர்களுக்கான அதிகாரிகள் கண்டறிவார்கள்.
ஒரு நாட்டினுடைய மிக முக்கியமான வளமாக கருதப்படுவது மனித வளமே. மனித வளம் என்பது நோயற்ற ஒவ்வொரு தனிமனிதனையுமே குறிக்கும்.
நோயற்ற மனிதனாக வாழ்வதற்கு உணவும், அந்த உணவிலுள்ள உடலுக்குத் தேவையான வேதியல் மூலக்கூறுகளுமே அத்தியாவசியமாகின்றன.
நவீன உலகம்,தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உணவுகளிலேயே தங்கிநிற்கின்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உளவு நிறுவனங்கள் இச்சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்தவதைத் தவிர்க்கவே மாட்டார்கள்.
உதாரணமாக தொழிற்சாலையிலிருந்து ஒரு உணவு தயாரிக்கப் பயன்படுத்ர்தும் ஒரு காய்கறியிலிருக்கும் வேதியல் மூலக்கூறுக்கும் அதனைப்பதப்படுத்த பாவிக்கும் வேதியல் பொருளுக்கும் இடையில் இருக்கும் சாதக பாதக விளைவுகளையே தொழிற்சாலைகள் முதலில் கவனத்தில் கொள்கின்றன.
ஒற்றர்களாக பணியாற்றும் அதிகாரிகளின் கவனம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கும்.
(தொடரும்)
![]()