கவிதைகள்

அன்னைத் தமிழ் அகமகிழும்!…. ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நன்றி  எனும்  வார்த்தையினை

 நாம்  சொல்லத்  தயங்குகிறோம்

 ” தாங்ஸ் ” அங்கே வந்துநின்று

 தான்  நிமிர்ந்து  நிற்கிறது   

 மன்னிக்க  என்று  சொல்ல

 மனம்  எமக்கு  வருகுதில்லை

 ” வெரிசாறி ” என்று  சொல்லி

 வேற்று  மொழி  உதிர்க்கின்றோம்  !

 

வந்து    நிற்கும்  விருந்தினரை

 ” விசிட்டர் ” என அழைத்திடுவோம் 

 காலை  நேர  உணவதனை

 ” பிரேக்பாஸ்டாய் ” ஆக்கி  நிற்போம்

 மாலை  நேரம் உண்ணுவதை

 ” டிபன் ” என்று மாற்றிவிட்டு

 மனமகிழ்வை ” ஹப்பி “  என்று

 வாயாரச் சொல்லி  நிற்போம்    ! 

 

அம்மாவின்  தங்கை  வீட்டில்

 ” அன்ரியாய் “  ஆகி  நிற்பார்

 அப்பாவின்  தம்பி  அங்கே

 ” அங்கிளாய் “  பெயர் பெறுவார்

 பெரியப்பா  பெரிய  அம்மா

 எனும் அருமை வார்த்தையெலாம்                

 ” அங்கிளெனும் ” பெயர்  பெற்று

 அன்னைத் தமிழ் ஒழிந்துகொள்ளும்  !

 

பிறந்த    நாள்    விழாதன்னில்

 பெருங்  குரலால்  யாவருமே

 ” ஹப்பிபர்த்டே “  எனப்  பாடி

 கைதட்டி  மகிழ்ந்து  நிற்போம்

 தமிழ்  மொழியில்  வாழ்த்திருக்க

 அதைத் தவிர்த்து விட்டுவிட்டு

 அன்னியத்தை பாடி நிற்றல்

 அருவருக்கும் செயல் அன்றோ  !

 

தொலைக் காட்சி  நிகழ்ச்சிகளில்

 தொகுத்து நிற்க வருபவர்கள்

 ” ஸோவென்பார் “  ” சொரி “  என்பார்

 சுவையதனை ” சுவீற் “  என்பார்

 மூச்சுக்கு ஒரு  தடவை

 பேசி நிற்பார்  ஆங்கிலத்தை

 முன் வந்து  நிற்பதோ

 முக்கியமாய்  தமிழ் நிகழ்வே  ! 

 

தமிழ் அவையில் பேசவரும்

 பேச்சாளர் பல பேரும்

 சரளமாய் ” சிம்பிள் ” என்பார்

 ” சக்சஸ்தான் “  வாழ்க்கை என்பார்

 அமுதான தமிழ் பேச

 வந்து நிற்கும் அவர்களுமே

 ஆங்கிலத்தை அணைத்து நிற்றல்

 அசிங்கமாய் இருக்கும் அன்றோ !

நம் தமிழை வளர்ப்பதற்கு

 நாம் அன்றோ முயலவேண்டும்

 நம் தமிழின் வரலாறு

 நமக்கென்றும் பெருமை அன்றோ

 நம் மொழியை புறந்தள்ள

 நாம் வலிந்து நின்றுவிடின்

 நாம் தமிழர் என்றுசொல

 நம் மனது ஏற்றிடுமா  !

 

நல்ல  தமிழ்  பேசுதற்கு                             

 நாம் மனதில் நினைத்திடுவோம்

 சொல்ல வல்ல சொற்கள்பல

 நிறைந்திருக்கு நம் மொழியில்

 அன்னியத்தை நம் பேச்சில்

 அணைப்பதனை விட்டு விட்டு

 அழகு தமிழ் பேசிநின்றால்

 அன்னைத் தமிழ் அகமகிழும் !

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *