கவிதைகள்

குறையெனவே வெறுத்துவிடல் முறையாமோ !… ( கவிதை )… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

கறுப்பென்றால் வெறுக்கின்றார்…..

      காறியும் உமிழ்கின்றார்
கறுத்தநிறம் கொண்டோரை
      வெறித்தனாமாய் தாக்குகிறார்
நிலத்திலுள்ள கறுப்பரெல்லாம்
     நிமிர்ந்துநிற்கும் நிலைபார்த்து
வெறுத்தவரே வியக்கின்றார்
   விருப்பமின்றிப் பார்க்கின்றார் !

காந்தியைக் கறுப்பரென்று
   காலாலே மிதித்தார்கள்
கருணையின்றி அவர்வாழ்வில்
    கஷ்டம்பல கொடுத்தார்கள்
சாந்திதனை வேண்டியவர்
   சாப்பிடவே மறுத்ததனால்
கறுப்பரெனப் பார்த்தவரே
   கதிகலங்கி போனார்கள்  !

கறுப்பினத்தை விலங்கெனவே
    கண்டுநின்ற கூட்டத்தார்
கனவுகாணா வகையினிலே
  கறுப்பரே தலைமையானார்
வெறுத்தொதுக்கி நின்றவினம்
   பொறுத்தொதுங்கி போகாமல்
வீரமுடன் எழுந்ததனால்
   வெற்றிகொண்டே  நிற்கிறதே !

வான்கறுக்கா நின்றுவிடின்
   மழைவருதல் இல்லையன்றோ
இரவுவரவில்லை என்றால்
   பகலுக்கே அர்த்தமுண்டோ
கறுப்புநிற ரத்தமதை
    கண்டுவிடல் சாத்தியமா
கறுப்பதனை வெறுப்பதற்குக்
    காரணம்தான் விளங்கவில்லை !

கறுப்பதனை வெறுப்போர்கள்
    கறுப்புமுடி வருவதற்கு
காசுபல செலவழித்து
      காணுகிறார் இன்பமதில்
கறுப்புடுப்புப் போடுகிறார்
     கறுப்புக்கார் வாங்குகிறார்
கறுப்புநிறப் பொருள்வாங்கி
     காணுகிறார் மனமகிழ்வை  !

வெள்ளைநிற முள்ளவரே
     வெள்ளைமுடி வெறுக்கின்றார்
விதம்விதமாய் சாயத்தை
     விலைகொடுத்தே வாங்குகிறார்
அள்ளியள்ளி அதைப்பூசி
      ஆனந்தம் காணுகிறார்
அவர்வெறுத்த கறுப்புதனை
    அவரேற்றே  மகிழுகிறார் !

வெள்ளையினக் கூட்டத்தை
      வென்றுநின்ற மாமனிதர்
நெல்சனாம் மண்டேலா
   நெஞ்சுரத்தைப் பார்த்துவிட்டு
கறுப்புநிற ரோஜாவாய்
      கருத்தினிலே கொண்டதனால்
பொறுப்புமிகு பதவிபெற்றார்
     கறுப்புநிறப் பெருமகனும் !

வெள்ளைநிற முடையோரின்
    விருப்பமெலாம் மாறிடினும்
வெள்ளையரை விரட்டிவிட்டோர்
   வேறுருவம் கொண்டுவிட்டார்
கள்ளமனம் அவரிடத்தில்
         மெள்ளவுருக் கொண்டதனால்
கறுப்புதனை அவருமிப்போ
         வெறுப்புடனே நோக்குகிறார் !

வெள்ளையாய் பிள்ளைபெற
        விதம்விதமாய் உண்ணுகிறார்
வெள்ளையாய் பெண்தேடி
     விரைந்தோடி அலைகின்றார்
உள்ளமதை வெள்ளையாய்
    உருவாக்க மறுக்கின்றார்
கள்ளமனம் எல்லாமே
        கறுப்பாக இருக்கிறதே !

சாமியிருக்கும் கருவறையும்
   சரியான கறுப்புத்தான்
சாமிசிலை அத்தனையும்
      சரியான கறுப்புத்தான்
தாயினது கருவறையும்
     சரியான கறுப்புத்தான்
கறுப்பதனை குறையெனவே
        வெறுத்துவிடல் முறையாமோ !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *