கவிதைகள்
மாறுவேடப் போட்டி என்றார்கள்!… முல்லைஅமுதன்.

மாறுவேடப் போட்டி என்றார்கள்.
மீசை,தாடி,முகத்தில் ஒரு சிறுமச்சம்..
இல்லை..இல்லை.
மாவைப் பிசைந்து
முகத்தில் அப்பி,
ஏதேதோ வர்ணம் தீட்டி
அழுக்காக்கி,
இது பரவாயில்லையே..
இல்லை..இல்லை..
முறுக்கு மீசை மட்டும் போதும்..
புருவமயிர் கொஞ்சம் அடர்த்தியாய் வையுங்கள்.
பஞ்சகச்சத்தில்
இன்னும் அழகாய் இருக்குமே.
கையில்
பாரதியார் கவிதை நூல்..
வேண்டாம்..
கையில்
பைபிள்,பகவத்கீதை, குரான்…
இல்லை..வேண்டவே வேண்டாம்.
கையில் தேசியக்கொடி மட்டும் போதும்..
பார்த்துக்கொண்டிருந்த
இன்னொரு ஒப்பனைக்கலைஞன்
வந்து உடையை விறுக்கென உருவிச்சென்றான்.
எல்லோரும்
தூரமாய் நின்றார்கள்.
நிர்வாணமாய் என்றும் நான்..
முல்லைஅமுதன்
![]()