கவிதைகள்
மலர்போல நினைப்பை மனமிருத்த வேண்டும்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மலர்களைப் பார்ப்போம்
மனமகிழ் வடைவோம் 

எதையுமே நினையா
இருக்குமே மலர்கள்
பூப்பது வொன்றே
மலரது நினைப்போ
மலர்களைப் பார்ப்போம்
நிலமதில் நாமும் !
வாழ்த்துகள் விரும்பியே
மலர்ந்திட மாட்டா
வசைமொழி பார்த்து
அசைந்திட மாட்டா
கேட்டுமே யாருமே
மலர்ந்திட மாட்டா
கிறுக்குள்ள மானிடா
நினைத்து நீபாரு !
புத்துணர்வு தருவதற்கு
பூத்திடுமே மலர்கள்
சொத்துக்காய் சுகத்துக்காய்
பூப்பதில்லை மலர்கள்
செத்துவிழும் காலமதை
மலர்நினைப் பதில்லை
நித்தமே மகிழ்வுதனை
நினைத்துமே மலரும் !
மலர்பார்த்து மனிதமனம்
மலர்ந்துவிட வேண்டும்
மணம்பரப்பும் எண்ணம்
எழுந்துவிட வேண்டும்
வருகின்ற சாவை
நினைத்தேங்கி நில்லா
மலர்போல நினைப்பை
மனமிருத்த வேண்டும் !
![]()