இரண்டாம் உலகப் போரின் குண்டுகள்!
ஞாயிற்றுக் கிழமை யேர்மனியின் டோட்முண்ட் நகரின் மையப்பகுதியில் இருந்து 13000இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள நிறுவனங்ள் மூடப்படுகின்றன. போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. டோட்முண்டின் தொடருந்து நிலையத்திலும் தொடருந்து வண்டிகள் சீரான முறையில் பயணிக்காது எனத் தெரிய வருகிறது.
இத்தனைக்கும் குண்டுகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. குண்டுகள் இருப்பதற்கான உறுதியான தடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் இந்த போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாளை ஞாயிற்றுக்கிழமை குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட உள்ளன.
அந்தப் பகுதியில் இருக்கின்ற வைத்தியசாலை மற்றும் முத்தோர் இலல்லத்தில் இருந்து அனைவரும் இன்றே பாதுகாப்பாக வேறு வைத்தியசாலைகளுக்கும் முத்தோர் இல்லங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டார்கள். நாளை வெளியேற உள்ள மக்கள் தங்குவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன. உணவுகளும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அங்கே செல்வதற்கு இலவசமான போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டள்ளன.
அதை விட நாளை குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் மிருகக்காட்சிச்சாலை, பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு இலவசமாக சுற்றுலா செல்ல முடியும்.
ஐரோப்பிய நாடுகளில் குண்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்ற போது இப்படியான நடைமுறைகள்தான் பின்பற்றப்படுகின்றன. இலங்கை,இந்தியா போன்ற நாடுகளில் வாழ்கின்ற மக்களுக்கு மேற்சொன்ன தகவல்கள் ஆச்சரியத்தை தரக் கூடும்.
வி.சபேசன்.