படைப்பாளிகள்

பலதுறைக் கலைஞர் கோவிலூர் செல்வராஜன்!

  •  தாயகத்திலும்,ஐரோப்பிய நாடுகளிலும்,கனடா,அவுஸ்த்ரேலியா ஆகிய
     நாடுகளிலும் கோவிலூர் செல்வராஜன் என்று அறியப்பட்ட இவரின்
    இயற்பெயர் இராசையா செல்வராஜன் ஆகும். கிழக்கு மாகாணம்,
    அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் என்னும் வரலாற்று சிறப்புமிக்க
    கிராமத்தில் பிறந்தவர்.
    மட்டக்களப்பில் உயர்தரம் படித்து சித்தியடைந்த பின் கொழும்பு மெய்கண்டான்
    நிறுவனம் வெளியிட்ட “கலாவல்லி,” “நட்சத்திர மாமா” ஆகிய சஞ்சிகைகளுக்கு
    உதவி ஆசிரியராக, 1974ம் ஆண்டு பத்திரிகைத்துறையில் தன் பணியை தொடங்கினார்.
    அன்று, கொழும்பில் “பொப் இசை” ஆதிக்கம் செலுத்திய காலம். கொழும்பு சிவா
    என்டர்டைன்மென்ட், அனைத்துப் பொப் இசைப் பாடகர்களையும் வைத்து நிகழச்சிகளை
    நடத்திக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் நிகழ்சிகளில் மறைந்த பிரபல அறிவிப்பாளர்
    திரு.கே.எஸ்.ராஜா அவர்களுடன் இணைந்து  இவர் மேடை அறிவுப்புகள் செய்தார். தனது ஊருக்கும் எடுத்துச் சென்றார்.
    திரு.செல்வராஜன் அவர்கள் பேராதனை பல்கலைக் கழகத்தில் தன்னை வெளிவாரிப்
    பட்டப்படிப்பு தேர்வு நாடியாக தன்னை பதிவு செய்து தமிழ்,பொருளாதாரம், அரசியல்விஞ்ஞானம்
    ஆகியவற்றில் சித்திபெற்று 1981ல் கலைமானி பட்டம் பெற்றார்.
    வீரகேசரி,தினகரன் ஆகிய பத்திரிகைகளில் பல சிறுகதைகள்,நாவல்கள் எழுதினார்.
    இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பான “பைலட் பிரேம்நாத்” திரைபடத்தின் படப்பிடிப்பு
    இலங்கையில் நடந்தபோது அதில் நடிக்க வந்திருந்த நடிகர்களை நேர்காணல் செய்து
    தனது சஞ்சிகைகளில் பிரசுரித்தார்.
    1977ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்னர்,இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்
    நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக பணியைத் தொடங்கினார். இலங்கை ஒலிபரப்புக்
    கூட்டுத்தாபனதிற்கு ஒரு பொற்காலமாக இருந்த அந்தக் காலப்பகுதியில் கோவிலூர் அவர்கள்
    தன்னை ஒரு பல்துறைக் கலைஞராக வளர்த்துக்கொண்டார்.
    ஒரு கவிஞராக, ஒரு பாடலாசிரியராக, ஒரு எழுத்தாளராக, ஒரு பாடகராக, ஒரு இசையமைப்பாளராக
    ஒரு நடிகராக, ஒரு தயாரிப்பாளராக,ஒரு வெளியீட்டாளராக என்று பல துறைகளிலும் இவர்
    பரிணமித்தார்.
    இலங்கை வானொலியிலும்,இலங்கை தேசிய தொலைக் காட்சியிலும் இவர் நூற்றுக்கணக்கான
    மெல்லிசைப் பாடல்களையும்,நாட்டியப் பாடல்களையும் எழுதி ஒலிபரப்புக்கும்,ஒளிபரப்புக்கும்
    வழங்கினார். அந்தக் காலக்கட்டத்தில் இவர் வானொலி, தொலைகாட்சிப் பாடகராகவும் திகழ்ந்தார்.
    1983 ஜூலைக் கலவரத்தின்போது போது பதினொரு நாட்கள் தமிழ் சேவை ஒலிபரப்பை நடாத்திய
    நால்வர்களில் கோவிலூர் செல்வராஜனும் ஒருவராகும். அதற்காக பணிப்பாளர்களின் பாராடைப்
    பெற்றார்.
    இலங்கையில் தனிப்பட்ட கோவில் ஒன்றுக்கு பத்துப்பாடல்கள் எழுதி,இசையமைத்துப் பாடி
    வெளியிட்ட பெருமையும் இவருக்கு உண்டு. அந்த இசை அல்பத்தில் இவருடன்,மறைந்த
    பாடகி ராணி ஜோசெப், எஸ்.கணேஸ்வரன் இணைந்து பாடியிருந்தார்கள், அமரர் ராஜேஸ்வரி
    சண்முகம் அவர்கள், உகந்தை மலை முருகன் கோவிலுக்கான வரலாற்று சிறப்பை தன் குரலினால்
    அந்த இசை அல்பத்தில் பதிவு செய்து இருந்தார்.
    நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைகாரணமாக கோவிலூர் 1989 டிசம்பர் மாதம் தன் பதவியை ராசினாமா
    பண்ணிவிட்டு நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தார்.
    அந்நிய மொழி,கலை,கலாசாரங்களுடன் வாழவேண்டிய சூழலிலும் இவர் தனது மொழி, கலை பண்பாடுகளின்
    உபாசகராகவே இருந்தார்.இன்றுவரை இருகின்றார்.
    அன்றைய சூழலில் நாட்டில்  ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து,இவர் இலண்டன்,பாரிஸ்  நகரங்களிலிருந்து வெளிவந்த
    தமிழ் பத்திரிகைகளில் கட்டுரைகள்,கவிதைகள்,சிறுகதைகள் எழுதினார். நாட்டுப் பிரச்சினை பற்றி புலத்தில்
    முதல் முதலில் தயாரித்து வெளியிடப்பட்ட “சுதந்திர  தாகம்” இசை அல்பத்தில் பாடல்கள் எழுதியுள்ளார்.
    புலத்திலும்,நிலத்திலும் மக்களின் கஷ்டங்களை தனது “தேசத்தின் தென்றல்” என்ற இசை அல்பத்தின் மூலம்
    வெளிப்படுத்தினார். அன்றைய சூழலில் அந்த இசை அல்பம் ஐரோப்பிய தமிழ் வானொலிகளிலும்,கனடா,அவுஸ்த்ரேலியா
    தமிழ் வானொலிகளிலும் ஒலிபரப்பாகின. இன்றும் ஒலிபரப்பப்படுகின்றன.
    1997ம்  ஆண்டு இவர் எழுதிய “விடியாத இரவுகள்” என்ற சிறுகதை தொப்புக்கு நூலுக்கு தமிழ்நாடு, கோயம்புத்தூர்
    லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது கிடைத்தது.
    திரு.கோவிலூர் செல்வராஜன் அவர்கள் இதுவரை நாவல்கள்,சிறுகதைத்தொகுப்புகள்,கவிதைத்தொகுப்புகள் என்று
    பத்து நூல்களை வெளியிட்டு உள்ளார். திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும்
    பக்கிதிப்பாடல்கள் எழுதிப் பாடி வெளியிட்டு இருக்கின்றார்.
    இவருக்கு பல மதிப்பளிப்புகளும் ,விருதுகளும்  கிடைத்திருக்கின்றன.
    மென்னிசைக் கவிஞர்.ஜெர்மனி தமிழ் மன்றம் (1994)
    தந்தை செல்வா விருது. உலகதமிழ் பேரவை  (1996)
    லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது. தமிழ்நாடு.கோயம்புத்தூர் (1997)
    முத்தமிழ்வாருதி அரியநாயகம் விருது. திருக்கோவில் (2000)
    முத்தமிழ் காவலர். லண்டன் தமிழினி விருது. (2008)
    கவிதைக் காவியர்.  லண்டன் ஸ்கைடோன் கிறிஸ்தவ இணையம் லண்டன்.(2012)
    திருவூர்க்கவிராயர்.  கனடா கிழக்கிலங்கை தமிழர்  (2013)
    கனடா உதயன் சர்வதேச சிறப்பு விருது (2017)
    அக்கினிக்குஞ்சு வாழ்நாள் சாதனையாளர் விருது (2019)
    திரு.கோவிலூர் செல்வராஜன் அவர்கள் தொடர்ந்தும் தனது துறைகள் சார்ந்து தனது படைப்புகளை
    சமூக வலைத்தளங்களில், பத்திரிகைகைகளில், வானொலி,தொலைக்காட்சிகளில் படைத்து
    வருகின்றார். அத்தோடு வருடாவருடம் ஒரு நூலை வெளியிட்டு வருகின்றார். புலத்தில்
    வாழ்ந்தாலும் தாய் மண் பற்றிய சிந்தனைகளுடனும், தமிழ் மொழிபற்றிய கவலைகளுடனும்
    இவர் பயணிகின்றார். தனது காலத்துக்குப் பின்னர், தன் இனத்திற்கும், தனது மொழிக்கும்
    நல்லவை செய்ய இளைய தலைமுறையினரை ஆயதப் படுத்தும் செயல்பாட்டில் அவர்
    முளுமூச்சுடன் செயல்படுகின்றார். தனது மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள
    மாணவ,மாணவிகளுக்கு கல்வியைக் கொடுக்கும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ள
    கல்வி,கலாசார அபிவிருத்தி நிதியத்தின் சர்வதேச இணைப்பாளராக இருகின்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.