நீதானே என் பொன்வசந்தம்!… 2 ( நாவல் )
03
ஓ எல் முடித்து ஏ எல் ஆரம்பித்திருந்த காலம். புதிய ஊர், புதிய பாடசாலை எல்லாமே புதுசு. வீதியில் அப்பப்போ வெடிக்கும் க்ளைமோர் சத்தங்கள் மட்டும் சில வருடங்கள் நெருங்கமானதாக இருந்தது. வீடு, பாடசாலை, டியூசன், மனோகரா தியேட்டர், செல்லா மினி…. எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தில் வந்தாலும் ஒட்டாமலே இருந்தது.
“ஹாய்..”
“ஹாய்”
“நீங்க என்னென்ன பாடம் எடுக்கிறிங்க?”
எல்லோரும் லைப்ரரிக்கு போய்விட நான் மட்டும்தான் வகுப்பில் இருக்கிறேன் என நம்பிக்கொண்டிருக்கிறேன். திடீரென்று அவள் குரல். பின்வரிசையில் உட்கார்ந்திருந்த எனக்கு முன்னால் கதிரையை திருப்பி போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.
“தமிழ், ஜோக்கிரபி, ஆர்ட்… ”
“உங்க ஆர்ட் கொப்பி பார்க்கலாமா”
ஏதோ ஒரு பேர்… நண்பர்கள், ஆசிரியர்கள் கூப்பிடும்போது கேட்டிருந்தேனே… ஞாபகம் வரவில்லை. கொப்பியை புரட்டிக்கொண்டிருந்தாள். அதற்குள் பெயரை ஞாபகப்படுத்திவிடவேண்டும்…. என்னவாயிருக்கும்..!
“உங்கள ஒண்டு கேட்கோனும். குறை நினைக்கமாட்டிங்கதானே?”
சித்திரம் பற்றித்தான் ஏதோ கேட்கப்போகிறாள் என்பது தெரிந்தது. சற்று இடைஞ்சல்தான் என்றாலும் இந்த பாடசாலையில் என்னை தேடி வந்த முதல் நட்பல்லவா
“ம்ம் கேளுங்க…………….”
“நித்யா” சொல்லிவிட்டு சிரித்தாள். “வந்த நேரத்துக்கு வகுப்பில இருக்கிற எல்லா கேர்ள்ஸ் பேரும் தெரிஞ்சிருக்கனுமே.. என்ன ஆள் நீங்க”
“ஏதோ கேட்கனும் என்றிங்க.. கேளுங்க நித்யா”
தயங்கினாள். பின் மெல்ல கேட்டாள்.
“யார் அந்த பிள்ளை…. இப்போ என்னாச்சு”
அவள் கேட்டது உடனே புரிந்துவிட்டதால் ஒரு நிமிடம் அதிர்ச்சியானேன். இந்த பாடசாலைக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. யாரிடமும் ஒன்றை பற்றியும் வாய் திறக்கவில்லை. அப்புறம் எப்படி.
“விளங்கேல்ல நித்யா”
“வந்ததில இருந்து பார்க்கிறன் வருன். எதிலயும் ஒட்டாத மாதிரியே திரியுறிங்க. பார்க்கும்போதெல்லாம் அப்செட்டா இருக்கிறிங்க. அதான் கேட்டன். யார் அந்த பிள்ளை”
இதையெல்லாம் வச்சு நடந்ததை எப்படி முடிவு பண்ணினாள் இவள்.. அதைவிட நேரடியாக என்னிடம் வந்தும் கேட்டும்விட்டாளே…!
”அப்பிடி எதுவும் இல்லை நித்யா” பலவந்தமாக சிரிக்கிறேன் என்பது எனக்கே புரிந்தது. அவளுக்கு தெரியாமல் இருக்குமா? மெதுவாக சிரித்துக்கொண்டே புரட்டி முடித்த கொப்பியை என்னிடம் தந்தாள்.
நல்லா வரையுறிங்க… ஆனா கதைக்கிறிங்கதான் இல்ல.
எழுந்து போய்விட்டாள்.
*****************
”கவிதா” என் முதல் காதல். என்னை விட இரு வயது அதிகமானவள். தலைக்கு மேலால் ஏவப்பட்டுக்கொண்டிருந்த ஷெல்களுகளோடும், ஆங்காங்கே வெடித்து சிதறிய க்ளைமோர்களோடும் சேர்ந்து எங்கள் காதலும் மெல்ல பயனிக்க ஆரம்பித்திருந்தது. அவள்தான் என் உயிர், என் தேவதை, என் உலகம்.. என் எல்லாமுமே அவளாகத்தான் நகர்ந்துகொண்டிருந்தது.
“யாழ்ப்பாணம் போயேதான் ஆகோனுமா”
வழக்கத்திலும் விட அவள் குரலில் குழந்தையின் மழலைத்தனம் அதிகமாகியிருந்தது.அழுதுவிடுவாளோ.. கோவில் என்றும் பாராமல் அவளை கட்டியணைக்கவேண்டும் என்று தோன்றியது.
“அவையள் போகட்டும். நீங்க மட்டும் நில்லுங்களன்”
என்னை தவிர அவள் புரிந்துகொண்ட உலகம் மிக குறைவாகவே இருந்தது. இரண்டு தடவைகள் ஈழமாறனோடு என்னை பார்த்த பின்பும் என் பெற்றோர் அந்த ஊரில் என்னை இருக்கவிடுவார்களா என்பது என்னாலேயே யோசிக்கமுடியாததாக இருந்தது. அதை அவளுக்கு புரிய வைப்பது என்பது பெரிய காரியம்.
“இல்லம்மா. யாழ்ப்பாணம் பக்கத்திலதானே. ஒவ்வொரு சனி, ஞாயிறும் நான் இங்கதான் வருவனம்மா. நீ அழாத ப்ளீஸ்”
கண்களில் திரண்ட கண்ணீரை துடைத்துவிட்டபோது, இதுவரை நாளில் நான் மிக கவனமாக, மென்மையாக நடந்துகொண்டது அந்த கணத்தில்தான் என்று புரிந்தது. அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. என் குழந்தையல்லவா அவள்.
*****************
தோள்களில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். அவள் அழுது மூன்று தடவைகள்தான் பார்த்திருக்கிறேன். என் காதலை அவளிடம் சொன்னபோது அழுதாள். அழுதுகொண்டே சம்மதம் சொன்ன முதல் காதலி அவளாகத்தான் இருக்கமுடியும். அவளை விட்டு பிரிந்து யாழ்ப்பாணம் வந்தபோது அழுதாள். இப்போது மறுபடி அழுகிறாள்.
“ஏன் என்னட்ட சொல்லேல்லெ நீங்க…”
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் ஊரில் ஈழமாறனும் நண்பர்களும் கொலைசெய்யப்பட்டிருந்தனர். அந்த தகவலோடு ஊரில் சேர்ந்து திரிந்தவர்களின் கதைகளும் ஊரார் வாயில் அரசல் புரசலாக கதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவள் அதற்காக மட்டும் அழுகிறாள் என்று தோன்றவில்லை. இல்லாவிட்டாள் என் தோள்களில் சொட்டிக்கொண்டிருந்த அவளது கண்ணீர் ஏன் அத்தனை பாரமாக மனதை அழுத்தியிருக்கவேண்டும்.
ஏன் என்பது இருவருக்குமே புரிந்திருக்கவில்லை.
“கவி…”
அவளை தேற்றுவது அத்தனை சுலபமாகியிருக்கவில்லை. அழுதுகொண்டே இருந்தாள். நானும்தான்…!
“போயிட்டு வாறன் வருன்”
அவளது குடும்பமும் யாழ்ப்பாணத்துக்கு வந்து குடியேறிவிட்டார்கள் என்ற செய்தியோ, காதலிக்க ஆரம்பித்த இத்தனை காலத்தில் அவள் முதன்முறையாக என் பெயரை உச்சரித்திருக்கிறாள் என்பதோ கொடுத்திருக்கவேண்டிய கொண்டாட்ட மனநிலையை அன்று இருவரும் அனுபவிக்கவில்லை என்பது அந்த கணத்தில் அறியப்படாமலே இருந்தது.
இரண்டு வாரங்களின் பின் அவள் குடும்பத்துடன் வெளிநாடு போய்விட்டாள் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. பாவம்.. இறுதிவரை அவளுக்கும் தெரியாமலே போய்விட்டது.
அவளில்லாமல் நானேது. வாழ்க்கை இரண்டு தெரிவுகளைத்தான் என் முன் வைத்தது. அவளை தேடுவதா, தற்கொலை செய்துகொள்வதா !!!!
இடது தோளில் அவளது கண்ணீரின் பாரம் அழுத்த ஆரம்பித்தது.
*****************
சொல்லி முடித்தபோது உன் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்தேன் நித்யா. யாரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்பாத என் ரகசியங்களை ஏன் உன்னிடம் மட்டும் சொல்லவேண்டும் போல் இருந்தது என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டேன்.
“இதெல்லாம் ஒரு பிரச்சினையா வருன். அவங்க எங்க இருக்கிறாங்க எண்டு கண்டுபிடிச்சிடலாம். நீங்க கவலைப்படாதிங்க”
சற்று நெருக்கமாக வந்து அமர்ந்துகொண்டே என் தலையை கோதிவிட்டாய் நித்யா. அந்த ஒரு நிமிடம்… நீ என் தோழியாக மட்டுமல்ல, என் தாயாகவும் இருப்பாய் என்று தோன்றியது…என் தாழ்வுமனப்பாண்மைகளும், வாழ்வு குறித்த விரக்திகளும் உன் முன்னால் சுக்குநூறாகியது.. காலம் முழுவதும் என் ரகசியங்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது… அந்த ஒரு நிமிடத்தில்தான் நித்யா!
என் நம்பிக்கை அன்று பலமடங்கு பலம் பெற்றிருந்தது. கவிதாவை நான் சந்திப்பேன் என்ற என் நம்பிக்கையை விட “நித்யா” என்ற உணர்வு கொடுத்த நம்பிக்கைதான் அது.
(தொடரும்)