நாவல்கள்

காதலர் விமானம் (தொடர் 16) ஏலையா க.முருகதாசன்.

தெல்லிப்பழையிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வரும்; போது எதுவும் பேசிக் கொள்ளாதவள் மல்லாகத்தைக் கடந்து சுண்ணாக எல்லைக்குள் பேருந்து நுழைந்து கொஞ்சத் தூரம் ஓடிக் கொண்டிருக்கையில் வலது பக்கத்து வீட்டைக் குத்திட்டுப் பார்த்து’ இந்த வீட்டுக்கு குண்டு வைக்க வேண்டும்’ என்று சிவகாமிக்கு மட்டுமே கேட்கத்தக்கதாக கோபத்துடன் கொல்கிறாள்.திகைத்துப் போன சிவகாமி ‘யாருடைய வீடு இது’ என்பதற்கிடையில் பேருந்து அந்த வீடடை கடந்துவிடுகிறது.’அந்த வீட்டிலைதான் ஸகந்தாவிலை படிக்கிற அரேபியக் குதிரையை வளர்க்கினம்’ என்கிறாள்.

அர்ச்சணா யாரைச் சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட சிவகாமி எதுவுமே

பேசாதிருக்கிறாள்.முகத்தைத் திருப்பி அந்த வீட்டை பார்க்கிறாள் வீட்டுக்கு முன்னாள் ஒரு சேமசெற் கார் நிற்பது பேருந்தின் வேகத்தினாள் சாதுவாகத் தெரிகிறது. அவர்களிடம் காரும் இருக்கிறது போல என சிவகாமி நினைக்கிறாள்.

தியேட்டரில் முதலாம் வகுப்பின் முன்வரிசையில் சிவகாமியும் அர்ச்சணாவும் இருக்க, அவர்களுக்குப் பின்னால் நாலைந்து பொடியங்கள் வந்து உட்காருகிறார்கள்;. அவர்கள் உதைபந்தாட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் என்பதை அவர்கள் கதைத்துக் கொண்டிருந்ததிலிருந்து அறிய முடிஞ்சுது.சிவகாமியும் அர்ச்சணாவும் காதை கூர்மையாக்கிக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ‘ கொக்குவிலோடு மார்ச் வரட்டும்’ அவைக்குப் பாடம் படிப்பிப்பம் என்கிறான் ஒருவன்.அவர்கள் கொக்குவில் இந்துக் கல்லூரிப் பொடியங்கள் என்பது அவர்களின் கதையிலிருந்து தெரிய வருகிறது.

‘ஸ்கந்தாவிற்கு ஒரு கோல் போட்டு மகாஜனாவை வெல்லச் செய்த அந்த பிளேயர் அவன்ரை பேர் என்னடா’ என்று ஒருத்தன் கேட்க ‘சந்திரன்ரா’ இன்னொருத்தன் சொல்ல, மற்றவன் ‘இனிமேல் அவன் மார்ச்சே விளையாடாத மாதிரி காலை முறிக்கவேணும்’ என்கிறான்.அதைக் கேட்டதும், சிவகாமி கோபத்துடன் அவர்கள் பக்கம் திரும்பி ‘ டேய் யாற்றை காலையடா முறிப்பாய்’ என்று வேகமாக எழுந்து சொன்னவனின் சட்டையை பிடிக்க, அர்ச்சணா’விடடி’ என்கிறாள்.’என்னத்தை விடுகிறது, என்ரை அண்ணையின்ரை காலை முறிப்பன் என்கிறான் என்னைச் சும்மா இருக்கச் சொல்றியா’ என்கிறாள்.அதில் ஒருத்தன் எகத்தாளமாக ‘ ஓகோ அவனின் தங்கச்சியா நீ அதுதான் பொத்துக் கொண்டு கோபம் வருதோ’ என்றதைக் கேட்டதும,; அர்ச்சணா’ கதையை நிற்பாட்டுங்கோ மார்சசென்றால் விளையாடி வெல்ல வேண்டும் காலை முறிக்கிறன் கையை முறிக்கிறன் என்று சொல்லக்கூடாது’ என்று சொல்ல ‘நீ யார் அவன்ரை லவ்வரோ’ என்கிறான் அவர்களில் ஒருத்தன்.’ஒமடா நான் அவன்ரை லவ்வர்தான் அதுக்கு இப்ப என்ன’ என்று கேட்க, ‘அதுதான் மச்சாளும் மச்சாளும் சேர்ந்து படத்துக்கு வந்தனிங்களோ’ என்று நக்கலடிக்க.படம் தொடங்குவதற்கான முதல் மணி அடிக்கிறது.

சிலர் விசிலடிக்கிறார்கள்.சிலர் ‘உங்கடை சண்டையை வெளியிலை வைச்சிருங்கோ, நாங்கள் காசு கொடுத்து நிம்மதியாய் படம் பார்க்க வந்திருக்கிறம் என்று சிலர் சொல்ல.’பொம்பிளைப்பிள்ளையள் மாதிரியே இரண்டும் நடக்குதுகள் ஒரு பயமும் இல்லாமல் ஆம்பிளைப்பிள்ளையின்ரை சட்டையைப் பிடிக்குது அந்தக் காந்தாரி’ என்று ஒரு பொம்பிளை சொல்ல ‘விசர்க்கதை கதையாதை தமையன்ரை காலை முறிப்பனென்றால் ஆருக்கும் கோபம் வருந்தானே என்கிறாள்’ இன்னொரு பொம்பிளை.

பொடியங்களும் சிவகாமியும் அர்ச்சணாவும் எழுந்து நின்று வாக்குவாதப்பட, ‘வெளியிலை போங்கோ இல்லாட்டி சண்டை பிடிக்காமல் இருங்கோ’ என்று ஒருவர் எழுந்து வந்து சமாதானப்படுத்துகிறார்.சிவகாமியினால் சேர்ட்; பிடிக்கப்பட்ட பொடியன், அவளுக்கு அடிக்க கையை ஓங்க, யாருமே எதிர்பாராத சம்பவம் நடக்கிறது.கலவர பூமியாகிறது தியேட்டர்…

எப்படி அந்த இளைஞன் எங்கிருந்து வேகமாக வந்தானோ தெரியாது, வந்த வேகத்தில் சிவகாமிக்கு கையை ஓங்கிய கையைப் பிடித்தவன் அவனுக்கு அடிக்க கையை ஓங்குகிறான்,உடனே மற்றப் பொடியங்கள் அவனைப் பிடித்துத் தள்ளுகிறார்கள்.

விழுந்த அந்த இளைஞன் வேகமாக எழுந்து தள்ளிய பொடியங்களை அடிக்கிறான்.அவர்கள் தில்லுமுல்லுப்பட கதிரைகள் விழுகின்றன.படம் பார்க்க ஆவலாக வந்திருந்தவர்களில் சிலர்’ எங்கை பார்த்தாலும் பொட்டையளாலைதான் பிரச்சினை’ என்று புறுபுறுக்க,அந்தப் பொடியங்களில் ஒருவன்,’டேய் இவன் சாகித்தியனடா,ஸ்கந்தாவைச் சேர்ந்தவனடா,நிற்பாட்டுங்கடா சண்டையை’ என்கிறான்.

சண்டை பிடித்தவர்கள் அப்படியே விட்டிட்டு அமைதியாகிறார்கள்.வாசலில் டிக்கற் கிழிப்பவர்களில் இருவர் ஓடிவந்து, ஒழுங்காய் போய உங்கடை இடத்திலை உட்காருங்கள் , இல்லாட்டி வெளியே போங்கள் என்கின்றனர்.சண்டை பிடித்தவர்கள் அமைதியாகிறார்கள். தியேட்டருக்குள் நடந்த சண்டையால் படம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் தாமதமாக ‘ படத்தைப் போடு ……படத்தைப் போடு’ என்று சிலர் கத்துகிறார்கள், சிலர் விசிலடிக்கிறார்கள்.

சிவகாமிக்கும் அர்ச்சணாவுக்கும் பின்னால் உட்கார்ந்திருந்த அந்து ஐந்து பொடியங்களும் மெதுவாக எழுந்து போய் வோறொரு இடத்தில் உட்காருகிறார்கள்.

ஆனால் சிவகாமியும் அர்ச்சணாவும் அந்தப் பொடியங்களையே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தார்கள் சிவகாமி அர்ச்சணாவிடம் ‘ அவங்கடை முகங்களை வடிவாய்ப பார்த்து வை.போட்டோ எடுத்தது மாதிரி ஞாபகம் வை.’ஏன் நீயே ஞாபகமாய் வைச்சிரு, நான் அதைச் செய்யமாட்டன்’ என்கிறாள்.

சிவகாமி அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை.

படம் முடிஞ்சு வெளியே வந்த சிவகாமியும் அர்ச்சணாவும் அந்தப் பொடியங்கள் எங்கை நிற்கினம் என்று பார்க்கிறார்கள்.அவர்களுக்கு முன்னாலேயே அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்,அவர்களும் இவர்களைத் திரும்பிப் பார்க்கிறார்கள்.

தியேட்டர் எல்லையைவிட்டு வந்து வீதியில் ஏறி நடக்கத் தொடங்குகையில் சாகித்தியன் அவர்களருகில் வந்து ‘பஸ் ஸ்ராண்டுக்கா போகிறியள் வாருங்கள் நான் காரிலை கொண்டு போய் விடுகிறன்’ என்கிறான்.’இல்லை வேண்டாம் நாங்கள் துணிக்கடைக்குப் போக வேணும், நீங்கள் கேட்டதற்கு நன்றி, நீங்கள் போங்கள்’ என்கிறாள் அர்ச்சணா.

‘அந்தப் பொடியங்கள் ஏதாவது பிரச்சினைப்படுத்துவாங்கள், பரவாயில்லை வாருங்கள் துணிக்கடையடிக்கே கொண்டுபோய் விடுகிறன்’ என்று கட்டாயப்படுத்த, சிவகாமியும் அர்ச்சணாவும் வேறுவழியின்றி சாகித்தியனின் காரில் ஏறிப் போகிறார்கள்.

காரில் போகும் போது’அது சரி ஏன் அந்தப் பொடியங்களோடை சண்டை போட்டனீங்கள்’ என்று அவன் கேட்க,’என்ரை அண்ணையின்ரை காலை முறிக்க வேணுமாம்’ அதுதான் கோபம் வந்தது.

‘ஏன் உங்கடை அண்ணையின்ரை காலை முறிக்க வேணுமாம்’

‘அண்ணை மகாஜனாவின்ரை புட்போல் பிளேயர், ஸ்கந்தாவோடை நடந்த மார்ச்சிலை கடைசி நேரத்திலை கோல் அடிச்சது அண்ணைதான்,கொக்குவில் இந்துக் கல்லூரிப் பொடியங்கள் தங்கடை மாரச்சிலை அண்ணையின்ரை காலை முறிக்க வேணுமென்டு சொல்லிச்சினம், அதுதான் கோபம் வந்து அடிக்கப் போயிட்டன்’ என்று சொல்வதைக் கேட்ட சாகித்தியனின் முகம் மாறுது.

சாகித்தியன்தான் மகாஜனா உதைபந்தாட்ட வீரர்கள் ஏறி உட்கார்ந்திருந்த வானுக்கு கல்லால் எறிந்தவன்.எறிந்த கல் வானின் கண்ணாடியை உடைக்க சிதறி வந்த கண்ணாடித் துண்டு சாகித்தியனின் நெற்றியை வெட்டியது.

அதையெல்லாம் நினைத்து சாகித்தியன் அமைதியாகவிருந்தான்.’இதுதான் கடை, நிற்பாட்டுங்கோ’ என்கிறாள் சிவகாமி, கடையைப் பார்த்த சாகித்தியன் ‘இந்தக் கடையா’ என்கிறான்.அவர்கள் சுட்டிக்காட்டிய கடைக்கு சற்றுத்தள்ளி காரை நிற்பாட்டியவன், இந்தக் கடையிலும் போய் சண்டை பிடிப்பியளா’ சிரித்துக் கொண்டே கேட்க, நான் போற இடமெல்லாம் தேவையில்லாமல் சண்டை பிடிக்கிற சண்டைக்காரி என்று நினைச்சிட்டியளோ’ எனக் கேட்டவாறே காரை விட்டு இறங்குகிறாள்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.