நாவல்கள்

காதலர் விமானம் (தொடர்:13) ஏலையா க.முருகதாசன்.

‘அர்ச்சணா நீ முழுப்பூசணிக்காயை சோற்றிலை மறைக்கிற மாதிரி ஏதோ திட்டத்தோடை பொய் சொல்கிறாய், அண்ணைக்கு ஸ்கந்தா மைதானத்திலை வைத்து வியர்வையைத் துடைக்கச் சொல்லி அந்த நெடுமி குடுத்ததை நீயும் பார்த்தனி ஏண்டி இப்படிப் பொய் சொல்கிறாய்’ என்று சிவகாமி கோபமாய்க் கத்தினாள்.

சந்திரனுக்கு ஸ்கந்தா மைதானத்தில் வைத்து யாரோ ஒருத்தி கைக்குட்டை கொடுத்த விசயம் இதுநாள் வரை தாயக்கும் தகப்பனுக்கும் தெரியாமலிருந்தது.ஆனால் அர்ச்சணாவால் தெரியவர,’யாரடா அந்த நெடுமி’ என்று தாய் கேட்க’ ‘ஓகோ விளையாடுற இடத்திலை இந்த விளையாட்டும் நடந்திருக்கோ’ என்று சொல்லியபடி தங்கம்மா புகையிலைத் துண்டொன்றை பாக்கு வெற்றிலைக்கு உவப்பாக வாயக்குள் திணத்து குதப்புகிறாள்.

அர்ச்சணா ஏன் இப்படி அபாண்டமாய்ப் பொய் சொல்கிறாள் என்று குழம்பிப் போயிருந்த சந்திரன், ஸ்கந்தா மைதானத்தில் வைத்து சாந்தினி என்றவள் வியர்வையைத் துடை என்று சொல்லிக் கொடுத்த கைக்குட்டை விசயம் தெரிய வரவே என்ன செய்வதென்று தெரியர்து தடுமாறினான்.

இதுநாள்வரை தனது தங்கை கைக்குட்டை விசயத்தை வீட்டிலை யாருக்கும் சொல்லாமல் விட்டதை அர்ச்சணா போட்டுடைத்துவிட்டாளே என்பது ஒரு புறமும், தான்தான் கைக்குட்டையைத் தந்தது என்று துணிந்து பொய் பேசுகிறாளே எனச் சந்திரன் திக்கித்திணறிப் போயிருந்தான்.

அண்ணன் வீடாயிருந்தாலென்ன அது யார் வீடாகவிருந்தாலென்ன ஊரில் நடக்கும் அவரவர் தனிப்பட்ட விடயங்களுக்கு தனது மனம் போனபடி காது மூக்கு வாய் வைத்து கதைப்பது மட்டுமல்ல அவற்றை ஊருக்குள் புகைய விடுவதில் தங்கம்மாவை யாராலும் மிஞ்ச முடியாது.

ஸ்கந்தா மைதானத்தில் வைத்து வேறொருத்தி கொடுத்த கைக்குட்டையை தான் கொடுத்ததாக துணிந்து பொய் சொல்கிற அர்ச்சனா தான் சந்தேகப்பட்டது போல அண்ணனை இவள் விரும்புகிறாளோ என நினைக்கிறாள் சிவகாமி.

சந்திரனும் தாயும் அர்ச்சணாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது தடுமாறினார்கள்.ஆனால் தங்கம்மா எந்தக் கவலையுமே இல்லாமல் அடுத்து நடக்கப் போவதை வேடிக்கை பார்க்கத் தயாரானாள்.

அப்பொழுது வேகமாக எழுந்த சிவகாமி அர்ச்சனாவின் கைகள் இரண்டையும் இறுக்கிப் பிடித்தபடியே தூக்கியவள் ஒரு கையாள் அவளின் பிடரியைப் பிடித்தபடி ‘ நீ எங்களின்ரை சொந்தக்காரி அயல்வீட்டுக்காரி என்ரை தோழி என்று எவ்வளவு பாசமாய் அக்கறையாய் இருந்தனான் இப்படி நாக்கூசாமல் பொய் சொல்கிறேயடி, ஏனடி உனக்கு விசர்கிசர் ஏதாவது பிடிச்சிட்டா உண்மையை சொல்லடி என் தலைமீது அடிச்சு சத்தியம் செய்து சொல்லடி அண்ணைக்கு நீயா ஸ்கந்தா மைதானத்திலை வைச்சு கைக்குட்டை குடுத்தனி’ என்று கேட்க, அடுத்த கணமே சிவகாமியின் தலையில் அடித்து சத்தியம் செய்த அர்ச்சணா ‘நான்தான்டி சந்திரனுக்கு ஸ்கந்தா மைதானத்திலை வைத்து வியர்வையைத் துடை என்று கைக்குட்டையைக் குடுத்தனான்’ என்றவள், வீடே அதிரும்படி ‘ மகேஸ்மாமி நான் பெரியபிள்ளையாய் ஆகும் முன்னமே சந்திரன் எனக்குக் காதல் கடிதம் தந்தவர்.இதை யாருக்குமே இன்றுவரையும் சொல்லேலை.ஏனென்றால் அவர் என்னைக் காதலிக்கிறார், நானும் அவரைக் காதலிக்கிறன்.அவர் சொல்லாததற்கு நான் பொறுப்பல்ல’ என்றவள் சந்திரனுக்கு அருகில் போய்; நின்று ‘சந்திரன் இப்பவாவது உண்மையை அவைக்கு சொல்’ என்றவள் சந்திரனின் தாயின் பக்கம் திரும்பி’ மாமி எனக்கு அவனைக் கல்யாணம் செய்து வைக்காமல் வேறு யாருக்கேணும் செய்து வைத்தீர்களோ, அவன் கல்யாணத்தன்று நான் சாவன்’ என்று சொல்லியபடி சிவகாமியின் பக்கம் திரும்பியவள்’உனக்குந்தான்’ என்றவள் விம்மி விம்மி அழுதபடி அவர்களின் வீட்டைவிட்டுப் போகிறாள்.

சச்சிதானந்தம் வீட்டுக் கலகலப்புப் போய் நிசப்தம் நிலவியது.நிசப்தத்தை கலைத்த சந்திரன் ‘ அம்மா உன்மீது சத்தியமாய்ச் சொல்றன் நான் ஒரு கடிதமுமே அவளுக்கு குடுக்கவில்லை.அவள் ஏன் இப்படி பொய் சொல்றாள் என்று எனக்கும் விளங்கேலை’ என்கிறான்.

சிவகாமி எதுவுமே பேசாமல் சுவரோடு சாய்ந்து மேலே பார்த்தபடி இருக்கிறாள்.தனது தோழி எதற்காக இப்படிப் பொய் சொல்கிறாள் என நினைத்தாளோ என்னவோ அவளின் கண்களிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் கொட்டியது.

அதைக் கவனித்த தங்கம்மா’ நீ ஏண்டி அழுகிறாய், அர்ச்சணாவிற்கு கிஸ்ரீரியா வாய்வாக்கும்’ என்கிறாள்.

தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்த சச்சிதானந்தம் எப்பொழுதும் கலகலப்பாகவிருக்கும் வீடு அமைதியாகவிருப்பதும் எவருமே எதுவுமே பேசாமலிருப்பதையும் கவனித்த போதும் அதுபற்றி யாரிடமுமே கேட்காது முகம் கைகால் கழுவுவதற்காக கிணத்தடிப் பக்கம் போகிறார்.

அன்றிரவு கணவனுக்கு அர்ச்சணா சொன்ன அத்தனையையும் மகேஸ்வரி

சொல்லிவிடுகிறாள்.எல்லாவற்றையும் மூடிமறைத்து வைத்திருந்துவிட்டு நாளைக்கு அது பெரும்பிரச்சனையாக வருவதற்கு முன்னர் கணவரிடம் சொன்னால் அதற்கு அவர் ஏதாவது தீர்வு காண்பார் என்ற எண்ணமே மகேஸ்வரி சொன்னதற்குக் காரணம்.

ஒரு கிழமையாக சச்சிதானந்தம் வீடு அமைதியாக இருந்தது.ஒரு நாள் சச்சிதானந்தம் கதிரையில் ஊட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் போது வாசல்படியில் யாரோ வந்து நிற்பது போல நிழலாட பத்திரிகையை முகத்திலிருந்து விலத்திப் பார்க்க அர்ச்சணா அங்கே படியிலேயே தயக்கத்துடன் நிற்கிறாள்.அவள் பார்வையில் ஒரு தயக்கம் பயம் இருந்ததைக் கவனித்த சச்சிதானந்தம் வழமையான சிரிப்புடன் ‘ஏன் அங்கை நிற்கிறாய் உள்ளை வா பிள்ளை ‘ என்கிறார்.

வீட்டு விறாந்தையில் நின்றபடி பார்க்கிறாள் யாரையுமே காணவில்லை.முகத்தைத் திருப்பி சச்சிதானந்தத்தைப் பார்க்க’எல்லாரும் உள்ளைதான் இருக்கினம்’ என்றவர்’சிவகாமி’ என்கிறார்.

அறையைவிட்டு வெளியே வந்த சிவகாமி விறாந்தையில் அர்ச்சணா நிற்பதைக் கண்டதும் எதவுமே பேசாது கதிரையில் உட்காருகிறாள்.

அர்ச்சணா, சச்சிதானந்தம் வீட்டுக்கு வரும் போதெல்லாம் தானாகவே அவர்களின் அடுப்படிக்குச் சென்று உரிமையுடன் தேநீர் போட்டு எல்லாருக்கும் கொடுத்து தானும் குடிப்பாள்.அவர்களில் ஒருத்தியாக அவள் அவர்களின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள்.

அர்ச்சணா அடுப்படிக்குள் போனதை யாருமே தடுத்து நிறுத்தவில்லை.அடுப்படிக்குள் சிவகாமிதான் நிற்கிறாள் என நினைத்த மகேஸ்வரி அறையைவிட்டு வெளியே வந்தவாறு ‘எனக்கும் அப்பாவுக்கும் கோப்பி போடு’ என்று சொல்லிக் கொண்டே அடுப்படிக்குள் போனவள் அங்கே அர்ச்சணா கோப்பி போட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டு திகைத்துப் போகிறாள்.

அர்ச்சணா எதுவுமே பேசாது ஒரு கோப்பிக் குவளையை ‘மாமி இந்தாங்கோ’ எனக் கொடுக்க மகேஸ்வரியும் எந்தத் தயக்கமும் காட்டாது வாங்கியவள் அவளை உற்றுக் கவனிக்கிறாள்.

இரண்டு கோப்பிக் குவளையுடன் விறாந்தைக்கு வந்தவள் ‘மாமா இந்தாங்கோ’ எனக் கோப்பிக் குவளையைக் கொடுக்கிறாள்.அவரும் எந்தத் தயக்கமும் காட்டாமல் அவள் நீட்டிய கோப்பிக் குவளையை வாங்குகிறார்.

தலையைக் குனிந்து கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த சிவகாமியிடம் ‘இந்தா பிடி’ எனக் கோப்பிக் குவளையை நீட்ட, சிவகாமி தயக்கம் காட்ட, ‘பிடிக்கிறியா வெளியெ நான் ஊத்தவா’ என வெருட்டும் குரலில் அர்ச்சணா கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தவாறு வாங்குகிறாள்.

அமசடக்காய் ஊமல்கொட்டை மாதிரி இருந்தவளுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல்

வந்தது என யோசித்தவாறு தாயைத் திரும்பிப் பார்க்கிறாள்.தாயும,; தங்களுடைய வீட்டில் இப்படி உரிமை எடுத்துக் கொண்டதாலோ என்னவோ எங்கள் வீட்டுக்கு மருமகளாக வர ஆசைப்படுகிறாளோ என மகேஸ்வரி கதவு நிலையில் சாய்ந்து கோப்பி குடித்தவாறே யோசிக்கிறாள்.

அப்பொழுது சைக்கிளை விறாந்தை வெளிச் சுவரோடு சாத்திவிட்டு விறாந்தையில் ஏறிய சந்திரன் அர்ச்சணாவை அங்கு கண்டதும்’அப்பா….’ என ஏதோ சொல்ல வர எதுவுமே சொல்ல வேண்டாம் என சந்திரனைப் பார்த்து ஆட்காட்டி விரலை அங்குமிங்கும் அசைக்கிறார்.

எதுவுமே பேசாது தன்னைத் திரும்பிப் பார்க்காது போகும் சந்திரனை கண்களை உயர்த்தி ஒரு எகத்தாளமான சிரிப்புடன் பார்க்கிறாள்.அவள் சிரிப்பில் நீதான் எனக்குப் புருசன், நான் இந்த வீட்டுக்குள் எப்போதோ மருமகளாக நுழைந்துவிட்டேன் என்ற அர்த்தம் இருந்தது.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.