பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 24… செங்கதிரோன்

கொழும்புத்தமிழ்ச்சங்க இலக்கியக்களம் – 514 “கவிதையில் ஓசையின்பம்”
வாசிப்புக் கலாசாரத்தை விருத்தி செய்தல் – கலை இலக்கிய இரசனையை வளர்த்தல் – இலைமறையாக இருக்கும் ஆளுமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரல் – சபையோரைப் பார்வையாளர் நிலைக்கும் மேலாகப் பங்கேற்பாளர் என்ற தரத்திற்கு உயர்த்துதல் – கலந்துரையாடல்களை ஊக்குவித்தல் என்பவற்றை இலக்குகளாகக் கொண்டு கொழும்புத்தமிழ்ச்சங்கம் 2014 இல் ஆரம்;பித்துப் பிரதிவெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு ‘இலக்கியக்களம்’ எனும் தொடர் நிகழ்வினை நடாத்தி வருகிறது.
அந்தவகையில் 514 ஆவது ‘இலக்கியக்களம்’ நிகழ்வு 23.10.2026 அன்று கொழும்புத்தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் கவிஞர் எந்திரி நியாஸ் ஏ. ஸமத் (நிலையமைப்புச் செயலாளர், கொழும்புத்தமிழ்ச்சங்கம்) தலைமையில் இடம்பெற்றது.
கொழும்புத்தமிழ்ச்சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் செங்கதிரோன். த.கோபாலகிருஸ்ணன் இந்நிகழ்வில் ‘கவிதையில் ஓசையின்பம்’ எனும் தலைப்பிலே ஆற்றிய உரை இங்கே பகிரப்படுகிறது.
கவிதையென்பது யாது என்பதற்கு கவிஞர்களும், ஆய்வாளர்களும், தமிழறிஞர்களும் தத்தம் பார்வையில் பற்பல விளக்கங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அவற்றுட் சில
• “கற்பனையும் உணர்ச்சியும் நேரிய வழியில் யாப்பு வடிவத்தில் இன்பத்தைப் படைத்தளிக்கும் கலையே கவிதை”
• “புலப்படும் வடிவிலும் கலை வடிவிலும் உள்ளம் தனதுணர்வை ஒலிநயமிக்க மொழியில் வெளியிடுவதே கவிதை”
• “கவிதை என்பது இசைச்சிந்தனை” (ஆரளiஉ வுhழரபாவ)
சிறுகதை, நாவல், கவிதை, காவியம் என எல்லா ஆக்க இலக்கிய வடிவங்களுக்கும் உள்ளடக்கம் – கற்பனை – உணர்ச்சி வெளிப்பாடு – அழகியல் என்பன பொதுவானவையே. ஆனால், உரைநடையையும் கவிதையையும் வேறுபடுத்திக்காட்டுவது கவிதையில் காணப்படும் ஓசையே – சந்தமே ஆகும். ஓசை நயமிக்க அளவொத்த யாப்பு மொழியே உரைநடையையும் கவிதையையும் வேறுபடுத்திக்காட்டும் பிரிகோடு ஆகும்.
யாப்பமைதி மட்டுமே கவிதையாகி விடவும் மாட்டாது. வெறுமனே யாப்பு மட்டும் உயிரற்ற உடல் போன்றது. ஏனெனில் யாப்பு கவிதைக்கு உருவத்தை – வடிவத்தை மட்டுமே கொடுக்கும். யாப்பு வடிவத்துடன் உணர்ச்சி – கற்பனை – அழகியல் – உன்னதமான உள்ளடக்கம் என்பவற்றைப் பிசைந்து ஓசைநயமிக்க மொழிநடையில் மொழிவதே கவிதையாகும்.
ஆகவே, இதுகாறும் கூறியவற்றால் கவிதைக்கு ஓசை – சந்தம் பிரதான கூறாகும். ஓசையில்லாதது – சந்தமில்லாதது அது உன்னதமான உள்ளடக்கத்தையும், கற்பனையையும், உணர்ச்சி வெளிப்பாட்டையும், அழகியலையும் கொண்டிருந்தாலும்கூட கவிதையாகி விடமுடியாது. அத்தகைய ஆக்கங்கள் யாவும் உரைநடை இலக்கியங்களாகவே கருதப்பட வேண்டியவை. கவிதையில் இன்பத்தை ஊட்டுவது ஓசையேயாகும். கவிதை மொழியில் செவிக்கு இன்பம் கிடைப்பதற்குக் காரணமாயமைவது ஓசைநயமிக்க சொற்களைக் (ஆரளiஉயட றழசன) கோர்த்தளிப்பதேயாகும்.
“ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானாமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில்
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
பூதங்களொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ?
ஆசைதருங்கோடி அதிசயங்கள் கண்டதிலே.
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!”
ஓசைதரும் இன்பத்தைப் பாரதி இவ்வாறு கவிதையிலே பதிவு செய்துள்ளதைப் பார்க்கின்றோம்.
குயிலின் கூவல் ஓசையிலே – மயிலின் அகவல் ஓசையிலே – மரங்கள் எழுப்புகின்ற ஓசையிலே – காற்றின் ஓசையிலே – சலசலத்து ஓடும் நீரின் ஓசையிலே மற்றும் ஏனைய உயிரினங்கள் எழுப்பும் ஓசையிலே என்று இவ்வாறான இயற்கை எழுப்புகின்ற ஓசைகளிலே மனம் இலயித்துக் கிடக்காத மனிதர்கள் எவருளர்.
இனிக்கவிதை தரும் ஓசை இன்பத்திற்கு வருவோம். கவிதை ஒன்றின் உயர்வுக்கு அதன் உள்ளடக்கமும் உணர்ச்சி வெளிப்பாடும் பிரதான கூறுகளாக இருந்தாலும்கூட ஓசை இன்பம்தான் கவிதையின் உயிர்நாடி.
கவிதைக்கு ஓசை முக்கியம். அதுவும் தொடரோசை. ஓசை இல்லாதது கவிதையாகி விடாது.
மறுதலையாக ஓசை உள்ளது எல்லாம் கவிதையாகிவிடவும் மாட்டாது. அப்படியாயின் பழமொழிகள், விடுகதைகள் எல்லாம் கவிதையாகிவிடும் விபத்து நிகழ்ந்துவிடும். அதனால் தான் கவிதைக்குத் ‘தொடரோசை’ முக்கியமானது.
யாப்பிலக்கணம் கூறும் எதுகை, மோனை, இயைபுத்தொடை என்பன கவிதையொன்றிற்கு ஓசையை சந்தத்தை வழங்கும் பிரதானமான கூறுகளாகும்.
ஆனால், தமிழில் ‘புதுக்கவிதைப்போக்கு’ அறிமுகமானதும் யாப்பை முற்றாகவே புறந்தள்ளிவிட்டுப் புற்றீசல்கள் போலப் புறப்பட்ட புதுக்கவிதைகளில் ஓசை இன்பத்தை நுகரமுடியவில்லை. ‘புதுக்கவிதை’க்கு ஓசை ஒருபொருட்டல்ல என்பது பொதுவிதியாகிவிட்டது. அதேவேளை யாப்பு மட்டும் கவிதையாகிவிடாது. கவிதையின் வடிவம் (யாப்பு) உடல் என்றால் உயிர்தான் கவித்துவம் கவித்துவத்திற்கு உள்ளடக்கம் – உணர்ச்சி வெளிப்பாடு என்பவற்றுடன் ஓசையும் அதிமுக்கியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
மேலும், எதுகை, மோனை, இயைபுத்தொடை போன்ற யாப்பிலக்கிணக் கூறுகளை மேலோட்டமாகப் பார்ப்பது இத்தருணத்தில் எடுத்துக்கொண்ட தலைப்புக்குப் பொருத்தமானதென எண்ணுகின்றேன். எளிய உதாரணமொன்றைப் பார்க்கலாம்.
“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
எனும் குறளில் முதலடியில் நான்கு சீர்களிலும் முதலெழுத்து ‘க’ வருகிறது. மோனை என்பது சீர்களின் முதலெழுத்து ஒன்றி வருவதாகும்.
அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும். இக்குறளில் முதலாம் அடியிலுள்ள முதல் சீரான ‘கற்க’ என்பதில் ‘ற்’ றும் இரண்டாம் அடியிலுள்ள முதல் சீரான ‘நிற்க’ என்பதில் ‘ற்’ றும் ஒன்றி வருகின்றன. இதுவே எதுகையாகும்.
கம்பராமாயணப் பாடலொன்றைப் பார்ப்போம்.
“வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கேற்ப நயம்பட வுரைத்த நாவும்
தாரணி மௌலிபத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போக்கி வெறுங்கையோ டிலங்கை புக்கான்”
இராமனிடம் எல்லாவற்றையும் இழந்து தோற்ற இராவணன் வெறுங்கையோடு இலங்கை திரும்புவதைக் கம்பர் காட்சிப்படுத்தும் பாடல் இது.
இப்பாடலில் முதலடியில் வரும் ‘வார’ – இரண்டாமடியில் வரும் ‘நார’ – மூன்றாமடியில் வரும் ‘தார’ – நான்காமடியில் அதாவது இறுதியடியில் வரும் ‘வீர’ என்பவை எதுகைளாக வந்து ஓசையை – சந்தத்தை வழங்குகின்றன.
முதலாமடியில் வரும் ‘வாரணம்’ மற்றும் ‘வரையினை’ என்பவற்றில் ‘வா’ மற்றும் ‘வ’ ஒன்றிவருவதால் இவை மோனைகள் ஆகும்.
அதேபோல், இரண்டாமடியில் வரும் ‘நாரதர்’ மற்றும் ‘நயம்பட’ என்பவற்றில் ‘நா’ மற்றும் ‘ந’ ஒன்றிவருவதால் இவையும் மோனைகள் ஆகும்.
இனி ‘குற்றலக்குறவஞ்சி’ எனும் சிற்றிலக்கியத்தில் வரும் பாடல் வரிகளைப் பார்ப்போம்.
“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்!
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்!
இங்கே முதலாம் அடியின் இறுதிச்சீரான ‘கொஞ்சும்’ மற்றும் இரண்டாம் அடியின் இறுதிச் சீரான ‘கெஞ்சும்’ என்பதும் இயைபுத்தொடைகள் ஆகும்.
எனவே கவிதையொன்றிற்கு ஓசையை – சந்தத்தை வழங்கும் யாப்பிலக்கணக்கூறுகளான எதுகை, மோனை, இயைபுத்தொடை என்பன கற்பனையோடும், உணர்ச்சி வெளிப்பாட்டோடும். உன்னதமான உள்ளடக்கத்தோடும், அழகியலோடும் இணைந்தும் பிணைந்தும் வருகிறபோதுதான் அது கவித்துவம் மிக்க கவிதையாகப் பிரசவம் பெறும்.
இந்தப் பின்னணியிலே வைத்துப் பார்க்கும்போது உண்மையில் ஓசையற்ற புதுக்கவிதைப் போக்கு உரைநடையின் வளர்ச்சியேதவிர அது கவிதையின் வளர்ச்சி அல்ல. கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் உரைவீச்சான புதுக் கவிதையைப் ‘பா’ இலக்கியத்திற்குள் சேர்க்காது அதனை உயர்ந்த உரை இலக்கியமாகவே நிறுவியுள்ளார். புதுக்கவிதை இலக்கியத்திற்கு அவர் இட்டுள்ள பொருத்தமான பெயர் ‘பொழிச்சல்’ என்பதாகும்.
வால்மீகி முனிவரால் வடமொழியில் இயற்றப் பெற்ற இராமாயண இதிகாச காவியத்தை தமிழில் ‘கம்பராமாயணம்’ ஆக்கிய கம்பன் தனது பாயிரத்தில்
‘ஒசைபெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நாக்குப் புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ’ என்கிறான்.
ஆரவாரிக்கும் பாற்கடலில் உள்ள பால் முழுவதையும் பூனையொன்று தன் நாவினால் நக்கிக் குடிப்பது போன்ற (அது இயலாது)ஆசையில் ஈடு இணையற்ற இராமனின் கதையைப் பாட முன்வந்தேன் (அதுமுழுமையாக இயலாது என்ற பொருள் பட) எனத் தன்னடக்கத்ததைக் கம்பன் முன்வைப்பதாகவே இப்பாடலுக்குப் பொருள் கொள்ளப்படுகின்றது.
ஆனால், என்பதனை ‘உயர் பாற்கடல்’ என்பதிலிருந்து தனியே எடுத்துநோக்கி ‘ஓசைபெற்று……… அறையலுற்றேன்’ எனக் கம்பன் கூறுவதாகப் பொருள் கொண்டால் கவித்துவத்தை உயர்த்துவதற்காய் ஓசைக்கு முக்கியம் கொடுத்து ஓசை இன்பத்தை உணர்ந்து (ஓசைபெற்று) இதனைப் பாட வந்தேன் (அறையலுற்றேன்) எனவும் பொருள் கொள்ளலாம். பாரதிக்கு முன்பே கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஓசையின் முக்கியத்துவத்தை இவ்வாறு உணர்த்திவிடுகிறான் என்பதும் இப்பாயிரத்தினுள் அடங்கியுள்ளது எனலாம்.
கவிதை தரும் ஓசை இன்பத்திற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம் கவிச்சக்கரவர்த்தி கம்பனிலிருந்தே ஆரம்பிக்கலாம்.
அனுமானை – ஆஞ்சநேயரை நோக்கிப் பிராத்தனை செய்வதைப் பின்வருமாறு பாடலாக்குகிறான்.
“அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆர் உயிர் காக்கரகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்”
இங்கே ‘அஞ்சிலே’ என்ற சொல் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பொருள்களைத் தந்து எழுப்பும் சந்தம் – ஓசைவியந்து போற்றுதற்குரியது.
அடுத்து மகாகவி பாரதியாரின் பாடல்வரிகளைப் பார்ப்போம்.
“செந்தமிழ் நாடடென்னும் போதினிலே – இன்பத்
தேன் வந்துபாயுது காதினிலே!
தந்தையர் நாடடென்னும் பேச்சினிலே – ஓரு
சக்திபிறக்குது மூச்சினிலே!”
இப்பாடல்வரிகள் எழுப்பும் எளிமையான ஓசை எம்மை இன்ப சாகரத்தில் ஆழ்த்துகிறது. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஈழத் தமிழ் மண்ணின் வளப்பம் குறித்துத் தனது ‘தமிழன் கனவு’ குறுங்காவிய நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார்.
“வேரோடு பலாக்கனி தொங்கும்! – ஆங்கே
வெள்ளாடு பழத்தின்மேல் முதுகு தேய்க்கும்!
நீரோடை வெள்ளத்தில் மீனையுண்டு
நெஞ்சத்தால் வெறிகொண்ட கொக்கினங்கள்
கூரானவாய் கொண்டு மரத்தின் கொம்பில்
கூட்டுத்தேன் உடைத்தலும் தேனின் ஆறு
பாரெல்லாம் பெருக்கெடுத் தோடும்! – ஆங்கோர்
படைமட்டும் தள்ளாடிப் பயணம் போகும்!”
நாட்டுவளப்பம் கூறும் சங்ககாலப் பாடல்களுக்குச் சமதையான இப்பாடல் வரிகளிடையே இழையோடும் சந்தம் – ஓசை பலாச்சுளைபோல் இனிக்கிறது. மட்டுமல்ல ஒரு பயணம் போவது போலவும் அமைகிறறு. ஈழத்து நவீன கவிதையின் முன்னோடிகளெனக் கவிஞர்கள் மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூவரின் பெயர்களும் பெரும்பாலும் இலக்கிய உலகில் வாய்ப்பாடுபோல உச்சரிக்கப் பெறுபவை. இந்த மூவருமே ‘புதுக்கவிதை’யைக் கவிதைக்குள் சேர்க்காது நிராகரித்தவர்களே.
கவிஞர் நீலாவணன் அவர்கள்
“இலக்கணத்தைக் கையாள ஏலார் வசனம்
புதுக்கவிதையாமோ புகல்”
என்று குறட்பாவும் படைத்தார். மேலும் நீலாவணன் அவர்கள் தனது ‘வழி’ எனும் நெடுங்கவிதையின் ஓரிடத்தில்
“நொய்வதா மரபும் மாண்பும்
காவல்செய் துன்னை என்னும்
கன்னியாய் வாழச் செய்யும்
ஆவலால் வந்தேன்”
என்று புதுக்கவிதைமீது போர் தொடுக்கிறார். அதேபோன்றுதான் மஹாகவியும் ஓரிடத்தில் “யாப்புமுறையற்று நெஞ்சிலே ஃ ஊன்றாத நோஞ்சல் ஃ உரைநடைப் பாக்கள்” எனப் புதுக்கவிதையைப் புறந்தள்ளுகிறார்.
பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்கள் தேசியக்கலை இலக்கியப் பேரவைவெளியிட்ட முருகையன் சிறப்பிதழில் (‘புதுவசந்தம்’- தேசியகலை இலக்கியப் பேரவையின் 36வது ஆண்டுமலர் 26.12.2009) எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ள, “முருகையன் சிலர் நினைக்கிறதுபோல புதுக் கவிதையாளராகத் தன்னை காட்ட முயன்றவருமல்ல. தன்னாற் செம்மையாகச் சொல்ல முடியுமான செய்யுள் வடிவங்களில் சொல்ல வேண்டியன நிறைய இருக்கையில் அதற்கு வெளியே வேறுசெய்யுள் வடிவங்களைத் தேடுகிற தேவை அவருக்கு இருந்ததில்லை” என்ற இக்கூற்றினால் முருகையனும் புதுக்கவிதையை நேசித்தவர் அல்லர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மஹாகவியின் ‘தேரும் திங்களும்’ என்ற தலைப்பிலான கவிதையின் ஒருபகுதியைப் பார்ப்போம்.
“நில்!”என்றான் ஓராள்
“நிறுத்து!”என்றான் மற்றோராள்
“புல்”என்றான் ஓராள்
“புலை”என்றான் இன்னோராள்
“கொல்”என்றான் ஓராள்
“கொளுத்து”என்றான் வேறோராள்
கல்லொன்றுவீழ்ந்து
கழுத்தொன்றுவெட்டுண்டு
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு
சில்லென்றுசெந்நீர் தெறித்து
நிலம் சிவந்து
மல்லொன்றுநேர்ந்து
மனிசர் கொலையுண்டார்”
இக்கவிதை வரிகளின் சந்தம் – ஓசை, ‘கமரொ’ ஒன்றினால் படம் பிடித்ததுபோல் கலவர மொன்றைக் கண்முன்னே காட்சிப்படுத்துகிறது. கவிஞர் நீலாவணனின் கவிதையொன்றைக் கவனிப்;போம்.
‘கதிர் பொறுக்குகின்றாள்’ எனும் கவிதை.
“கதிர் பொறுக்குகின்றாள் – வயல்
காட்டிலேகுனிந்துவள்ளி
கதிர் பொறுக்குகின்றாள்!
விதிர் விதிர்க்கவெயிலில் நின்று
வினைமுடிக்குமுழவர் கண்டு
சதிரெனக் களிக்கநின்று
சாய்ந்துசாய்ந்துமுன் நடந்து
கதிர் பொறுக்குகின்றாள் – வள்ளி
கதிர் பொறுக்குகின்றாள்!
புல்லுறுத்துபாதமோவெண்
புறாவின் கால் எனச் சிவந்து
நெல்சுமக்குமுழவர் நெஞ்சில்
நினைவுகோடி நிறையநின்று
கதிர் பொறுக்குகின்றாள் – வள்ளி
கதிர் பொறுக்குகின்றாள்!
சூடிரண்டையே சுமந்து
தூரெனும் இடைதுவண்டு
ஆடுகின்றதோ கைகண்டு
அஞ்சியோட அதனைவென்று
கதிர் பொறுக்குகின்றாள் – வயல்
காட்டிலே குனிந்துவள்ளி
கதிர் பொறுக்குகின்றாள்!
வயற்காட்டிலே கதிர்பொறுக்கும் வள்ளி குனிந்து குனிந்து துள்ளித்துள்ளி நடந்துபோகும் சந்தத்தை – ஓசையை இக்கவிதை வரிகள் எழுப்புகின்றன. இது நீலாவணன் கவிதைகளின் சிறப்புக்களிலொன்று. கவிதைப் பொருளின் உள்ளடக்கத்தை அல்லது கவிதை கூறும் நிகழ்வினைக் காட்சிப்படுத்தும் சந்தம் – ஓசை. இப்படியான, ‘கவிதை’க்கே உரித்தான சந்தங்கள் புதுக்கவிதைகளில் இல்லை. பெரும்பாலான புதுக்கவிதைகள் வாக்கியத்தை முறித்துப் பின் வரிசையிலே வைத்தெழுதிய ஆக்கியதால வந்த சொல்லடுக்குகளாகவே உள்ளன.
எது எப்படியிருப்பினும், பலதரப்பட்ட விமர்சனங்களையும் கடந்து “புதுக்கவிதை” என்பது இன்று தமிழ் இலக்கிய உலகில் அங்கீகரிக்கப்பெற்ற இலக்கிய வடிவமாகிவிட்டது. அது வேறுவிடயம். அதற்குள் நுழைய நான் விரும்பவில்லை. ஆனால் இது “பா” இலக்கியத்திற்குள் வகைப்படுத்தக் கூடியதல்ல. எனவே கவிஞர் காசி ஆனந்தனின் ஆய்வு முடிவின்படி உரைநடை இலக்கியவடிவமான “பொழிச்சல்” எனும் இலக்கியமாக இதனை வகைப்படுத்தலே பொருந்தும்.
அதேவேளை, வார்த்தை ஜாலங்கள் கவிதையாகிவிடாது. அவ்வார்த்தை ஜாலங்களில் தோற்றம் காட்டும் சந்தங்கள் – ஓசைகள் போலியானவையே. அவற்றில் உயிர்ப்பு இல்லை. திரைப்பாடலாசிரியர் கவிப்பேரரசு (?) வைரமுத்துவின் கவிதைகள் பெரும்பாலும் வார்த்தை ஜாலங்களே. அவற்றில் போலித்தன்மைகளே வெளிப்படுகின்றன. உண்மையான கவிதை தரும் ஓசையின்பம் உள்ளத்தையும் செழுமைப்படுத்தி உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கக்கூடியது. எனவே உண்மையான கவிதையை அடையாளங்கண்டு அதுதரும் ஓசையின்பத்தைத் துய்த்து மகிழ்வோம்!
![]()
