கட்டுரைகள்

எழுத்து, எழுத்தாளன் மற்றும் எழுத்தாளனின் மனநிலை!… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

என் வயதையொத்தவர்கள் நான் சொல்லப் போகும் திரைப்படத்தை அறிந்திருப்பீர்கள். அல்லது வயதைப்பற்றி நினைக்காதவர்கள் கேள்விப்பட்டாவது இருப்பீர்கள். சரி சுற்றி வளைக்காமல் சொல்லி விடுகிறேன். பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பதுதான் அந்த திரைப்படம். அதற்காக பானை பிடித்தவள் எல்லாம் பாக்கியசாலியாகி விடமுடியுமா?

அதுபோலத்தான் எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் ஆகிவிடமுடியாது. எழுதிவிட்டதால் தெரிந்தோ தெரியாமலோ தம்மை எழுத்தாளர்கள் என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறோம். அதிலும் நாம் ஒன்றிரண்டு நூல்களை எழுதி வெளியிட்டதாலே தம்மை பெரிய எழுத்தாளர்கள் என்று எண்ணவும் செய்கிறோம்.

தமிழ்நாட்டில் சில திருமணங்களில் தடபுடலான விருந்துகள் நடக்கும். விருந்து முடிந்ததும் மொய் எழுதாமல் சென்று விடமுடியாது. அதுபோல் சில நூல் வெளியீட்டு விழாவிலும் நூல் வாங்காமல் சென்றுவிட முடியாது. ஒரு எழுத்தாளனின் நூல் தானாகவே விற்க வேண்டுமேயன்றி வாங்கும் சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடாது.

இன்னும் சொல்லப் போனால் ஒரு எழுத்தாளனின் நூல் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கவேண்டும். நூல் வெளிவந்ததும் விற்று தீர்ந்துபோய் அடுத்த பதிப்புக்காக பதிவு செய்து காத்திருக்க வேண்டும். மறுபதிப்பு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. முதற்பதிப்பிலாவது விற்பனையில் ஒரு இலக்கை எட்டியிருக்க வேண்டும்.

முதற்பதிப்பிலும் அச்சிடப்படும் நூல்களின் எண்ணிக்கை ஓரளவு எல்லோராலும் ஏற்கும்படியான அளவில் இருக்க வேண்டும். இவ்வளவுதான் விற்கும் இவ்வளவு அச்சடித்தால்போதும் என்று அச்சிட்டு வெளியடும் நூல்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட எண்ணத்தோடு வெளியிடப்படுவதால் பொதுவெளியல் எழுத்தாளனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.

ஒரு திரைப்படத்தை எத்தனை பேர் பார்ப்பார்கள் என்று எண்ணி எந்த தயாரிப்பாளரும் படம் எடுப்பதில்லை. திரைப்படத்தின் நுழைவுச்சீட்டு எல்லாம் விற்று அரங்கம் நிரம்ப வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். படம் வெளிவந்த அடுத்த சிலநாட்களுக்கு திரையரங்கின் பக்கமே செல்லமுடியாத நிலை ஏற்பட வேண்டும் என்றே ஒவ்வொரு தயாரிப்பாளனும் இயக்குனரும் படத்தை தயாரிப்பார்கள்.

தமிழில் திரைப்படங்கள் வெளிவந்ததில் இருந்து இன்றுவரை எத்தனை திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் எத்தனை திரைப்படங்கள் இன்றுவரை மக்கள் மனதில் இடம்பெற்று நிலைத்திருக்கின்றன. அதை இயக்கிய இயக்குனர்களில் எத்தனைபேர் இன்றுவரை மக்கள் நினைவில் நிற்கிறார்கள். இதை அப்படியே எழுத்துலகிலும் பொருத்திப் பார்க்கலாம்.

நடந்த நிகழ்வு ஒன்றைச் சொல்கிறேன். மெல்பனில் எழுத்தாளர் ஒருவரின் இலக்கிய சொற்பொழிவு நிகழ்வொன்று நடந்தது. அங்கு வைக்கப் பட்டிருந்த நூல்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. நான் ஒரு நூல் வாங்க அனுகியபோது ஏமாற்றமே மிஞ்சியது. நானும் அவரது நூலுக்கு பதிவுசெய்து காத்திருக்கிறேன். இன்னும் எனக்கு கிடைத்தபாடில்லை.

இன்னும் ஒரு சான்றைத் தருகிறேன். ஒரு திரைப்படத்தில் எத்தனையோ நடிகர் நடிகைகள் நடித்திருப்பார்கள். ஆனால் எத்தனை நடிகர் நடிகைகள் நம் நினைவுக்கு வருகிறார்கள்? எல்லோரும் பொதுவாக நடிகர்களாக இருந்தாலும் நம் மனதில் அத்தனைபேரும் படிவதில்லை அல்லவா?
அதேபோல் எழுத்தாளர்கள் புதிது பதிதாக முளைத்தாலும் அத்தனைபேரும் மக்கள் மனதில் இடம் பிடிப்பதில்லை.

காலங்காலமாக மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத அளவுக்கு எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? கடந்த ஐம்பது ஆண்டுகளில் எழுதிய சிறந்த எழுத்தாளர்களில் எத்தனை பேர் நம் நினைவுக்கு வருகிறார்கள்? போகட்டும், கடந்த இருபத்தியைந்து ஆண்டுகளில் எழுதிய எழுத்தாளர்களில் எத்தனை பேர் நம் நினைவுக்கு வருகிறார்கள்?

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இன்னும் இருபத்தியைந்து ஆண்டுகள் கழித்து இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் எத்தனை பேர் மக்கள் நினைவில் நிற்பார்கள் என்பது யாருக்கு தெரியும். அதுபோல் இன்று வெளியிடப்படும் நூல்களும் இன்னும் இருபத்தியேந்து ஆண்டுகளில் எந்த இடத்தில் இருக்கும் என்பதை யார் அறிவார்?

ஆதலால் நானும் ஒரு எழுத்தாளன் என்று சமூகத்தில் அடையாளப் படுத்திக் கொள்ளவேண்டும் என்றே நாம் எழுதுகிறோம். அதேபோல் நானும் ஒரு நூலாசிரியன் என்று சொல்லிக்கொள்ளவும் எதையாவது ஒன்றை எழுதி அதை நூலாக்கி வெளியிடுபவர்களும் உண்டு. ஆனால் ஒரு எழுத்தாளனையோ ஒரு நூலாசிரியனையோ சமூகம்தான் தீர்மானித்து அடையாளப் படுத்துகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இன்று செயற்கை நுண்ணறிவு மூலம் எத்தனையோ நூல்கள் உருவாகி வருகின்றன. இது கதையின் கருவையே உருவாக்குவதோடு பல ஆலோசணைகளையும் கதையை நகர்த்தும் உத்தியையும் கூட திட்டமிட்டுக் கொடுக்கின்றன. இதைத் தவிர்க்க இயலாது. மாட்டு வண்டி, நாடகம், பாவைக்கூத்து போன்றவையெல்லாம் இன்று நடைமுறையில் பயன்பாட்டில் உள்ளதா?

நாம் வேண்டுமானால் நமது மன ஆறுதலுக்காக நான் ஒரு எழுத்தாளன் நான் ஒரு நூலாசிரியன் என்று சொல்லிக் கொள்ளலாம். அப்படி சொல்லிக் கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் அதை அங்கீகரமாக எடுத்துக் கொள்ள முடியாது. நமக்கு ஆராய்ச்சியாளனுக்கு வேண்டிய அறிவு இருக்கலாம். அதற்காக நாமே நம்மை முனைவராக நினைத்துக் கொள்ள முடியாதல்லவா?

இன்றைய காலகட்டத்தில் நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்களாக வலைத்தளங்களின் ஊடாக புற்றீசல் போல் எழுத்தாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் எத்தனைபேர் காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகுகள் போல் மறைந்து போவார்களோ சொல்ல முடியாது.

இன்றைய தலைமுறை மக்களிடம் இரண்டு தலைமுறைகளுக்கு முன் சிறந்த எழுத்தாளர்களால் எழுதி வெளிவந்த மிகச் சிறந்த நூல்களையோ நவீனங்களையோ படித்திருக்கிறீர்களா என்று கேட்டுப் பாருங்கள் மிகவும் குறந்த சதவிகிதமே இருப்பார்கள். இதை ஒரு சோதனையாக செய்து சோதித்துப் பாருங்கள்.

ஏதாவது ஒரு சிறந்த எழுத்தாளரால் எழுதப்பட்டு சிறந்த நூல்கள் என்று இரண்டு தலைமுறைக்கு முன் போற்றபட்ட நூல்களை தேர்ந்தெடுங்கள். அந்த நூல்களை இன்று எத்தனை பேர் வாங்கிச் சென்று படித்திருக்கிறார்கள் என்று ஒரு நூலகத்தில் கேட்டுப்பாருங்கள். கீழ் உதட்டை கீழ்நோக்கி வளைப்பார்கள். ஏனென்றால் அவையெல்லாம் நாலடியார் திருக்குறள் போன்ற நீதி நூல்கள் அல்ல.

அல்லது நம் மரபையும் அதன் தொன்மையையையும் அறிந்து கொள்ள சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்களோ அல்ல. ஏதோ அன்றைய காலகட்டத்தில் அன்றைய மக்களால் பொழுது போக்கு இல்லாத காலத்தில் வானொலியை மட்டும் நம்பியிருந்த மக்களுக்கு ஒரு மாற்று வடிகாலாக இருந்தது என்பதுதான் உண்மை.
இதை நான் அனுபவத்தின் வாயிலாகவே சொல்கிறேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் தொடர்வண்டியில் பயணித்தபோது பெரும்பாலான பயணிகளிடம் ஏதாவது ஒரு நூல் இருக்கும். இன்று நான் கழுத்தை நன்றாக நீட்டி வளைத்துப் பார்த்தும் கழுத்தில் சுளுக்கு வந்ததுதான் மிச்சம் எவர் கைகளிலும் எந்த நூலையும் காணமுடிவதில்லை. ஏனென்றால் காலச்சூழலின் மாற்றமே இதற்கெல்லாம் காரணம்.

மக்களின் வாசிப்பு குறைந்துவிட்டது. வாசிப்பு குறைந்ததால் அவர்கள் முட்டாள்களும் அல்ல. வாசிப்பவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்றும் அல்ல. இன்று குமுதம், ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவிலா இருக்கிறது. போதாக்குறைக்கு வாசிப்புக்கு தீனி போடும் விதமாக தீபாவளி மலர் என்று குமுதம் ஆனந்தவிகடன் போன்ற இதழ்கள் மலர் வெளியிடுவார்கள்.

இன்று அவர்கள் ஏன் அப்படிப் பட்ட மலர்களை வெளியிடுவதில்லை.காரணம் காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொண்டார்கள். மலர்கள் வருவதில்லை என்பதால் மக்களை குறைத்து மதிப்பிட முடியுமா? அவர்களின் தேடல் வேறு விதமாக காலத்திற்கேற்ப மாறிவிட்டதுதான் உண்மை.இதனால் எழுத்தாளனின் மனநிலையும் மாறி விட்டது.

மிகவும் பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகள் இரண்டு அங்குலம் வரை கனமுடைய பலபாகங்களாக அன்றைய காலகட்டத்தில் வந்தன. அவற்றை சாய்வு நாற்களில் சாய்ந்தபடி மணிக்கணக்காக படித்துக் கொண்டிருப்பார்கள். அவற்றை படித்து முடிக்க வாரங்கள் பல கூட ஆகும். அவற்றை இன்று யாராவது வாசிக்கிறார்களா?

வாசிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவற்றை எல்லாம் மூன்றே மணிநேரத்தில் பார்க்கும்படுயாக காட்சி ஊடகங்களே வந்து விட்டன. ஆடிக்காற்றில் அம்மியே பறக்கிறபோது நாமெல்லாம் எம்மாத்திரம்? முன்பெல்லாம் பிரபல எழுத்தாளர்களின் நூல்கள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருந்தது போல் இன்று வருவதில்லை. தங்கள் இருப்பைக் காட்டும் முகமாக எப்போதாவது ஒன்றிரண்டு நூல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த பின்னணியில் இன்று தோன்றிய புது எழுத்தாளர்கள் நூல் வெளியிடுவதில் பலவற்றை உற்று நோக்கவேண்டும். நமது நூல்கள் மக்களிடம் பெரிய வரவேற்பை ஏற்படுத்துகிறதா? அல்லது நமக்குத் தெரிந்தவராகப் போய்விட்டாரே என்று நூல் வாங்குகிறார்களா? என்பதையெல்லாம் புரிந்து கொள்ளவேண்டும். ஆதலால் நானும் ஒரு எழுத்தாளர் நானும் நூல் வெளியிடுகிறேன் என்று நினைத்தால் அந்த மனநிலை சரிதானா என்பதை அவர்களே உய்த்து உணரவேண்டும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *