சமஷ்டி ஆட்சி அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு வாக்குறுதியாக வேண்டும்!… ராஜ் சிவநாதன்.

ராஜ் சிவநாதன் (Raj Sivanathan)
பல தசாப்தங்களாக, இலங்கை அரசியல்வாதிகள் ‘சமஷ்டி’ என்ற சொல்லைக் காட்டிச் சிங்கள வாக்காளர்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். அதிகாரப் பகிர்வு நாட்டின் ஒற்றுமைக்கும் சிங்கள மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று அவர்கள் சித்தரித்தனர். அந்த அச்சம் அதிகாரத்தை மத்திய அரசிடம் குவிக்க உதவியது. ஆனால் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாட்டைத் தீர்க்கவோ, தேசிய அபிவிருத்திக்கு நிலையான அடித்தளத்தை அமைக்கவோ அது உதவவில்லை.
அதிகாரம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது, முடிவுகளை எடுக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது என்பவை குறித்து இலங்கையில் வெளிப்படையான கலந்துரையாடல் தேவை. ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை ஆள வேண்டுமா என்பது இங்கு எழும் கேள்வியல்ல. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் குடிமக்கள், தங்கள் வாழ்வைப் பாதிக்கும் முடிவுகளில் உண்மையான பங்காற்ற முடியுமா என்பதே கேள்வி.
இலங்கைத் தமிழர்கள் இந்த நாட்டுக்கு அந்நியமானவர்களும் அல்ல, சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலானவர்களும் அல்ல. இந்தத் தீவில் அவர்களுக்கு ஆழமான வேர்கள் உண்டு. ஏனைய சமூகங்களைப் போலவே இந்த நாடும் அவர்களுக்குச் சொந்தமானது. தமிழ்நாட்டுடனான பண்பாட்டு மற்றும் குடும்ப உறவுகளால் அவர்களின் இலங்கையர் அடையாளம் எந்த வகையிலும் குறைந்துவிடுவதில்லை. எல்லை கடந்த உறவுகள் இருப்பதை வைத்து ஒரு சமூகத்தின் நாட்டுப்பற்றைச் சந்தேகிக்க முடியாது.
இருப்பினும், காணி, மொழி, பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை குறித்த தமிழர்களின் கவலைகள் பல சந்தர்ப்பங்களில் அரசுக்கான அச்சுறுத்தல்களாகவே கருதப்பட்டுள்ளன. அந்தக் கவலைகளுக்குத் தீர்வு கிடைக்காதபோது அவநம்பிக்கை வளர்கிறது. அந்த அவநம்பிக்கை நல்லிணக்கத்திற்கும் முதலீட்டிற்கும் ஒத்துழைப்பிற்கும் தடையாக மாறுகிறது. அரசு ஒரு சமூகத்தின் நலன்களைப் பாதுகாத்து, மற்றொரு சமூகத்தின் நலன்களைப் புறக்கணிப்பதாக மக்கள் கருதும் வரை, சமூகங்களுக்கு இடையிலான பதற்றம் ஒரு தேசியப் பிரச்சினையாகவே தொடரும்.
அதிகாரப் பகிர்வு அனைத்துப் பிராந்தியங்களுக்கும் பயனளிக்க வேண்டும்
அனைத்துப் பிராந்தியங்களும் அதிகாரப் பகிர்வின் பயனை நடைமுறையில் உணரச் செய்வது ஒரு வழி. இலங்கை தற்போதுள்ள மாகாண சபைகளை வலுப்படுத்தலாம் அல்லது வேறொரு பிராந்திய ஆட்சி அமைப்பைப் பரிசீலிக்கலாம். எந்த அமைப்பைத் தேர்ந்தெடுத்தாலும் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தெளிவான பொறுப்புகளும் போதிய வளங்களும் வழங்கப்பட வேண்டும். பிராந்திய நிர்வாகங்கள் தங்கள் மக்களுக்குப் பொறுப்புக்கூறவும் வேண்டும்.
இந்தக் கருத்தைச் சிங்கள வாக்காளர்களிடம் நேரடியாக எடுத்துச் சொல்லலாம். அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு மட்டும் வழங்கப்படும் சலுகையல்ல. உள்ளூர் முன்னுரிமைகளைக் கவனிக்கவும், முதலீட்டை ஊக்குவிக்கவும், சேவைகளை மேம்படுத்தவும், செயற்பாடுகளின் பெறுபேறுகள் குறித்து உள்ளூர்த் தலைவர்களிடம் கணக்குக் கேட்கவும் சிங்களப் பெரும்பான்மை மாகாணங்களுக்குத் திறன் தேவை. பிராந்திய ஆட்சி தங்கள் சமூகங்களுக்குப் பயனளிப்பதை மக்கள் நேரில் காணும்போது, அதிகாரப் பகிர்வை ஓர் இனத்தின் கோரிக்கையாக மட்டும் பார்க்காமல், ஒரு ஜனநாயக வழிமுறையாகப் புரிந்துகொள்வது எளிதாகலாம்.
‘முதலில் சிங்கள மக்களுக்கு அதிகாரம், அதைத் தொடர்ந்து தமிழர்களுக்கு’ என்ற சொற்றொடரின் பின்னணியில் உள்ள வாக்குறுதி இதுதான். அதிகாரப் பகிர்வின் பயன்களைச் சிங்கள மக்களும் அனுபவிக்க வேண்டும். வேறொரு சமூகத்துக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட அமைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு எவரிடமும் கோரக் கூடாது. பெரும்பான்மைச் சமூகம் தயாராகும் வரை தமிழர்களின் உரிமைகளை ஒத்திவைக்கலாம் என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. நியாயமான அரசியலமைப்புத் தீர்வு ஒவ்வொரு சமூகத்தையும் ஒவ்வொரு பிராந்தியத்தையும் ஒரே நேரத்தில் பாதுகாக்க வேண்டும்.
அவுஸ்திரேலிய அனுபவமும் இலங்கைக்கேற்ற ஆட்சி முறையும்
அவுஸ்திரேலியாவின் அனுபவத்திலிருந்து இலங்கை பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அதன் மாதிரியை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. அவுஸ்திரேலிய அரசியலமைப்பு சமஷ்டி அரசையும் மாநில அரசுகளையும் நிறுவி, அவற்றுக்கு இடையிலான உறவை வரையறுக்கிறது. மக்கள் தொகை எவ்வளவாக இருந்தாலும் அந்நாட்டின் செனட் சபையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சமமான பிரதிநிதித்துவம் உண்டு. இதன் மூலம் தேசிய முடிவுகளில் நாடு முழுவதிலுமுள்ள மக்களின் நலன்களோடு மாநிலங்களின் நலன்களும் பிரதிபலிக்கின்றன. (அவுஸ்திரேலிய நாடாளுமன்றம், “The Constitution”, “About the Senate”.)
இலங்கைக்குத் தனித்துவமான வரலாறும் புவியியலும் அரசியல் யதார்த்தங்களும் உள்ளன. இருப்பினும், அந்த அடிப்படைக் கொள்கை இலங்கைக்கும் பொருந்துகிறது. தேசிய அரசுக்கும் பிராந்திய அரசுகளுக்கும் இடையில் அரசியலமைப்பின் மூலம் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டபடியே ஒரு நாடு ஒன்றுபட்டிருக்க முடியும். எந்த அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்க வேண்டும், எவை பிராந்திய மட்டத்தில் பயன்படுத்தப்பட வேண்டும், இரு ஆட்சி மட்டங்களுக்கும் இடையில் எழும் முரண்பாடுகள் எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பவற்றைத் தீர்மானிப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் இலங்கையில் ஏற்கெனவே மாகாண சபைகள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு மாகாண சபையை அமைப்பதற்கு அரசியலமைப்பு வழிவகுக்கிறது. அவற்றுக்குரிய பொறுப்புத் துறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. (இலங்கை நாடாளுமன்றம், “13th Amendment”.) அதிகாரப் பகிர்வு நடைமுறையில் எவ்வாறு செயற்படுகிறது என்பதை மக்கள் மதிப்பிட முடிய வேண்டும். தெரிவுசெய்யப்பட்ட சபைகளால் சேவைகளை வழங்க முடிகிறதா, அவற்றின் நிதி நிர்வாகம் வெளிப்படையாக உள்ளதா, அவற்றிடம் மக்கள் கணக்குக் கேட்க முடிகிறதா என்பவற்றின் அடிப்படையில் அந்த மதிப்பீடு அமைய வேண்டும். அதற்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதோடு, தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகங்களுக்குக் கிடைக்கும் அதிகாரங்களையும் நிதி வளங்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.
நாடாளுமன்றத்தின் இரண்டாவது சபை, தேசியச் சட்டங்களை உருவாக்கும் செயற்பாட்டில் பிராந்தியங்களுக்கு வலுவான குரலை வழங்கக்கூடும். சட்ட முன்மொழிவுகளை ஆராயவும் ஆலோசனைகளைப் பெறவும் உதவும் வகையில் அந்தச் சபை வடிவமைக்கப்பட வேண்டும். அரசியல் ஆதரவாளர்களுக்குச் சலுகை வழங்கும் இன்னொரு அரங்கமாக அது மாறிவிடக் கூடாது. அதேவேளை, இலங்கை நிறைவேற்று அதிகாரத்தின் அளவுக்கதிகமான குவிப்பைக் குறைத்து, நாடாளுமன்றத்தையும் சுயாதீன நிறுவனங்களையும் ஜனநாயகக் கண்காணிப்பையும் வலுப்படுத்த வேண்டும்.
தேர்தல் உத்திகளுக்கு அப்பாற்பட்ட தேசிய விவகாரங்கள்
அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அரசாங்கத்துக்கு வாய்ப்புள்ளது. வாக்காளர்களில் ஒரு பகுதியினரைச் சமாதானப்படுத்துவதற்காக மட்டும் தேசிய விவகாரங்களை அரசாங்கம் கையாளக் கூடாது. குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக ஒவ்வொரு முன்மொழிவையும் எதிர்க்கட்சிகள் சீர்குலைக்கவும் கூடாது. அரசியலமைப்புத் தீர்வுக்கு நீடித்த கலந்துரையாடலும் பொதுமக்களின் பங்கேற்பும் ஆட்சி மாறிய பின்னரும் தொடரக்கூடிய ஆதரவும் தேவை.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் தீவிரமடையும் வேளையில், புதிதாகப் பதவியேற்கும் அரசாங்கம் தனது பதவிக்காலத்தை முன்னைய ஆட்சியாளர்களைப் பழிவாங்குவதில் செலவிடக் கூடாது. ஆட்சி மாறினாலும் தொடரக்கூடிய, அனைத்துப் பிராந்திய மக்களையும் நாட்டின் மீட்சிக்குப் பங்களிக்க ஊக்குவிக்கும் கொள்கைகள் இலங்கைக்குத் தேவை. காணி, காடுகள், கடலோரப் பகுதிகள், சமய விவகாரங்கள் தொடர்பில் நியாயமாகவும் வெளிப்படையாகவும் முடிவெடுப்பதும், இராணுவத்தின் வசம் இன்னமும் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும்.
அதிகாரப் பகிர்வு மட்டும் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவிடாது. ஆனால் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொழும்பில் குவிக்கும்போது பிராந்தியத் தேவைகள் கவனிக்கப்படாமலும் உள்ளூர் வாய்ப்புகள் பயன்படுத்தப்படாமலும் போகலாம். அதிகாரம் பெற்றுப் பொறுப்புக்கூறும் பிராந்திய அரசுகள், தங்கள் மக்களுக்குப் பொருத்தமான தொழில்துறைகளையும் உட்கட்டமைப்பையும் சேவைகளையும் மேம்படுத்த உதவலாம். மற்றப் பிராந்தியங்களைப் போலவே வடக்கும் கிழக்கும் நாட்டின் மீட்சிக்கு முழுமையாகப் பங்களிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
அதிகாரப் பகிர்வால் வலுப்பெறும் தேசிய ஒற்றுமை
தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதால் தங்களுடைய உரிமைகள் குறைந்துவிடும் என்று சிங்கள மக்கள் அஞ்ச வேண்டிய நிலை இருக்கக் கூடாது. தமது கண்ணியத்தையும் நலன்களையும் பாதுகாத்துக்கொள்ள, மாறி மாறிப் பதவிக்கு வரும் மத்திய அரசுகளின் நல்லெண்ணத்தைத் தமிழர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் இருக்கக் கூடாது. அரசியலமைப்பு உத்தரவாதங்கள் இரு சமூகங்களுக்கும் அரசின் மீதும் ஒருவர் மீது மற்றவருக்கும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
ஒற்றுமையையும் அதிகாரப் பகிர்வையும் ஒன்றுக்கொன்று எதிரான தெரிவுகளாகக் கருதத் தேவையில்லை. மக்களின் பரந்த இணக்கத்தால் நிலைக்கும் ஒற்றுமைக்கும், அதிகாரக் குவிப்பின் மூலம் பேணப்பட்டாலும் தீராத குறைகளால் பாதிக்கப்படும் ஒற்றுமைக்கும் இடையில்தான் தெரிவு உள்ளது. அவுஸ்திரேலியா போன்ற சமஷ்டி ஆட்சி முறைகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, தனது தேவைகளுக்கேற்ற ஏற்பாடுகளை இலங்கை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய அதிகாரங்கள், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிராந்திய அமைப்புகள், மத்திய மட்டத்தில் நியாயமான பிரதிநிதித்துவம், நிறைவேற்று அதிகாரத்துக்கான வரம்புகள் ஆகியவை அந்த ஏற்பாடுகளில் இடம்பெற வேண்டும்.
சமஷ்டி முறையில் பகிரப்படும் அதிகாரம் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் சமமாக உரியதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிராந்தியமும் பொறுப்புடன் நிர்வாகம் செய்யக்கூடியதாகவும் ஒவ்வொரு சமூகமும் இந்த நாட்டில் தனக்குரிய இடம் உறுதிப்படுத்தப்பட்டதாக உணரக்கூடியதாகவும் இருந்தால், அதிகாரப் பகிர்வு இலங்கையை வலுப்படுத்தும். மக்கள் அச்சமின்றி ஒன்றாக வாழ்வதற்கும் அது சிறந்த வாய்ப்பை உருவாக்கும்.
![]()