நாமலைக் கண்டு அரசு அஞ்சுகிறதா?; சாகர காரியவசம் கேள்வி

கொலை குற்றவாளிக்கு வழங்கப்படும் சுதந்திரம்கூட எதிர்க்கட்சியின் செயல்பாட்டுத் தலைவரான நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்படாமல் இருக்கின்றது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை என்பது ஒரு ஜனநாயக நாடு. இதுபோன்ற நாடுகளில் மக்களின் சுதந்திரம் என்பது நமது அரசியலமைப்பின்படி, மக்களுக்கு உள்ள பறிக்க முடியாத உரிமையாகும். அப்படியிருக்க, இந்த நாட்டில் அந்த மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க உள்ள முக்கியமான விடயம் நாட்டின் சட்டமாகும். எனவே, ஒரு நாட்டின் சட்டம், ஏதேனும் ஒரு நாட்டின் சட்டம் முறையாகவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் செயல்படுத்தப்பட்டால், அந்த நாடு சுதந்திரமான ஜனநாயக நாடாக மாறும்.
இப்போது நாமல் ராஜபக்ஷவின் சுதந்திரம் மிகவும் இழிவான முறையில் பறிக்கப்பட்டு வருகிறது. அது மிகவும் கவலைக்குரிய நிலையாகும். இந்த நாட்டில் எந்தவொரு குடிமகனுக்கும் உள்ள உரிமையை நாங்கள் பார்க்கிறோம். இந்த நாட்டில் கொலை செய்த ஒருவருக்குக் கூட மூன்று மாதங்களுக்குப் பிறகு பிணை பெறும் உரிமை உள்ளது. இந்த நாட்டில் எந்தவொரு கொடிய குற்ற வகையைச் சேர்ந்த குற்றத்தைச் செய்த ஒருவருக்கும், தமது வழக்கு விசாரணை முடியும் வரை நிரபராதியாகக் கருதப்படும் அனுமானமும், பிணை பெறும் உரிமையும் உள்ளது.
ஆனால், அரசாங்கத்திற்கு இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள, எதிர்க்கட்சியின் செயல்பாட்டுத் தலைவரான நாமல் ராஜபக்ஷவுக்கு மட்டும் அந்த உரிமையை வழங்காதது ஏன் என்ற கேள்வியை இந்த நாட்டு மக்கள் கேட்கிறார்கள். இந்த அரசாங்கம் அதிகாரத்தைப் பெற்றதே, முந்தைய ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் திருடினார்கள், அந்தத் திருட்டை நிறுத்தினால் இந்த நாடு சொர்க்கபுரியாக மாறும், இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும், பொருட்களின் விலை குறையும் போன்ற பொய்யான கற்பனைக் கதைகளைச் சொல்லித்தான். சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாட்டில் தொடர்ந்து நாட்டுக்காக உழைத்த தலைவர்களைப் பொய்யாக திருடர்கள் என்ற முத்திரை குத்தி, முழு மக்களையும் ஏமாற்றினார்கள்.
வாழ்க்கையில் ஒரு கோப்பிக் கடையில் காசாளராகக் கூட வேலை செய்திராத மனிதர்கள், இன்று நாட்டில் ஜனாதிபதிப் பதவிகளையும், அமைச்சர் பதவிகளையும் வகிக்கும்போது, அவர்களில் எவருக்கும் ஒரு நாட்டை எவ்வாறு நடத்துவது என்று தெரியாது. எனவே, அவர்களின் சிந்தனை குறுகிய சிந்தனையாக உள்ளது. மிகவும் குறுகிய சிந்தனைக்குள்ளேயே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு விருப்பமான விதத்தில்தான் இந்த நாட்டில் விடயங்கள் நடைபெற்று வருகின்றன என்றார்.
![]()