குண்டர்களின் பேச்சைக் கேட்டு ரோஹிங்யா அகதிகளைத் திருப்பி அனுப்பாதீர்கள்; ரவூப் ஹக்கீம் எம்.பி.கோரிக்கை

அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கையாக , அந்தந்த நாளுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளும் கொள்கையே பின்பற்றப்படுகிறது. ராேஹிங்யா அகதிகள் விடயத்தில் அரசாங்கம் ஒருசில குண்டர்களின் பேச்சைக்கேட்டு, செயற்படாமல் சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு செயற்பட வேண்டும்என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்
மியன்மாரிலிருந்து இலங்கைக்கு தப்பிவந்த ராேஹிங்யா அகதிகள் கடந்த 2வருடங்களாக முல்லைத்தீவு கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச பாதுகாப்பை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இல்லாத இவர்களின், மனித உரிமைகள் பாரியளவில் வரையறுக்கப்பட்டுள்ளதாக தற்போது எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதேநேரம் அவர்களை மீண்டும் மியன்மாருக்கு திருப்பி அனுப்புவது தொடர்பிர் மியன்மார் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலை நிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஏனெனில் மியன்மாரில் ராேஹிங்யா சமூகத்துக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதனால் இன அழிப்புக்கு ஆளாகிய அந்த தரப்பினருக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பளிப்பது, இன அழிப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பங்காளிகளான இலங்கை உள்ளிட்ட அனைத்து அரசுகளின் பொறுப்பு . அதேபோன்று பலவந்தமாக காணாமலாக்கப்படும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க கூடிய எந்தவொரு நாட்டுக்கும் இலங்கையில் இருக்கின்ற எந்த ஒரு நபரையும் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது என குறித்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ராேஹிங்யாக அகதிகளை அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப எங்களுக்கு முடியாது. ஆனால் அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை அனுப்புவதற்கே முயற்சித்து வருகிறது.
அதனால் இந்த விடயத்தில் அரசாங்கம் ஒருசில குண்டர்களின் பேச்சைக்கேட்டு, செயற்படாமல் சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் . அதேநேரம் முல்லைத்தீவு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள அந்த அகதிகளை, ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பினர் பார்வையிட அரசாங்கம் அனுமதிக்கும் என நாங்கள் நம்புகிறோம். அகதிகளுக்குரிய அனைத்து அந்தஸ்துகளும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், அவர்களுக்கான அரச மற்றும் சர்வதேச பாதுகாப்பு கிடைக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
இன்று பலஸ்தீனில் இஸ்ரேல் பாரியளவில் இனப்படுகொலை செய்துவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக தீரமானம் நிறைவேற்றப்படும்போது, அதற்கு ஆதரவாக அரசாங்கம் கைகளை உயர்த்துவதுடன் மாத்திரம் நின்றுவிட முடியாது.
மேலும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி தலைவராக இருந்த இம்ரான் கானுக்கு தற்போது ஏற்ப்டுள்ள பாதிப்பு தொடர்பில், எமது அனுதாபத்தை தெரிவிக்கும் சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பிபெரேரா கொண்டுவந்தபோது, அதனை அரசாங்கம் நிராகரித்தது. பாகிஸ்தான் எமக்கு மிகவும் நெருங்கமான நட்பு நாடு. எங்களுக்கு அனைத்து சந்தர்ப்பத்திலும் உதவி செய்த நாடு, அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எமது நட்பு நாடாக இருக்கும்போது, அவர்களால் தவறு ஒன்று ஏற்படும்போது, அதனை சுட்டிக்காட்டுவது எமது கடமை. அதனை செய்யுங்கள்.
அன்று கிழக்கு பாகிஸ்தான் மோதலின்போது, பாகிஸ்தான் ராணுவ விமானங்களை எமது விமான நிலையத்தில் தரையிறக்க சிறிமாவோ பண்டாரநாயக்க இடமளித்தார். அப்போது எங்களுக்கு இந்தியாவுடன் நெருங்கிய நற்புறவு இருந்துவந்தது. அதற்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இந்தியா அதுதொடர்பில் பெரியளவில் எடுத்துக்கொள்ளவில்லை. இதுதான் நட்புறவி்ன் அடையாளம். ஆனால் இம்ரான் கான் பிரதமராக இருக்கும்பாது எமக்கு செய்த உதவிகளுக்கு நன்றியுடையவர்களாக இருக்கும்பொருட்டு, அவர் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில், அவருக்கு எமது அனுதாபத்தை தெரிவிப்பதற்கு பிரேரணை ஒன்றை கொண்டுவரும்போது, அரசாங்கம் அதற்கு இடமளிக்காமல் நிராகத்துள்ளது.
எனவே அரசாங்கத்தின் வெளிநாட்டுக்கொள்கை, அந்தந்த நாளுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளும் கொள்கையே பின்பற்றப்படுகிறது. இலக்கு இல்லாமல் இருக்கிறது என்றார்.
![]()