இந்தியா

த்ரிஷா பேரவை; தமிழ்நாடு எங்கே செல்கிறது? இதுதான் அரசியலா? அண்ணாமலை கொந்தளிப்பு

திருநெல்வேலியில் த்ரிஷா பேரவை இயக்கம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தமிழக இளைஞர்கள் சினிமா மோகத்தில் இருந்து விலகிவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

படித்த மாவட்டத்திலுள்ள மக்களே இவ்வாறு சினிமா நட்சத்திரங்களின் பின்னால் செல்வது வெட்கக்கேடு என்று விமர்சித்த அவர், தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் இத்தகைய கலாச்சாரத்தை யார் கொண்டு வந்தது என்றும் இரண்டு அல்லது மூன்று படங்கள் அல்லது 10 படங்களை நடித்தவர்கள் தமிழ்நாட்டின் தலைவர்களாக கருதப்படுவதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

எதற்கெடுத்தாலும் சினிமா என்ற கலாச்சாரத்தை யார் கொண்டு வந்தார்கள் என்பதை திமுக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றம் தேவை என்று வலியுறுத்தியே தமிழக வெற்றி கழகத்தை மக்கள் தெரிவு செய்தார்கள் என்றும் இருப்பினும் அக்கட்சியும் அரைத்த மாவையே அரைப்பதாகவும் அவர் சாடினார்.

மேலும் தமிழகத்தை பொறுத்தவரையில் மக்களை மையப்படுத்தக்கூடிய புதிய அரசியல் தேவைப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *