பலதும் பத்தும்

கொழும்பில் சொத்து விலைகள் உச்சம்

கொழும்பில் காணிகள், வீடுகள் மற்றும் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலைகள் 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரண மக்களின் உண்மையான வருமானத்தையும் மீறி சொத்துக்களின் விலைகள் அதிகரித்துள்ளமை, நாட்டின் நிதி அமைப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

மத்திய வங்கியின் 2026ஆம் ஆண்டுக்கான நிதி ஸ்திரத்தன்மை மறுஆய்வு அறிக்கையில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளுக்காக வங்கிகள் வழங்கியுள்ள கடன்களின் மொத்தப் பெறுமதி 2 டிரில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

கட்டுமானச் செலவுகள் உயர்ந்துள்ளமை மற்றும் அண்மைக்காலம் வரை நிலவிய குறைந்த வட்டி வீதங்கள் காரணமாக, காணிகள் மற்றும் வீடுகளைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட் சந்தையில் சொத்துக்களின் விலைகள், குடும்பங்களின் உண்மையான வாங்கும் திறனை விடவும் அதிகமான நிலையை எட்டியுள்ளதாக நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2026ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, இலங்கை வங்கிக் கட்டமைப்பினால் வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 13.7 சதவீதம் ரியல் எஸ்டேட் துறையுடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது.

இவற்றில் 80 சதவீதத்துக்கும் அதிகமான கடன்கள் வீடுகளைக் கொள்வனவு செய்தல், கட்டுமானப் பணிகள் மற்றும் குடியிருப்புத் திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.

காணிகளின் சந்தை மதிப்பு
2026ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை 8.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வணிக வங்கிகளின் கடன் வட்டி வீதங்களும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, வங்கிக் கடன்கள் மூலம் வீடுகள் மற்றும் காணிகளைக் கொள்வனவு செய்தவர்கள் மட்டுமன்றி, பாரிய ரியல் எஸ்டேட் திட்டங்களை முன்னெடுக்கும் மேம்பாட்டாளர்களும் மாதாந்தக் கடன் தவணைகளைச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.

சொத்துக்களின் விலைகள் அதிகரிக்கும்போது, தங்களிடம் அதிக செல்வம் இருப்பதாக உரிமையாளர்கள் கருதக்கூடும்.

ஆனால், சந்தையில் சொத்துக்களின் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்தால், அவர்களின் சொத்துக்களின் பெறுமதி குறையும் அபாயம் காணப்படுகிறது.

குறிப்பாக, அடமானம் வைக்கப்பட்டுள்ள காணி அல்லது வீட்டின் தற்போதைய சந்தை மதிப்பைவிட, அதற்காகப் பெறப்பட்ட வங்கிக் கடனின் நிலுவைத் தொகை அதிகமாக இருக்கும் சூழ்நிலை உருவாகலாம்.

இவ்வாறான நிலைமை சொத்துக்களை வாங்கியவர்களுக்கும், கடன் வழங்கிய வங்கிகளுக்கும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ரியல் எஸ்டேட் சந்தையின் வளர்ச்சியை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *