மார்பில் குத்திய கத்தரிக்கோல் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 வயது சிறுமி!

குஜராத் மாநிலத்தில் 3 வயது சிறுமியின் மார்பில் குத்தியிருந்த கூர்மையான கத்தரிக்கோலை அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
கட்ச் பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் தம்பதியின் மகளான இந்தச் சிறுமி, கடந்த மாதம் தனது 5 வயது அண்ணனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கத்தரிக்கோல் மார்பில் குத்தி பலத்த காயமடைந்தார்.
முதலில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பின்னர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவசர அறுவைச் சிகிச்சை செய்து, முக்கிய உடல் உறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் கத்தரிக்கோலை அகற்றி சிறுமியின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துடன், கத்தரிக்கோல் சற்று வேறு திசையில் குத்தியிருந்தால் முக்கிய இரத்தக் குழாய்கள் மற்றும் மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
மேலும் சிறு குழந்தைகள் விளையாடும் பொருட்களைப் பெற்றோர் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
![]()