உலகம்

ஆஸ்திரேலியா சிட்னியில் உச்சகட்ட பாதுகாப்பு: பின்னணி என்ன?

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கடந்த ஆண்டு பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற கொடூர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், கனரக ஆயுதங்களை ஏந்திய பொலிஸார் வீதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆயுதப் பதிலளிப்புப் பிரிவின் (Armed Response Command – ARC) கீழ், விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் நீண்ட தூரத் துப்பாக்கிகளை ஏந்தியவாறு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான ஆயுதங்களுடன் பொலிஸார் வீதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது சிட்னி மக்களில் பெரும்பாலானோருக்கு புதிய காட்சியாக அமைந்துள்ளது.

விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலும் இந்த அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுதம் தாங்கிய நபர்களின் தாக்குதல்கள் உள்ளிட்ட பாரதூரமான அச்சுறுத்தல்களைத் தடுத்தல், அச்சுறுத்தல்களைத் தணித்தல் மற்றும் அவசரமாகப் பதிலளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம், பிரபலமான பொண்டி கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாடும் நிகழ்வில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவில் சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான பெருந்தொகை உயிரிழப்புகளை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாக இது பதிவானது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சட்டங்களில் விரிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், ஆயுதம் தாங்கிய பொலிஸார் வீதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது குறித்து கருத்துத் தெரிவித்த உள்ளூர் ஒருவர், இந்தக் காட்சி தமக்கு ஒருவித அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றனர். அந்தத் துப்பாக்கிகள் மிகப் பெரியவை” என அவர் ஏபிசி செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆயுதங்களுடன் பொலிஸாரைக் காண்பது தமக்குப் பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துவதாக மற்றொரு பெண் தெரிவித்துள்ளார்.

சிட்னி முழுவதும் தெளிவாகக் காணக்கூடிய வகையில், விசேட வாகனங்களுடன் நீண்ட தூரத் துப்பாக்கிகளை ஏந்தியவாறு இந்தப் பிரிவு செயற்படும் என நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உயிர்களைப் பாதுகாப்பதே இந்தப் பிரிவின் அடிப்படை நோக்கமாகும்” என துப்பறியும் பொலிஸ் கண்காணிப்பாளர் அன்ட்ரூ எவன்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 14ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் தாக்குதல், யூத எதிர்ப்புவாதத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அதிகரித்ததுடன், பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான அரசாங்கத்துக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

புதிய பொலிஸ் நடவடிக்கையை யூத சமூகத்தினர் வரவேற்றுள்ளனர். இந்தப் பிரிவில் இறுதிக்கட்டமாக 250 அதிகாரிகள் வரை இணைக்கப்படவுள்ளனர்.

எனினும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஏனைய தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டமை உள்ளிட்ட மொத்தம் 78 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவரது தந்தையான 50 வயதுடைய சாஜித் அக்ரமும் துப்பாக்கியுடன் பொண்டி கடற்கரையில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சம்பவ இடத்திலேயே பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *