உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் அசாத் மௌலானா ஆகியோர் 2020ஆம் ஆண்டு அஹுங்கல்லை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அறைகளுக்கான கட்டண ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு, குறித்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கோட்டை நீதவான் பசன் அமரசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 04ஆம் திகதி நீதிமன்றத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முறையாக முன்னெடுப்பதற்கு குறித்த ஆவணங்கள் அவசியம் என சி.ஐ.டி அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், சுரேஷ் சலே உள்ளிட்ட மேலும் மூவரின் உதவியுடன் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் சி.ஐ.டி அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, முன்னாள் பிரதி காவல்துறைமா மா அதிபர் பிரசாத் ரணசிங்க, பிரதி காவல்துறைமா மா அதிபர் நிஷாந்த சொய்சா மற்றும் அசாத் மௌலானா ஆகியோரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சி.ஐ.டி நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.
மேலும், சுரேஷ் சலே நான்கு மாதங்களுக்கும் மேலாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டுப் பயணத் தடை
எனினும், அவர் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவது தொடர்பில் நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும்பட்சத்தில், அவர் மீண்டும் இலங்கைக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் எனவும் சி.ஐ.டி அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
அவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்படாவிட்டால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
![]()