இலங்கை

செம்மணி விசாரணையை முற்றாக நிறுத்துவதற்கு அரசு பெரும் சதி!;  சோமதேவா முழுத் துணைபோகின்றார், அவர் இனி இதில் சம்பந்தப்படக் கூடாது 

செம்மணி விசாரணைகளை மூடுவதற்கு, “இது குற்றங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்ட உடல்கள் அல்ல” என்ற முடிவுக்கு வந்து, விசாரணையை முற்றிலுமாக மூடுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்கின்ற சதிக்கு முழுமையாகத் துணைபோகின்ற வகையில்தான் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் புது வியாக்கியானம் அமைந்துள்ளது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

“பேராசிரியர் ராஜ் சோமதேவா செம்மணி தொடர்பாக வெளியிட்டுள்ள நான்காவது இடைக்கால அறிக்கையை நாங்கள் அடியோடு நிராகரிக்கிறோம். அவர் தான் தயாரித்த முதல் மூன்று அறிக்கைகளில் குறிப்பிட்ட ஆய்வுகளைத் தலைகீழாக மாற்றி, அவ்வாறு மாற்றுவதற்கு எந்தவிதமான நியாயங்களையும் குறிப்பிடாமல், இதுவரை செம்மணி தொடர்பாக எவராலும் சுட்டிக்காட்டப்படாத ஒரு புதிய காரணத்தைக் கூறியுள்ளதனால் நாங்கள் அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். ஏனெனில், அது திட்டவட்டமாக ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் வெளியிடப்பட்ட அறிக்கையாகவே நாங்கள் கருத வேண்டியுள்ளது.

குறிப்பாக, அந்தச் செம்மணியில் அமைந்துள்ள புதைகுழிகள் அனைத்தையும் கருத்தில் கொள்ளும்போது, அவை ஒரு தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்திருக்கின்ற அல்லது புதைக்கின்ற உலகளாவிய உதாரணங்களோடு ஒத்துப்போகலாம் என்றொரு கருத்தை அவர் புதியதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்கு முன்னர், கடந்த வாரம் அவர் வெளியிட்ட அதே அறிக்கையில், புதைகுழி சம்பந்தமாக ஒரு முடிவான கருத்தைத் தெரிவிக்க முடியாத நிலையிலேயே இந்த விசாரணைகள் இதுவரை உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவற்றை ஒருபுறம் குறிப்பிட்டுவிட்டு, மறுபுறம் இத்தகைய அபாண்டமான விடயத்தைக் குறிப்பிடுவதே இங்குள்ள மிகப்பெரிய முரண்பாடாகும். ஏனெனில், அவருடைய இந்தக் கருத்து 1996 ஆம் ஆண்டிலிருந்து செம்மணி தொடர்பாகப் பேசப்பட்ட அனைத்துக் கருத்துக்களையும் விட முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

செம்மணி தொடர்பாக இதற்கு முன்னர் பேராசிரியர் கிரியெல்ல தொடர்பான முதலாவது வழக்கின்போது 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கையாக இருக்கலாம்; காலம் காலமாக மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகளாக இருக்கலாம்; செம்மணி புதைகுழி அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டங்களில் வந்த அறிக்கைகளாக இருக்கலாம் அல்லது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் செம்மணி தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையாக இருக்கலாம் — அவை அனைத்திற்கும் மாறாகவே இவருடைய இந்தக் கருத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவருடைய அறிக்கையில், கண்டுபிடிக்கப்பட்ட உடல்களில் கிட்டத்தட்ட 96 சதவீதமானவை ஆடைகள் இன்றிப் புதைக்கப்பட்டிருக்கின்றன என்ற விடயத்தைக் குறிப்பிடுகிறார். அந்த ஆடைகள் காலப்போக்கில் ஏற்பட்ட இயற்கை அழுத்தங்கள் காரணமாகக் கரைந்துபோயிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

ஆடைகள் இல்லாமல் இருப்பதை வைத்துக்கொண்டு, இதனைத் திட்டமிட்டு ஒரு குற்றச் செயலை மூடிமறைப்பதற்காகச் செய்யப்பட்ட குற்றமாகக் கருதத் தேவையில்லை என்ற கருத்தை முதன்முறையாக அவர் இதிலே தெரிவித்துள்ளார்.

நான் ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், பேராசிரியர்களான ராஜன் கூல் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகியோர் அந்தந்தக் காலங்களில் வெளியிட்ட அறிக்கைகளில் செம்மணி தொடர்பாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மக்கள் ஆடைகளின்றிச் சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, உடைகள் இல்லாத நிலையிலேயே செம்மணிக்குக் கொண்டுசென்று புதைக்கப்பட்டனர் என்ற தகவல் வெளிப்படையாகவும் பரவலாகவும் பேசப்பட்ட ஒன்று. இத்தகைய சூழலில், இந்த அறிக்கையில் செம்மணி புதைகுழி தொடர்பாக நேரடியாகச் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் இருக்கும்போதே, அவை எல்லாவற்றையும் மூடிமறைத்து, ஒரு புதிய வியாக்கியானத்தைச் சொல்வதற்கும் அதை நியாயப்படுத்துவதற்கும் இதுவரை எந்தவொரு இடத்திலும் ஆதாரம் இல்லாத ஒன்றை அவர் குறிப்பிட்டிருப்பதை நாங்கள் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறோம்.

செம்மணி விசாரணைகளை மூடுவதற்கு, “இது குற்றங்களின் அடிப்படையில் புதைக்கப்பட்ட உடல்கள் அல்ல” என்ற முடிவுக்கு வந்து, அதை முற்றிலுமாக மூடுவதற்கு அரசாங்கம் மேற்கொள்கின்ற சதிக்கு முழுமையாகத் துணைபோகும் வகையிலேயே ராஜ் சோமதேவாவின் இந்த புதிய வியாக்கியானம் அமைந்துள்ளது என்பதை நாங்கள் பகிரங்கமாகச் சொல்ல விரும்புகிறோம்.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் செம்மணிக்குச் சென்று, முழுமையான விசாரணையை நடத்தி, உடல்கள் ஆடைகள் இன்றி இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. குற்றவியல் துறையில் அனுபவம் பெற்றவர்கள், உடல்கள் புதைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்க்கும்போது அது குற்றங்களின் அடிப்படையில் அமைந்த புதைகுழி என்ற கருத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.

சர்வதேச உதவிகள் நேரடியாகச் சம்பந்தப்படாமல் இந்த விசாரணையை முடிக்க முடியாது என்றும், அந்த அளவுக்கு இதில் குறைபாடுகள் இருக்கின்றன என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம், பேராசிரியர் ராஜ் சோமதேவா தொடர்ந்தும் இந்த செம்மணி தொடர்பான விசாரணையோடு சம்பந்தப்பட முடியாது. அவர் தனது நம்பகத்தன்மையை முற்றிலுமாக இழந்துவிட்டார். அவ்வாறானதொரு நிலையில், அவர் இதுவரை செய்துள்ள காரியங்களைக் கூட நாங்கள் இனி கேள்விக்குட்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் மனித எலும்புக்கூடுகளை மீட்கும்போது என்னென்ன விடயங்களைச் செய்தார், எவற்றை மூடிமறைக்க முற்பட்டார் என்பது குறித்தும் நாங்கள் கேள்வி எழுப்ப வேண்டிய இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஏனெனில், எந்தவித நிபுணத்துவமும் பொறுப்புணர்ச்சியும் இன்றி இந்த நான்காவது அறிக்கையில் அவர் நடந்துகொண்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

செம்மணி தொடர்பான விசாரணையில் சம்பந்தப்பட்டுப் பணியாற்றும் சட்டத்தரணிகள் கூட இந்த அறிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தங்களது ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர்.

நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களும் நீதியை நாடும் அனைத்துத் தரப்பினரும், ராஜ் சோமதேவாவின் இந்த அறிக்கைக்குப் பிறகு அவர் தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபட முடியாது என்ற நிலைப்ாட்டிற்கு வந்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான தரப்பினர் அனைவரும் இன்றைக்கு இந்த அரசாங்கத்தின் செம்மணி விசாரணையில் நம்பிக்கையிழந்துவிட்டனர் என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த அரசாங்கம் செம்மணி தொடர்பான விசாரணையை சர்வதேசப் பொறுப்பில் நடத்துவதற்கு இடம் கொடுக்காமல் இருந்தால், இதற்கு முன்னர் இக்குற்றங்களைச் செய்து மூடிமறைக்கச் செயற்பட்ட அரசாங்கங்களுக்கும் இதற்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

ஏனெனில், செம்மணி என்பது எங்களது மக்களுக்கு அந்த அளவுக்கு மிக முக்கியமானதொரு விடயம். தமிழர்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்குக் கண்ணெதிரே இருக்கக்கூடிய, கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களோடு உள்ள ஒரு சான்றாகும். இந்த விடயத்தில் இந்த அரசாங்கம் நேர்மையாக நடந்துகொள்ளத் தவறினால், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலும் இதற்கு முன்னிருந்த அரசாங்கங்களின் இனவாதப் போக்கோடு ஒத்துப்போகிறது என்ற முடிவிற்கே நாங்கள் வர வேண்டியிருக்கும்” என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *