அரியாலை-கொழும்புத்துறை கடலோர இராணுவச் சாவடியில்; இராணுவம் பிடித்தவர்களின் உடல்களா புதைக்கப்பட்டன?

யாழ் இராணுவ நடவடிக்கையின் போது வன்னிக்கு இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் திரும்பி வரும் போது அரியாலை-கொழும்புத்துறை கடல் பகுதிக்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் தடுத்து வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுவர்.அவ்வாறு சோதனை செய்யப்படும்போது சந்தேகமிருந்தால் அவர்களை இராணுவம் வெளியில் விடுவதில்லை.எனவே இந்த சோதனை சாவடியில் தடுத்து வைக்கப்பட்ட பலர் செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளனரா? என்ற சந்தேகம் எமக்குள்ளது .
எனவே செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் தொல்லியல் நிபுணரான ராஜ் சோமதேவவின் அறிக்கை உண்மைக்கு புறம்பான அறிக்கையாகவே இருக்கின்றது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ)ஜனநாயகத்தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி. யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற விசர்நாய்க் கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் யானை, நாய்கள் போன்ற மிருகங்களுக்கு உள்ள முக்கியத்துவம் மனிதர்களுக்கு கிடையாது. மனிதர்களுக்கு எந்தவொரு உத்தரவாதமும் கடந்த கால அரசாங்கங்களால் செய்யப்படவில்லை. இப்போதும் அது உறுதிப்படுத்தப்படாமல் இருக்கின்றது.
குறிப்பாக செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் தொல்லியல் நிபுணரான ராஜ் சோமதேவவின் அறிக்கை உண்மைக்கு புறம்பான அறிக்கையாகவே இருக்கின்றது. அவர் மண்ணை பரிசோதிக்கும் தகுதியையே கொண்டுள்ளார். அங்கு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலானோரின் எச்சங்களை விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுக்கு கொண்டு சென்று என்ன நடந்தது என்று குறிப்பிட முடியும். ஆனால் ராஜ் சோமதேவவின் அறிக்கையை கொண்டு எந்தவொரு முடிவுக்கும் நாங்கள் வர முடியாது.
போர் காலத்தில் பல இடங்களில் முப்படையினரின் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை தாண்டி வந்தாலே அவர் உயிருடன் இருப்பதாக கூற முடியும். போர் காலத்தில் பல சம்பவங்களை நாங்கள் கண்ணூடாக கண்டுள்ளோம். யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு புலம்பெயர்ந்து சென்ற மக்கள் திரும்பி வரும் போது அரியாலை-கொழும்புத்துறை கடல் பகுதிக்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் சோதனை செய்யப்படுவர். மக்கள் தனியாக அன்றி குழுவாகவே வருவார்கள். அவர்களை தடுத்து வைத்தே இராணுவத்தினர் விசாரணை நடத்துவர்.
10 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைத்து விசாரணை நடத்தப்படுவர். அவர்களில் ஒருவர் இருவர் சந்தேகத்திற்கிடமானவர்களாக இருந்தால்,அவர்களுடன் வந்த ஏனையவர்களையும் வெளியில் விடுவது ஆபத்தானது என்று படையினர் கருதியதால் அவர்களையும் விடமாட்டார்கள். அவ்வாறான சூழலே அன்றைய காலத்தில் இருந்தது.இந்நிலையில், இந்த சோதனை சாவடியில் தடுத்துவைக்கப்பட்ட பலர் செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளனரா? என்று சந்தேகிக்கின்றேன். இந்த விடயத்தை இவ்விடத்தில் பதிவு செய்கின்றேன்.
செம்மணி என்பது தமிழ் பேசும் மக்களின் படுகொலையின் ஆதராமாகவும், உண்மையை கண்டறிய வேண்டும் என்ற விடயமாகவும் இருக்கின்றது. இந்த மனிதப் புதைகுழியில் சிறுவர்கள், பெரியவர்கள் என்று எல்லோரும் புதைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பொம்மையுடனும் மீட்கப்பட்டுள்ளன.சூட்டுக் காயங்களுடனும் எச்சங்கள் உள்ளன. இதனால் குறிப்பிட்ட அறிக்கையை உண்மைக்கு புறம்பான அறிக்கையாகவே பார்க்கின்றோம்.போர் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுக்கின்றோம். இவ்வாறான நிலைமையில் இந்த அறிக்கை உள்ளக விசாரணையில் உண்மைகள் மறைக்கப்படுகின்றது.
இதனாலேயே எமது இனப்பிரச்சினை மற்றும் மனித உரிமை மீறல்கள் அனைத்தும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றோம். எமது மக்களின் அழிவுக்கு காரணமானவர்கள் மற்றும் அழிக்க நினைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விசாரணைகளை உள்ளக விசாரணையாக அரசாங்கம் கூறுகின்றதை ஏற்க முடியாது. அதற்கு செம்மணி புதைகுழி அறிக்கையை சுட்டிக்காட்ட முடியும். இதில் அரசாங்கம் இறுதி முடிவுக்கு வரக் கூடாது. இதில் பகுப்பாய்வை மேற்கொண்டு, என்ன நடந்தது என்று சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கின்றேன் என்றார்.
![]()