இலங்கை

வெளிநாடுகளில் இலங்கையின் 236 சிவப்பு எச்சரிக்கை குற்றவாளிகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் வழிநடத்தலுடன் 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு இதுவரையில் 136 மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.அதேவேளை சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது வெளிநாடுகளில் 236 இலங்கை குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ளார்கள். இவர்களில் 97 பேர் பாதாளக் குழுக்களின் உறுப்பினர்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமைஇடம் பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட எம்.பி. காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது வெளிநாடுகளில் 236 இலங்கை குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ளார்கள். இவர்களில் 97 பேர் பாதாளக் குழுக்களின் உறுப்பினர்கள் .சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புக்கு அமைவாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் தலைமறைவாகியுள்ள நாடுகளின் விபரத்தை வெளிப்படுத்த முடியாது. இரகசியங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் வழிநடத்தலுடன் 2020 ஆம் ஆண்டு 2 மனித படுகொலைகளும், 2021 ஆம் ஆண்டு 4 மனித படுகொலைகளும், 2022 ஆம் ஆண்டு 23 மனித படுகொலைகளும், 2023 ஆம் ஆண்டு 16 மனித படுகொலைகளும், 2024 ஆம் ஆண்டு 42 மனித படுகொலைகளும், 2025 ஆம் ஆண்டு 29 மனித படுகொலைகளும், 2026 ஆம் ஆண்டு இதுவரையில் 18 மனித படுகொலைகளும் என்ற அடிப்படையில் 136 மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

1977 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க கைதிகள் பரிமாற்றம் சட்டம் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அமைவாக வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *