பிரான்ஸில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலும் இளைஞர்கள் வெறியாட்டம் – நகைக்கடைகள் சூறையாடப்பட்டன

பிரான்ஸில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலும் போராட்டக்காரர்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பாரிஸ் மற்றும் மார்சேய் நகரங்களில் இரவு வேளையில் அமைதியான போராட்டங்கள் மோதலாக மாறியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 4,10,000 பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக உள்துறை அமைச்சகம் கணிப்பிட்டுள்ளது. இருப்பினும் தொழிற்சங்கங்கள் இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என தெரிவித்துள்ளன.
தலைநகர் பாரிஸின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 1,10,000 பேர் பங்கேற்ற பிரதான போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள், வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மைக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
இந்த பிரதான போராட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து அமைதியான சூழல் மாறியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த சுமார் 500 இளைஞர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசியுள்ளனர்.
அவர்களைக் கலைக்க, கலகத் தடுப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர்ப் பீரங்கிகளையும் பயன்படுத்தியதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேய்யில், இளைஞர்கள் பெரிய உலோகத் தகடுகளை இழுத்து வந்து தெருவை மறித்ததாகவும், குப்பைகளுக்கு தீவைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம் இரண்டு நகைக் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. லியோன், போர்டோ மற்றும் கிரெனோபிள் ஆகிய நகரங்களிலும் மோதல்கள் வெடித்துள்ளமை குறிப்படித்தக்கது.
![]()